க.நா.சு. / நாணயஸ்தன்

சிதம்பரத்தில் நான் ரயிலேறும் போது வண்டியில் இரண்டே ஆசாமிகள்தான் இருந்தார்கள். அவர்களிருவரும் ஒரே ஸீட்டில் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ சுவாரசியமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
என் பையை எதிர் ஸீட்டில் வைத்தேன். விசிறிகளில் ஒன்றை என் பக்கம் திருப்பிவிட்டுக் கொண்டேன். ஆனால் விசிறி வண்டியில் இருந்த உஷ்ணத்தைப் போட்டுக் குழப்பியதே தவிர, வெய்யில் அதிகம்தான். குளுமை தரவில்லை. ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன்.
சிதம்பரம் பிளாட்பாரத்தில் கூட்டம் அதிகமாக இல்லை. வழக்கத்துக்கு விரோதமாக ரயிலும் அங்கு அரை மணிக்கும் அதிகமாக நிற்கும் போலிருந்தது. கால் மணிநேரம் வண்டியில் உட்கார்ந்திருந்தேன். உட்கார்ந்திருப்பது அலுப்பாக இருந்தது. வண்டியிலிருந்து இறங்கி, பிளாட்பாரத்தில் நாலு தடவை குறுக்கும் நெடுக்கும் நடந்தேன்.
பிளாட்பாரத்தில் எனக்குத் தெரிந்தவர்கள் யாரையும் காண வில்லை. வெற்றி சிறிதுகூடக் காணாமல் வாய் ஓயாமல் கூவிக் கொண்டே இருந்த பத்திரிகைப் பையனைக் கூப்பிட்டு இரண்டு தமிழ்ப் பத்திரிகைகள் வாங்கினேன்.
அனாவசியமான செலவு, அனாவசியமான காரண காரியமற்ற வீண் தாமதம். மனிதன் தன் ஆயுளில் பெரும்பகுதியை அனாவசியமாகப் பல காரணங்களுக்காக, அனாவசியமாகப் பல இடங்களில் காத்துக் காத்து நின்று அழித்து விடுகிறான். வாழ்வில் பெரும் பகுதியும் போனபிறகு தான் தெரிகிறது போய்விட்டதென்று.
ஒரு சிலருக்குத் தங்கள் வாழ்நாள் அனாவசியமாகக் கழிந்து விட்டது என்பது தெரியாமலே போய்விடுகிறது. அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வேறு எப்படியோ கழியப் போகிற நாட்கள் இப்படித்தான் கழியட்டுமே என்று எண்ணுபவர்கள் சிலர். அவர்கள்
தத்துவ ஞானிகள்.
மணிஅடித்து விட்டார்கள் ரயில் கிளம்பிவிடும் என்று அசட்டுத்தனமாக நம்பிக்கையுடன நான் அவசா அவசாமாக வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.
நான் அவசரப்பட்டு என்ன பலன் ரயில் அவசரப்படவில்லை.
கையிலிருந்த பத்திரிகைகளைப் புரட்டுவதும், ஜன்னலுக்கு வெளியே பார்ப்பதுமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். எதிர் ஸீட்டில் உட்கார்ந்திருந்தவர்களைக் கவனித்தேன். ஜிப்பாவும், குப்படம் அங்கவஸ்திரமும், வேட்டியும், எல்லாம் கதர் மயமாகக் காட்சி அளித்த அந்த மனிதர் எந்த உத்தியோகத்தலிருப்பவர், எந்த நிலையிலுள்ளவர் என்று தீர்மானிக்க முயன்றேன். அவர் முகத்தில் எவ்வித பாவமும் இல்லை.
மந்திரி பதவிக்கு அடுத்த பதவியிலிருந்து ஹோட்டல் ஸெர்வர் பதவி வரையில், எந்தப் பதவி வரையிலும் இருப்பவராக இருக்கலாம் அவர். அதற்கு மேல் நெருங்கிக் கண்டுகொள்ள என்னால் இயலவில்லை. இன்றைய வாழ்வின் வர்ணமின்மையின் சின்னம் அவர் என்று சொல்லலாம் என்று எனக்குத் தோன்றியது.
மற்றவரை நான் கவனிக்கத் தொடங்குவதற்குள் வண்டி கிளம்பிவிட்டது. “அப்பாடா!” என்று சட்டையைக் கழற்றிவிட்டு ஸீட்டில் சாய்ந்தேன்.
