
ராகவன் நல்ல உயரம். ஆறடி. ஆனால் அவன் மனைவி கஸ்தூரி ஐந்தடிதான். எப்போதும் கஸ்தூரி அவனுடன் வெளியே வரத் தயங்குவாள். அவன் எங்காவது கூப்பிட்டால் மறுத்து விடுவாள்.
ராகவனுக்கு அவள் மீது கோபம் கோபமாக வரும். ஏன் நான் கூப்பிட்டால் எங்கும் வர மாட்டேனென்று சொல்கிறாள். அவள் தனக்கு ஏற்படுகிற தாழ்வு உணர்ச்சியை அவளிடம் தெரிவித்தது இல்லை.
தவிர்க்க முடியாமல் அவள் அவனுடன் சென்றாலும், அவனுடன் சேர்ந்து நடக்க மாட்டாள். ஆரம்பத்தில் இதை உணராத ராகவன் நடக்கும் போது அவளைக் கூப்பிட்டு தன்னுடன் நடந்து வருமாறு சொல்வான்.
அவள் அவ்வாறு அவனுடன் சென்றாலும் ஒரு ஸ்டெப் பின் தங்கித்தான் நடந்து வருவாள்.
ராகவனுக்கு இது தெரியாமல் அவளைக் கோபித்துக்கொள்வான்.
பெண் பார்க்க வரும்போது கஸ்தூரிக்கு ராகவனைப் பிடிக்கவில்லை. அவள் முகம் சுளித்தாள். அவன் உயரம்தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. தனக்குத் தகுதியானவன் இல்லை என்று நினைத்தாள். அப்பாவிடம் அவனைப் பிடிக்கவில்லை என்று கூறினாள். அப்பா அதை அலட்சியப்படுத்தினார்.
“என்ன காரணத்தினால் அவனை வேண்டாம்னு சொல்றே,” என்று கேட்டார்.
“உயரம்தான். அவர் ஆறடி. நான் ஐந்தடி,”என்றாள் கஸ்தூரி.
“ஆனா..அவனுக்கு ஒன்னைப் பிடித்திருக்கே,”
ராகவன் அவள் அழகைப் பார்த்து விரும்பி திருமணம் செய்து கொண்டான். உயரத்தைப் பற்றி அவன் பொருட்படுத்தவில்லை.
உண்மையில் கஸ்தூரியின் அப்பா நல்ல உயரம். அவள் அம்மா ரொம்ப குள்ளம்.
கஸ்தூரிதான் குள்ளமே தவிர, அவள் தங்கை வனிதா அப்பா மாதிரி நல்ல உயரம். கஸ்தூரி அம்மாவைக் கொண்டிருக்கிறாள். ராகவன் பெண் பார்க்க வந்தவன், அவள் தங்கை வனிதாவைப் பார்த்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லப் போகிறான் என்று நினைத்தாள் கஸ்தூரி. அப்படிச் சொன்னால் அவனுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தாள்.
குள்ளமாக இருந்தாலும் பரவாயில்லை அவளைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறிவிட்டான். ராகவன் வீட்டாரும் பெண்ணு ரொம்ப குள்ளமாக இருக்கிறாளே என்று அபிப்ராயப்பட்டார்கள். ராகவன் பிடிவாதமாகக் கஸ்தூரியைத்தான் மனம் செய்துகொள்வேன் என்று சொல்லிவிட்டான்.
கஸ்தூரி படித்திருந்தாளே தவிர வேலைக்குப் போகவில்லை. ஏன் முயற்சி செய்யக்கூட இல்லை. ராகவனுக்கு வேலைக்குப் போகாத பெண்தான் வேண்டும் என்று விரும்பினான்.
தன்னுடைய குள்ளம் கஸ்தூரி தாழ்வு மனப்பான்மையை வளர்த்து விட்டது. அவள் அம்மாவிடம் அடிக்கடி சண்டைக்கு வருவாள். ‘நான் ஏன் உன்னை மாதிரி குள்ளமாக இருக்கணும்,’ என்று.
‘இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. உன் அப்பா கூட என்னைக் குள்ளமென்று வெறுக்கலை,’
‘நீ நடந்து அப்பாவுடன் போகும்போது அந்த வித்தியாசம் தெரியும்,’
சிலசமயம் அவள் அப்பா, வனிதா, கஸ்தூரி நடந்து போகும்போது வனிதா மட்டும் அவள் அப்பாவுடன் சேர்ந்து நடந்து வருவாள். அவள் அப்பா இதைக் கண்டுபிடித்து விட்டார். அவர் கஸ்தூரியுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார்.
