
நான் மனிதர்களோடு அதிகம் சகவாசம்
வைத்துக் கொள்வதில்லை
ஒரு புறா அளவுக்கு கூட
ஒரு கிளி ஒரு வெட்டுக்கிளி
ஒரு செம்போத்து ஒரு கது வாளி
என் நேரத்தை கொத்தி கொத்தி தின்ன
அனுமதிப்பேன்
ஆனால் மனிதர்களை அல்ல
ஏன்
மனிதர்கள் போல அவைகள்
நேரத்தை காசு பண்ணுவதில்லை
ஒரு அசட்டுச் சிரிப்போடு மன்னிப்பும்
விடை பெறும் போது நன்றியும் சொல்லி
நினைவுகளில் புளிப்பேற்றுவதுமில்லை
இப்படித்தான்
போன வாரம் அலுவலக நண்பர்களோடு
அளவாக குடித்து விட்டு
வெட்டி நகைச்சுவைக்கு வாய் நிறைய
சிரித்துக் கொண்டு
நள்ளிரவில் நான் மட்டுமே
இந்த வீதியில் நடந்து வந்த போது
எதுவுமே நடக்காதது போல
கொஞ்சம் வாலை குழைத்துக் கொண்டு
சிநேகமாய் இரண்டு முன் பற்களை காட்டி
இரண்டு மணி நேரம் பூட்டிய வாசலில்
என்னோடு
சற்றும் சலிக்காமல் உரையாடிக் கொண்டிருந்த
எங்கள் தெரு பழுப்பு நிற சிம்மி நாயே
என் தியரிக்கு ஆகப் பெரும் சாட்சி