மற்றவர் முகத்தில் குமாஸ்தா என்று எழுதியிருந்தது. ரெவின்யூ போர்டு, ஸெக்ரடேரியட், அக்கவுன்டெண்டு ஜெனால், பி.டபிள்யூ.டீ. ஏதோ பெரிய ஒரு ஆபீஸில் குமாஸ்தா. குமாஸ்தாவோ, சின்னக் குமாஸ்தாவோ அது நிர்ணயிக்க முடியவில்லை. ஏதோ நடுத்தரமாக இருக்கும் போலிருந்தது. இருபதாவது வயசில் ஆபீஸிற்குள் புகுந்து, ஐம்பத்தைந்தாவது வயசில் வெளியே வருகிற ஒரு தனி ஜாதி அது. அந்த ஜாதியில் என் எதிரேயிருந்த நபருக்குப் பதினைந்து வருஷ சர்வீஸ் இருக்கும்
என்று தோன்றிற்று.
குமாஸ்தா சொல்லிக் கொண்டிருந்தார். “மனிதனுக்கு மற்றது. என்ன இருக்கிறதோ, இல்லையோ-நாணயம் வேண்டும் ஸார்” என்றார்.
அதுபற்றிக் கதர் ஜிப்பாக்காரருக்கும் சந்தேகமில்லை. “நாணயமில்லாதவன் மனிதனா” என்றார் தீர்மானமாக.
இன்றைய நாகரிகம் பொருளாதார நாகரிகம். பொருளா தாரத்தின் அடிப்படை, நாணயம்தான். சந்தேகம் என்ன?
‘ஆனால் நாணயஸ்தன் என்று சொல்லக்கூடிய மனிதனைப் பார்ப்பதே அபூர்வமாகியிருக்கிறதே ஸார்!” என்று குறைப்பட்டுக் கொண்டார் குமாஸ்தா.
ஆமாம். அவர் சொன்னபிறகுதான் எனக்கும் இது தோன்றியது. இன்றைய உலகில் நாணயஸ்தனுக்கு எங்கே போவது? மற்ற குணங்களைப் போல அதுவும் க்ஷுணமடைந்து நசித்துவிட்டது போலத்தானே இருந்தது.
கதர் ஜிப்பாக்காரர் சொன்னார்: “இருக்கா ஸார்; ஏதோ சிலபேர் அபூர்வமாக நாணயஸ்தர்கள் இருக்கா ஸார்?”
குமாஸ்தா சொன்னார்; “எங்கள் ஆபீஸர் இருக்கிறாரே, அவர் ரொம்பவும் கெட்டிக்காரர். ரொம்பவும் நாணயஸ்தர் என்று பெயர்- லஞ்சம் வாங்கமாட்டார் என்று சொல்லுவார்கள்.’
“அப்படிப்பட்டவர்களால்தான் உலகமே நடக்கிறது” என்றார் கதர் ஜிப்பாக்காரர்.
எனக்கு இந்தச் சிந்தனை ஆச்சரியத்தை விளைவித்தது. உலகம் – அதுவும் இன்றைய உலகம் நடப்பது இதற்கு நேர் எதிரான கொள்கையால்தான் என்று நான் நினைத்தேன்.
குமாஸ்தா சொன்னார்: “கேளுங்கள் ஸார்! எங்கள் ஆபீஸர் சொல்லுவார்; நான் நூறு இருநூறு கொடுத்தால் வாங்குவது கிடையாது-ஆகவே நான் லஞ்சம் வாங்காதவன் என்கிற பெயர் கிடைத்துவிட்டது. நாலாயிரம் ஐயாயிரம் என்று யாரும் என்னிடம் கொடுத்துப்பார்க்கவில்லை என்பார். கொடுத்தால் வாங்கிக் கொண்டு விடுவீர்களா என்றால் அது எப்படி இப்போது தெரியும், கொடுத்துப் பார்த்தால்தானே தெரியும் என்பார். இதைச் சொல்லிவிட்டு ஒரு சிரிப்புச் சிரித்துக் கொண்டே என்னையும், கதர் ஜிப்பாக்காரரையும் பார்த்தார் குமாஸ்தா.