அப்படி நடந்து வரும்போது அப்பா அவளிடம் கேட்டார் :
‘உன் பிரச்சினை என்ன?’
‘உயரம்தான்,’ என்றாள் கஸ்தூரி.
‘நீ உயரமாக இல்லாவிட்டால் என்ன?’
கஸ்தூரி அதற்குப் பதில் சொல்லவில்லை. “நான் ஏன் உன்னை மாதிரி உயரமாப் பிறக்கலை?” என்று அப்பாவை எதிர்க் கேள்வி கேட்டாள்.
“பிறக்கிறது நம்ம கையிலா இருக்கு. ஆனால் உண்மையில் வனிதாவைவிட நீதான் அழகு.”
“அம்மா உன்னை விரும்பித்தான் கல்யாணம் செய்து கொண்டாளா?”
“அம்மா விரும்பினாளோ இல்லையோ அவளை நான் விரும்பினேன்.”
அம்மாவிடமும் ஒரு சந்தர்ப்பத்தில் இதே மாதிரி ஒரு கேள்வியைக் கேட்கவேண்டுமென்று நினைத்தாள்.
அம்மாவைத் தனியாகச் சந்திக்கும்போது இந்தப் பிரச்சினையை எடுத்துப் பேசினாள்.
அம்மா முதலில் பதில் சொல்ல வில்லை.
“இதெல்லாம் என்ன கேள்வி,” என்று அம்மா கோபப்பட்டாள்.
“அம்மா நீ சொல்லித்தான் ஆக வேண்டும்,” என்றாள் கஸ்தூரி.
தயக்கத்துடன் அம்மா சொன்னாள் : “எனக்கும் அப்பாவைப் பிடிக்கவில்லை முதலில்..அவர் உயரம் எனக்குப் பிடிக்கவில்லை..இப்படி உயரமான ஒருவருடன், குள்ளமாக நான் நிற்பது பொருத்தமில்லாமலிருக்கும் என்று தோன்றியது…என் அப்பாவிடம் உன்னை மாதிரி தெரிவித்தேன்.. என் அப்பா மறுத்துவிட்டார்…என்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று உன் அப்பா பிடிவாதம் பிடித்ததால், எங்கள் திருமணம் நடந்தது..இப்ப ஒரு குறையுமில்லை..”என்றாள் அம்மா.
“அது சரி அம்மா..நான் ஏன் உன்னை மாதிரி குள்ளமா பிறந்தேன். வனிதா மாதிரி உயரமா பிறக்கக்கூடாதா?”
“அது நம்ம கையில இல்லை. நீதான் வனிதா விட ரொம்ப அழகு..நல்ல நிறம்..”என்றாள் அம்மா.
கஸ்தூரியின் இந்தக் கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை. அம்மாவுடன் வெளியே போவாள். ஆனால் அப்பா கூப்பிட்டால் வெளியே வரமாட்டாள்.
அதேபோல் அவள் கணவன் ராகவன் கூப்பிட்டால் வரவே மாட்டாள். எதாவது வாங்க வேண்டுமென்றால் தனியாப் போய் வாங்கி வருவாள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் குள்ளம் அவளுக்குப் பிரச்சினையாக இருக்கிறது என்று ராகவன் உணர்ந்துகொண்டான். அவளிடம் தனியாகப் பேச வேண்டுமென்று நினைத்தான். அல்லது ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் அவளை அழைத்துக் கொண்டு போகலாமா என்று யோசித்தான். கஸ்தூரியிடம் இந்தப் பிரச்சினையைத் தவிர வேற பிரச்சினை இல்லை.
ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவளுடன் தனியாகப் பேச.
அவள் ஒப்புக்கொண்டாள். அவனுடன் சேர்ந்து வர அவளுக்கு என்னமோ மாதிரி இருக்கிறது என்று சொன்னாள்.
“நீ ஏன் இதுமாதிரி நினைக்கிறே?’’ என்று அவன் கேட்டான்.
