அமரர் கல்கி/எஸ்.ஜி. கிட்டப்பாகல்கி வளர்த்த கலைகள்

சென்ற சனிக்கிழமை இரவு இந்திர லோகத் துக்குச் சென்றிருந்தேன். அங்கே பெரிய மோக்ளா*வா யிருந்தது. அரங்க மேடை யொன்று வெகு அழகாகச் சிங்காரித்திருந்தார்கள். சபையில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாத கூட்டம்! தேவேந்திரன், இந்திராணி சகிதமாக வீற்றிருந்தார். தேவர்கள், முனிவர்கள், தேவ மாதர்கள், ரிஷி பத்தினிகள் ஒருவர் தவறாமல் வந்திருந்தார்கள். எல்லாரும் மேடையில் திரை எப்போது தூக்கப்போகிறது என்ற ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்ததாகத் தோன்றியது.
சற்று நேரத்துக்கெல்லாம் திரை தூக்கினார்கள். அழகாக அலங்காரம் செய்து கொண்டிருந்த ஓர் இளைஞன் மேடையில் வந்து நின்று சபையோருக்கு வணக்கம் செய்தான். உடனே-“எவரனி…” என்று பாடத் தொடங்கினான்.
திடுக்கிட்டுப் போனேன். அந்தக் கணீர் என்ற குரல், அந்த அற்புதமான சாரீரம், அந்த எடுப்பு எஸ்.ஜி.கிட்டப்பாவைத் தவிர வேறு யாராயிருக்க முடியும்? என் அருகிலிருந்த தேவர்களை விசாரித்தேன். உண்மை தெரிந் தது. தேவேந்திரன் ஒரு சமயம் பூலோகத்துக்குப் போயிருந்தபோது எஸ்.ஜி. கிட்டப்பாவின் பாட்டைக் கேட்டு மனதைப்
பறி கொடுத்ததாகவும், அது முதல் அவரை எப்படியாவது தேவ சபையில் சங்கீத வித்வானாக்கி விட வேண்டுமென்று ஆசை கொண்டதாகவும், பின்னர் மதுபான அரக்கனைக் கையில் போட்டுக்கொண்டு அவன் மூலமாகவும், வேறு பல வழிகளிலும் சூழ்ச்சி செய்து பிரம்மா எழுதின எழுத்து முடிவதற்குள்ளாகவே தேவலோகத்துக்கு வரச் செய்ததாகவும் அறிந்து கொண்டேன்.
“அப்பா! இந்தத் தேவர்கள் இருக்கிறார்களே, மகா பொல்லாதவர்கள்! பழி பாவத்துக்கு அஞ்சமாட்டார்கள் போலிருக்கிறது” என்று எண்ணினனோ இல்லையோ, பூலோகத்தில் படுக்கையில் படுத்திதப்பதும், அடுத்த வீட்டில் கிராமயோனில் ‘எவரளி’ தீர்த்தனம் பாடப்படுவதும் உணர்வுக்கு வத்தன.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் ஸ்ரீமான் என்ஜி கிட்டப்பா மரணமடைந்த செய்தி பத்திரிகையில் வெளியாயிற்று,
ஸ்ரீமான் கிட்டப்பாவின் மாணத்தினால் துக்க மடையாதவர்கள் தமிழ் நாட்டில் இருக்க முடியாது. ஆனாலும் எனக்கு அது விஷயத்தில் உண்டான மகத்தான துக்கத்திற்கு ஒரு விசைவு கரரணம் உண்டு.
சீமான் கிட்டப்பாவைப் பற்றி என் இரண்டு கட்டுரைகளில் எழுதியிருந்தேன். ஒன்று 1920ஆம் வருஷத்தில் எழுதப்பட்டது. மற்றொன்று சென்ற 1932 ஆம் வருஷத்தில் எழுதப்பெற்ற “நாடகமும் பாடகமும்” என்ற கட்டுரை. இரண்டிலும் நாடக் மேடையில் ஸ்ரீமான் கி ட்டப்பாவினிடம் காணப்பெற்ற குறைகளையே பெரிதும் வற்புறுத்தியிருக்கிறேன்.
இதற்காக, ஸ்ரீமான் கிட்டப்பா என்பேரிலும் ‘விகடன்’ பேரிலும் கடுங்கோபம் கொண்டிருந்தால் அதில் வியப்புறுனதற்கு எதுமில்லை. ஏன் கேஸ் போடுவதாகக் கூடம் பயமுறுத்தியிருக்கலாம்
ஆனால் அவர் அப்படியொன்றும் செய்யவில்லை. அவர் பேரில் எனக்குச் சொந்த விரோதம் எதுவும் இல்லையென்றும், நாடகமேடைச் சீர்திருத்தம் என்னும் நல்ல நோக்கத்துடனேயே கட்டுரைகள் எழுதப்பட்டனவென்றும் அவர் உணர்ந்திருக்க வேண்டும். அத்துடன் நகைச்சுவை பெரிதும் வாய்ந்த ரஸிகர் அவர் என்பதும் நாம் அறிந்ததே.