“உண்மைதான், லஞ்சம் வாங்குவதென்பது பணத்தைப் பொறுத்ததுதான்” என்று ஒப்புக் கொண்டார் ஜிப்பாக்காரர்.
“ஐந்து ரூபாய் வாங்காதவன் ஐம்பது ரூபாய் வாங்குவான். ஐம்பது ரூபாய் வாங்காதவன் ஐயாயிரம் வாங்கலாம்! இது
உலகத்தில் சகஜம்தான்” என்றார் குமாஸ்தா.
“நாணயஸ்தன் என்று எல்லை கட்டுவது எப்படி?” என்று நான் கேட்டேன். இப்படி ஒரு அசட்டுக் கேள்வி கேட்டிருக்க வேண்டியதில்லை தான்-இருவர் பேசிக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் பேசாமல் இருப்பது சாத்தியமாக இல்லை;
கேட்டுவிட்டேன்.
குமாஸ்தா என்னைப் பார்த்தார். “எல்லை உண்டாகி விட்டதானால் அதை நாணயம் என்று எப்படிச் சொல்வது?” என்றார்.
‘சாதாரண மனிதனின் நாணயத்தைச் சோதிக்கிற அளவுக்குச் சாதாரணமாகச் சம்பவம் நேர்ந்துவிடுவதில்லை. நாணயம், உண்மை இரண்டும் மிகவும் சாதாரணமான குணங்கள். இவற்றை எல்லைவரை பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்கிற அவசியமே கிடையாது!” என்றார் கதர் ஜிப்பாக்காரர்!
அவர் என்ன சொன்னார் என்பது புரிய எனக்குச் சிறிது நேரம் ஆயிற்று. அசாதாரணமான கொள்கைகளை லஞ்சம் வாங்குபவனையும் நாணயஸ்தன் என்று அவர் ஏற்றுக் கொள்ளுவார் போல இருந்தது. அதாவது… இந்தச் சிந்தனையைத் தொடருமுன் குமாஸ்தா என் சிந்தனைகளில் குறுக்கிட்டார்.
அவர் சொன்னார்:- “உலகத்திலே கைநீட்டி வாங்கிய பணத்தையே வாங்கவில்லை என்று பிரமாணம்-செய்து விடுகிற சத்யசந்தர்கள்தான் அதிகமாயிண்டிருக்கு” என்று.
“கலி முற்றுகிறது” என்றார் ஜிப்பாக்காரர்.
ஜிப்பாக்காரருக்கக் கலி முற்றுவதிலெல்லாம் நம்பிக்கை இருந்தது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “கலி என்பதற்கே அர்த்தம் பொருளாதாரம் என்பதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றேன் நான்.
வண்டி கொள்ளிடத்துப் பாலம் தாண்டி, கொள்ளிடம் ஸ்டேஷனில் நின்றது. ‘வெட்டி வேர்’, ‘சுண்டல் வடை’க்காரர் களுக்கிடையே நாங்கள் எங்களுடைய விவாதத்தைத் தொடர
முயலவில்லை.
“சந்தை இரைச்சல்-அதுவே கடவுள்” என்று இன்றைய மேலை நாட்டு இலக்கியாசிரியன் ஒருவன் கூறியிருப்பது எனக்கு ஞாபகம் வந்தது. சந்தையும் இரைச்சலும்தான் இன்று கண்கண்ட தெய்வங்கள் அதில் சந்தேகம் என்ன? உலகமே சந்தையாகிவிட்டது. மனிதனுடைய ஆத்மாவே சந்தைப் பொருளாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் விலைகூறி, இரைச்சல் போடுபவன்தான் இன்று பெரியமனிதன்.
கொள்ளிடம் ஸ்டேஷனைவிட்டு ரெயில்கிளம்பியதும் குமாஸ்தா சொன்னார்: “பணமே பிரதானம் என்று ஆனபிறகு, பணம் எப்படிப் பண்ணுவது என்று வழிதேடுகிறான் மனிதன். குறுக்கு வழிகள் பல தோன்றுகின்றன. அவை பூராவும் நாணயத்துடன் பொருந்தும் என்றும் சொல்வதற்கில்லை அல்லவா?”
நான் சொன்னேன். “தவிரவும் உலகத்தில் பொருளீட்டிப் பணக்காரனாகி விட்டவனை யாரும் எப்படியப்பா நீ பணக்காரனானாய்” என்று கேட்பதில்லை.