“சின்ன வயதிலிருந்து எனக்கு இந்தத் தடுமாற்றம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. யாராவது என்னை விட உயரமாக இருப்பவர்களை எனக்குப் பார்க்கவே பிடிக்காது..அந்த இடத்திலேயே நிற்க மாட்டேன்.”
“உனக்குத்தான் தாழ்வு மனப்பான்மை. யாரும் உயரமெல்லாம் பார்ப்பது கிடையாது..”
“உங்களுக்குத் தெரியாது..நான் குள்ளமாக இருப்பதைப் பார்த்து பலர் என்னைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் சிலர் குள்ளக் கத்திரிக்காய் என்று கிண்டலாகப் பட்டப் பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள். அந்த சமயத்தில் நான் பள்ளிக்கூடமே போக வேண்டாம் என்று நினைத்துக் கொள்வேன்.”
“நீ அதெல்லாம் தாண்டி வந்து விட்டாயே? உனக்குத் தெரியுமா? நீ குள்ளமாக இருந்தாலும் ரொம்ப அழகென்று..”
ராகவன் கூறிய எந்தச் சமாதானத்தையும் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் இஷ்டப்படியே விட்டுவிட்டான். எங்கும் போனாலும் அவளும் அவனும் ஒன்றாகப் போவதில்லை. அவள் மாத்திரம் தனியாகப் போய் வீட்டுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு விடுவாள்.
ராகவன் அவள் அப்பாவைத் தற்செயலாகச் சந்தித்தான். அவளுடைய பிரச்சினையை அவன் அவரிடம் குறிப்பிட்டான்.
“குழந்தையாக இருந்ததிலிருந்து இந்தப் பிரச்சினை அவளுக்கு இருக்கிறது. எப்போதுமே அவள் அம்மாவுடன் அவள் வெளியே போவாள். கல்யாணம் ஆனா சரியாயிடும் நினைச்சேன்.” என்றார் வருத்தத்துடன் அவள் அப்பா.
“இதைத் தவிர எங்களிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை. இவ்வளவு வயதுக்குப் பிறகும் அவள் குள்ளமாக இருப்பதைப் பெரிது பண்ணுவது எனக்கு கவலையாக இருக்கிறது,” என்றான் ராகவன்.
“நாம கண்டுக்காம இருந்தா…இந்தப் பிரச்சினை சரியாய்ப் போயிடும்.”
ராகவனுக்கும் அந்த நம்பிக்கை உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ராகவன் அவளை எங்கும் கூப்பிடுவதில்லை.
********
ராகவன் வெளியூர் போயிருந்தால், கஸ்தூரி அவள் அம்மாவைக் கூப்பிடுவாள். அல்லது இவள் அங்கே போய்விடுவாள்.
ஒருமுறை ராகவன் இல்லாதபோது கஸ்தூரியிடம் அவள் அம்மா கேட்டாள். : “குள்ளமாக இருக்கிறதை ஏன் பெரிதாக எடுத்துக்கொள்கிறாய்?”
“நான் பெரிதாகவே எடுத்துக் கொள்ளலை..ஆணா..உயரமானவர்களைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு மண்டி இட்டு நமஸ்காரம் செய்யணும் தோணும்..”
அவள் அம்மா அவள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டாள். இந்தப் பெண் இப்படிப் பைத்தியக்காரத்தனமா இருக்கிறாளே என்று நினைத்துக்கொண்டாள்.
பின் இந்த விஷயத்தைக் கஸ்தூரியுடன் பேசக் கூடாது என்று நினைத்தாள்.
கஸ்தூரிக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது. இந்தப் பிரச்சினையால் அவள் கணவனுடன் இணக்கமாய் இல்லையோ என்று நினைத்துக்கொண்டாள்.
இதை எப்படியாவது பெண்ணிடம் கேட்க வேண்டுமென்று தோன்றியது. அம்மா கேட்டவுடன், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று மறுத்தாள் கஸ்தூரி. கூடிய விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாகவும் சொன்னாள்.
“குழந்தைப் பிறந்தால் சரியாகிடும், கஸ்தூரி,” என்றாள் அவள் அம்மா.
“என்ன சரியாகிடும்.”
“உன் பிரச்சினை.”
அம்மா சொன்னதைக் கேட்டு வெறுமனே சிரித்தாள்.