முதல் கட்டுரையைப் படித்து ஸ்ரீமான் கிட்டப்பா சிரித்து மகிழ்ந்தார் என்பது எனக்குத் தெரியும். இரண்டாவது கட்டுரை அவருக்குச் சிறிது கோப மூட்டியதென்றும் தெரியவந்தது. ஆனால் அந்தக் கோபத்தை அவர் பிரயோகித்த முறைதான் விசேஷமானது. அதற்குப் பிறகு தாம் ஸ்திரீ வேஷம் தரிப்பதில்லையென்று அவர் தீர்மானித்திருந்தாராம், அல்லாமலும் ஆபாஸமானதென்று சந்தேகிக்கத்தக்க வார்த்தைகளைக்கூட மேடையில் உபயோகிப்பதில்லையென்றும் உறுதி கொண்டிருந்தாராம்.
“ஆனந்த விகட”னிடம் ஸ்ரீமான் கிட்டப்பா விசேஷ அபிமானம் கொண்டிருந்ததுடன் அவ்வப்போது வெளியான ‘ஆடல் பாடல்’ குறிப்புகளை ஆவலுடன் படித்து வந்தார்.
ஒரு சமயம் கும்பகோணம் மகாமகத்தின் போது, ‘ஆனந்த விகடன்’ இதழுக்காக அவர் ஒரு பிற்பகல் பூராவும் ஊர் முழுதும் அலைந்து தேடினார் என்று கேள்விப்பட்டேன்.
என்னுடைய விசேஷ துக்கத்தின் காரணம் என்ன வென்பதை நேயர்கள் இப்போது அறிந்திருப்பார்கள். ஸ்ரீமான் எஸ்.ஜி.கிட்டப்பா குறைகள் நீங்கப் பெற்று
உயர்ந்த நடிகராகப் போகிறார் என்று நம்பியிருந்தேன். அடுத்தாற்போல் அவர் சென்னையில் வந்து நாடகம் போடும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண் டிருந்தேன். அந்த மனோரதம் இனி நிறைவேறுவதற் கில்லையன்றோ?
நாடகம், சங்கீதம் இரண்டிலும் ஸ்ரீமான் எஸ்.ஜி. கிட்டப்பா தனித்தனியே மகோன்னதமான நிலையை அடைந்திருக்கலாம். சாரீர சம்பத்தில் அவருக்கிணை யானவர் இன்று தமிழ் நாட்டில் வேறொருவர் இல்லையென்பதில் ஐயம் என்ன? (சிறிது கரகரப்புத் தோன்றிய அவரது பிற்காலத்துச் சாரீரத்தை நான் சொல்லவில்லை. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால் கன்னையா கம்பெனியில் நடித்த போது அவருக்கிருந்த அற்புத சாரீரத்தையே குறிப்பிடுகிறேன்)
நடிப்புத் திறமையிலோ அவர் தற்போது தமிழ் நாடகமேடையில் நடிக்கும் யாருக்கும் பின்வாங்கிய வரல்லர். தெளிவாகவும், வார்த்தை வார்த்தையாகவும், கணீரென்று பேசும் சில நடிகர்களில் அவர் ஒருவர்.
சங்கீதத்தையும், நாடகத்தையும் சேர்த்துக் குழப்பியதால்தான் நாம் எதிர்பார்க்கக்கூடிய அளவுக்கு அவருடைய மேதைமை பிரகாசிக்கவில்லையென்பது என் அபிப்பிராயமாகும்.
ஸ்ரீமான் கிட்டப்பாவுக்கு வயது இருபத்தெட்டுதான்! அவருடைய மரணம் அகால மரணம் என்பதில் சந்தேகமில்லை.
அவர் இன்னும் பல காலம் ஜீவித்திருக்கலாம். தென்னாட்டு சங்கீதத்துக்கும், நாடகத்துக்கும் எவ்வளவோ அரிய ஊழியங்கள் செய்திருக்கலாம். புகமும் பொருளும் பெற்றுத் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் அழியாத பெயர் பெற்றிருக்கலாம்.
ஆனால் பாவி யமன்…
யமனைக் குறை கூறுவதில் என்ன பயன்? ஸ்ரீமான் கிட்டப்பாவின் அகால மரணத்திற்கு யாராவது பொறுப்பாளியென்றால், அது மதுவெனும் அரக்கனே யாகும். அவனைப் பிடித்துத்தான் தூக்கில் போட வேண்டும்.
குழந்தைப் பிராயத்தில் சங்கீதம், நாடகம் முதலிய துறைகளில் ஈடுபடுவோர்க் கெல்லாம் ஸ்ரீமான் கிட்டப்பாவின் வாழ்க்கை ஓர் ஆதர்சமாகவும், அதே சமயத்தில் ஓர் எச்சரிக்கையாகவும் பயன்படுமென்பது எனது நம்பிக்கை.
அவர் பாரத நாட்டில் மறுபடியும் பிறந்து மாசு நீங்கிய ஜோதியைப்போல் ஒளி வீசும்படியாக அருள வேண்டுமென்று பகவானைப் பிரார்த்திக்கிறேன்.