“நாய் விற்ற காசு குலைக்காது என்று பழமொழி” என்றார் கதர் ஜிப்பாக்காரர்.
“பொருளீட்டுவதில் வெற்றி பெற்று விட்டவனுக்கு இவ்வுலகம் அடிமைப்பட்டு விடுகிறது. தெய்வீகமான சக்திகளின் சின்னமாக மனிதன் பணத்தை அங்கீகரித்து விடுகிறான். தெய்வத்தையும், தெய்வீகமான சக்திகளையும் அடைவது முக்யம்- மார்க்கங்கள் எப்படியானால் என்ன என்று மனிதன் நினப்பதில் தவறில்லை” என்றேன் நான்.
குமாஸ்தா நான் கூறுவதை ஆமோதித்தார்: “உண்மைதான், லட்சியத்தை அடைந்து விடுபவனை நாம் போற்றுகிறோம். வழியில் விழுந்து விடுபவனின் நடத்தையை அலசுகிற மாதிரி நாம் வெற்றி பெற்றவனின் வழிகளை அலசிப் பார்ப்பதில்லை. பார்த்தால்…’
‘பணம் ஒருவனிடம் சேருவதென்பது சாதாரணமாகவே நாணயத்துடன் பொருந்தாதுதான். அதாவது நாணயஸ்தன் உலகத்தில் ஒருநாளும் பொருளீட்டிவிட முடியாது” என்றார் கதர் ஜிப்பாக்காரர்.
“உண்மைதான். நாணயம் என்பதும் ஓரளவு இலை மறைவு காய் மறைவு விஷயம்தான்” என்றார் குமாஸ்தா.
“இதை ஒப்புக்கொண்ட பிறகு, நாணயமே தேவையில்லை.
பணம் வந்தால் போதும் என்பது பலருடைய கொள்கையாகி விடுகிறது?” என்றேன் நான்.
“உலகத்தில் பணம் சேருவதும் சேராமல் இருப்பதும் கொள்கைகளால் விளைவது அல்ல. ஏதோ ஜாதக விசேஷம்”
என்றார் ஜிப்பாக்காரர்.
அவருடைய ஜாதக விசேஷம்-அவரிடம் பணம் சேரவில்லை என்பது அவர் குரலில் தெளிவாகவே தொனித்தது.
“ஜாதக விசேஷம், குணவிசேஷம், கால விசேஷம் என்று பிரித்துக்கொண்டு மனிதனுடைய காரியங்கள் பூராவையும் அலசி விட்டால் மனிதன் தானாகச் செய்கிறான் என்று சொல்ல ஒன்றுமே எஞ்சியிராது” என்றேன் நான்.
ஜிப்பாக்காரர் சொன்னார்: “உண்மையும் இதுதானே! மனிதன் தனக்கு மீறிய ஒரு சக்தியால் கட்டுப்பட்டு இவ்வுலகில் காரியங்கள் செய்து வருகிறான். சில காரியங்கள் நல்லதாகச் செய்கிறான். சில தவறாகச் செய்கிறான். எல்லாவற்றிற்கும் சேர்த்து அவனைப் போற்றுகிறோம், அல்லது தூற்றுகிறோம்.’
“பொருளாதாரத்தை, மனிதனை மீறிய ஒரு சக்தி என்று சொல்வதுதான் ஆக்ஷேபிக்க வேண்டிய விஷயம்” என்றேன் நான். ரயில் சீர்காழியில் நின்றுவிட்டுக் கிளம்பியது.
“மனிதன் உற்பத்தி செய்த ஒரு சக்திக்கு மனிதன் அடிமைப் பட்டுக் கிடக்க வேண்டியிருக்கிறது” என்றார் குமாஸ்தா.
“பொருளாதாரம் மட்டும் என்ன? எல்லாச் சக்திகளுமே, கொள்கைகளுமே, லட்சியங்களுமே மனிதன் தானாக உற்பத்தி செய்து கொண்டதுதானே! ஏதோ ஒரு தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக உற்பத்தி செய்துகொண்டதுதான். தேவைப் பூர்த்திக்குப் பின்னும் அந்தச் சக்தி, அந்தக் கொள்கை, அந்த லட்சியம் அமல் நடத்தி மனிதனை அடிமைப்படுத்தி வருகிறது’ என்றார் கதர் ஜிப்பாக்காரர்.