“அந்தக் குழந்தையும் என்னைப் போல் குள்ளமாக இருந்தால் என்ன செய்வது?”
“அப்படியெல்லாம் ஆகாது,” என்று அம்மா உறுதியாகச் சொன்னாள்.
“நீ குள்ளம். நானும் குள்ளமாகத்தானே பிறந்தேன்.”
“வனிதா அதுமாதிரி பிறக்கலையே..”
“இதெல்லாம் நம் கையிலா இருக்கு.. ஆண்டவன் முடிவு பண்றான்.”
கஸ்தூரி பதில் சொல்லாமல் சிரித்தாள்.
சில மாதங்களில் கஸ்தூரியும் கரு தறித்தாள். அன்றிலிருந்து அவளுக்குப் பயம். எப்படி குழந்தை பிறக்கப் போகிறது என்று. எப்படிப் பிறந்தால் என்ன? நல்லபடியாகக் குழந்தை பிறக்கணும் என்றான் ராகவன். அன்று பூங்காவிற்கு அழைத்துச் சென்றான். அவள் விருப்பப்படியே நடந்து வந்தாள். ராகவன் இதைக் கண்டுகொள்ளவில்லை. பூங்காவில் எதாவது ஒரு இடத்தில் உட்காரலாம் என்று இருவரும் உட்கார்ந்தார்கள். உட்காரும்போது ராகவனுடன் சமமாக உட்கார்ந்திருந்தாள். அப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையும் அவளுக்கு ஏற்படுவதில்லை.
“நான் குள்ளமாகப் பிறந்து விட்டேன். என்குழந்தையும் குள்ளமாகப் பிறக்கக் கூடாது. இதுதான் சாமியிடம் என் வேண்டுகோள்,”என்றாள் கஸ்தூரி. ஆறுதலாக அவள் கையைத் தடவிக்கொடுத்தான் ராகவன். “எல்லாம் நல்லபடியாக நடக்கும்,,”
“உங்களுக்கு என்ன மாதிரி குழந்தை பிறக்க வேண்டும்.” என்று ராகவனைப் பார்த்துக் கேட்டாள்.
“பெண் குழந்தை. உனக்கு” என்றான் ராகவன்.
“ஆண் குழந்தை,” என்றாள் கஸ்தூரி.
சில தினங்களில் கஸ்தூரிக்குப் பெண் குழந்தைதான் பிறந்தது. பெண் குழந்தை பிறந்ததை எண்ணி வருத்தம் கஸ்தூரிக்கு. ராகவன் உற்சாகமாக இருந்தான்.
அவள் வீட்டிலிருந்து குழந்தையைப் பார்க்க எல்லோரும் வந்திருந்தார்கள். “நான் ஆண் குழந்தைதான் பிறக்கப் போகிறது என்று நினைத்தேன்,” என்றாள் வனிதா.
உடனே அம்மா,”எந்தவிதத் தொந்தரவுமில்லாமல் குழந்தை பிறந்ததே..ஆரோக்கியமாகக் குழந்தையும் அம்மாவும் இருக்கிறாள்,”என்றாள்.
அவளைப் பார்க்க வந்த பெண் மருத்துவர். ‘குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது,’ என்று சொன்னாள்.
“எனக்கு அது முக்கியமல்ல. குழந்தை குள்ளமாகத்தான் இருக்குமா?” என்று கேட்டாள் பெண் மருத்துவரிடம் கஸ்தூரி.
பெண் மருத்துவருக்கு ஆச்சரியமாக இருந்தது அவள் கேட்டது.
“இப்போதுதானே பிறந்திருக்கு.. குள்ளமாக இருக்குமா உயரமாக இருக்குமான்னு எப்படித் தெரியும்.”
கஸ்தூரி முகம் வாட்ட மடைந்தது. பெண் மருத்துவர் அவள் முக பாவனைகளைப் பார்த்து, குழந்தையை இன்னொரு முறை பார்த்தாள்.
“நல்ல உயரமாகத்தான் இருப்பாள்… கவலைப் படாதே.”
“எப்படிச் சொல்கிறீர்?”
“குழந்தையின் கை விரல்களும் கால் விரல்களும் நீளமாக இருக்கின்றன,”என்றாள் பெண் மருத்துவர்.
“நன்றி” என்றாள் கஸ்தூரி.
(அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருது (2024) பெற்ற கதை)