“உண்மைதான்.”
“நாணயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு வேறு எங்கேயோ போய்விட்டது” என்றார் குமாஸ்தா.
“தீங்கள் எதுவரையில் போகிறீர்கள்?” என்று குமாஸ்தாவைக் கேட்டேன் நான்.
“மாயவரம் வரையில் போகிறேன்” என்றார் குமாஸ்தா.
“ஏசாவது வேலையில் இருக்கிறீர்களோ?”
‘ஆமாம்; பூர்வீகம் மாயவரத்துக்குப் பக்கத்தில் ஒரு கிராமம், ஏதோ சொற்ப நிலபுலன்கள் உண்டு. பட்டணத்தில் போர்டு ஆபிஸில் வேஸை ஏதோ காலம் நடக்கிறது” என்றார் குமாஸ்தா,
“காலம் நம்முடைய உதவியில்லாமலே நடந்து விடும். தம்மைப் பற்றிய வரையில், நாம் நடக்கத்தான் பாடுபட வேண்டி யிருக்கிறது” என்றார் கதர் ஜிப்பாக்காரர்.
“நாம் நடக்கப் பாடுபடுகிற காரியத்திலேதான், நாணயம் நாணயமின்மை எல்லாம் வந்து விடுகிறது” என்றேன் நான்.
”அவரை ஊர் பெயர் உத்தியோகம் எல்லாம் கேட்டீர்கள். என்னைக் கேட்கவில்லையே!” என்று சொல்லிச் சிரித்தார் கதர் ஜிப்பாக்காரர்.
“சொல்லுங்கள்” என்றேன் நான்.
“உங்களுக்கேதான் தெரிந்துவிட்டதே; நான் சுகவாசி. திட்டமான வரும்படி கிடையாது. திட்டமான வாழ்வும் கிடையாது. அகப்பட்டதைக் கொண்டு அகப்படுகிற இடத்தில் வாழ்பவன். ஆனால் நாணயஸ்தன்…” என்றார் கதர் ஜிப்பாக்காரர்.
“இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நாணயமாக வாழ்க்கை நடத்துவதுதான் சிரமமான காரியம்” என்றார் குமாஸ்தா.
“உண்மைதான்” என்றேன்.
‘ஆமாம், நான் நாணயமாக இருப்பது ஓரளவு சுலபம். எனக்கு வாழ்க்கை வழிகள் திட்டமாக நிர்ணயமாகி விட்டன. காலம் பணம் இரண்டும் என்னைப் பொறுத்தவரையில் அளந்து நிர்ணயிக்கப்பட்டு விட்டன” என்றார் குமாஸ்தா.
“வியாதிக்காரர்களுக்கு ஜெரிக்கப்பட்டுப் புட்டிகளில் அடைத்திருக்கும் உணவு கொடுக்கிற மாதிரி சில மனிதர்களுக்குக் காலத் திட்டமும், பணத்திட்டமும் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அது சௌகரியமாக இருக்கிறது என்றுதான் சொல்ல
வேண்டும் என்றேன் நான்.
ஜிப்பாக்காரர் சிரித்துக் கொண்டே சொன்னார்; “அந்த மாதிரி ஒரு வாழ்க்கை திட்டத்தில் அகப்பட்டுக் கொள்வதை விரும்பாமல் தான், நான் இந்தக் கதியில் இருக்கிறேன்,” என்றார்.
“நாங்களெல்லாம் வாழ்வில் பெரும்பகுதியைப் பிறருடைய காரியங்களையும் கணக்குகளையும் பார்ப்பதில் செலவிட்டு விடுகிறோம். எங்கள் காரியங்களையும், கணக்கு களையும் பார்க்க எங்களுக்குப் பொழுதில்லாமல் செய்து விட்டது எங்கள் தொழில்” என்றார் குமாஸ்தா-குறை கூறுகிற குரலிலே.
நீடூர் தாண்டியது ரயில்.
‘அது குறைப்பட வேண்டிய விஷயமேயல்ல. அதுதான் நல்லது” என்றார் கதர் ஜிப்பாக்காரர்.
“இருட்டறையில் சிறைப்பட்டிருக்கிற மாதிரி மனிதர் உலகில் வாழ்கிறார்கள். இருட்டறையிலிருந்து வெளியேற வழி கிடையாது. வழியிருந்து வெளியேறினாலும் அப்பாலும் இருட்டாகத்தான் இருக்கும் என்பது சிலருடைய கொள்கை. வேறு சிலர் இருட்டறையிலிருந்து வெளியேற வழியுண்டு. வழி தெரிந்தால் வெளிச்சமும் உண்டு என்று கட்சி சொல்கிறார்கள்.எந்தக் கட்சி சரியானது என்று யார் சொல்வது?
ஆனால் இரண்டு கட்சியினருடைய வாழ்க்கைத் தரமும் ஆராய்வதற்கு ருசியாகத்தான் இருக்கிறது” என்றேன் நான்.
“வழியுண்டு இருட்டறையை விட்டு வெளியேற என்றெண்ணிச் சுவற்றில் மோதிக்கொண்டு உயிரை விடுபவர்களை என்ன என்று சொல்வது?” என்றார் கதர் ஜிப்பாக்காரர்.
“உலகம், கவிஞன் என்று சொல்கிறது. லட்சியவாதி என்றும் சிந்தனையாளன் என்றும் சொல்கிறது” என்றேன் நான்.
மாயவரம் வந்துவிட்டது. மணி ஒன்றரைக்கு மேலாகி விட்டது. காபி சாப்பிட்டுவிட்டு வரக் கிளம்பினேன். குமாஸ்தாஇறங்கிவிட்டார். கதர் ஜிப்பாக்காரர் கும்பகோணம் வரையில் போகிறவர். காபி சாப்பிட வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
நான் போய்க் காபி சாப்பிட்டு வந்தேன். என் வண்டியில் வேறு ஒரு நண்பர் எனக்குக் கொஞ்சம் பரிசயமான ஒருவர்- சிவராமன் என்று பெயர்- உட்கார்ந்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டு உட்கார்ந்தேன்.
நாற்பத்தைந்து நிமிஷங்களுக்குப் பிறகு ரயில் கிளம்பிற்று. கும்பகோணம் போறதாகச் சொன்ன கதர் ஜிப்பாக்காரர் வரவில்லை.
“வேறு ஒருவர் வண்டியில் இருந்தார். கும்பகோணம் வரையில் போவதாகச் சொன்னார்.அவரைக் காணவில்லை” என்றேன் சிவராமனிடம்.
“நீங்க காபி சாப்பிடப் போயிருக்கச்சே இங்கே இருந்தாரே, அவரைத்தானே சொல்றேள்” என்றார் சிவராமன்.
“ஆமாம்…” அவர்தான் நன்றாகப் பேசினார் என்றேன் நான். “பேசுவார், நன்றாகவே பேசுவார்” என்றார் சிவராமன்.
“அவரை உங்களுக்குத் தெரியுமா?” என்றேன் நான்.
“தெரியாமல் என்ன? நன்றாகத் தெரியும். எவ்வளவு நன்றாகத் தெரியும் என்று சொல்லட்டுமா? நான் இந்தக் கதவாலே வண்டி ஏறிக்கொண்டிருக்கச்சே அவர் அந்தக் கதவாலே இறங்கிப் போய்விட்டார். கூப்பிடக் கூப்பிடக் காதில் விழாத மாதிரி போய்விட்டார்” என்றார் சிவராமன்.
“ஏன்?”
“கைமாத்தாக வாங்கிண்ட பணத்தைத் திருப்பிக் கேட்டுவிடப் போறானே என்று இருக்கும்” என்றார் சிவராமன்.
“அப்படியா? தான் ரொம்பவும் நாணயஸ்தர் என்று சொல்லிக் கொண்டாரே!” என்றேன் நான்.
“அவர் நாணயஸ்தர்தான்! நாணயஸ்தர்தான்! அதனால்தான் பொய்யும் புளுகும் சொல்ல மனசு இல்லாமல் காணாதமாதிரியே போய்விட்டார். நாணயஸ்தர்தான். சந்தேகம் என்ன? அவரைப் போல நாணயஸ்தர்கள் இப்போ நிறையப் பேர் இருக்கிறார்கள்?” என்றார் சிவராமன்.
வண்டியும் மல்லியம் தாண்டியது.
1966

க.நா.சு /கல்யாணங்கள் – விருட்சம் நாளிதழ்