
ஆயிரம் நீதி கதைகள்
ஆப்பிரிக்காவில் உள்ள கமேரூன்ஸ் என்னும் பிரதேசத்தை இன்னொரு சமயம் ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் கர்வம் உள்ளவன். எல்லாரும் தனக்குத் தொண்டர்கள், தான் யாருக்கும் தொண்டன் அல்ல என்று அவன் அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் கொள்வான்.
அந்த ஊரில் போக்பார் என்னும் அறிவிலும், வயதிலும் முதிர்ந்தவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள் அரசனைப்பார்த்துச் சொன்னார், “இந்த உலகில் கடவுள் ஒருவர்தாம் தாம் யாருக்கும் குடியில்லாத தன்மை வாய்ந்தவர் நாம் எல்லோரும் ஒருவருக்கொருவர் சேவகர்களே, தொண்டு செய்ய வேண்டியவர்களே” என்றார்.
இதைக் கேட்டு அரசன் வெகுண்டான். “என்ன! என்னைப் பார்த்தா நான் இன்னொருவனுக்குச் சேவகன் என்கிறீர். இதை இன்று மாலைக்குள் நிரூபித்தால் உமக்கு நூறு பசுக்கள் இனாமாகத் தருகிறேன், இல்லையோ உம் தலையை வாங்கி விடுவேன்” என்றான்.
அந்த சமயம் பார்த்து அங்கு ஒரு பிச்சைக்காரன் வந்து சேர்ந்தான். “உள்ளே சமையற்கட்டிலிருந்து இவனுக்குக் கொஞ்சம் அன்னம் கொண்டு வந்து போடுவதற்குத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்” என்று போக்பார் அரசனைக் கேட்டார்.
அரசன் சரியென்றான்.
போக்பார் தம் கைத்தடியைக் கக்கத்தில் இருத்திக் கொண்டார். உள்ளே சென்று இரண்டு கைகளிலும் அன்னத்தை எடுத்துக் கொண்டு வந்தார். அப்பொழுது அவருடைய கைத்தடி நழுவிக் கீழே விழுந்து அவர் காலை இடற ஆரம்பித்தது. “இந்தக் கைத்தடியைச் சற்று எடுங்கள்” என்றார் போக்பார்.
அரசனும் கைத்தடியை எடுத்து அவர் கையில் கொடுத்தான்.
அன்னத்தைப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்துவிட்டு போக்பார் விழுந்து விழுந்து சிரித்தார்.
“எதற்காகச் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டான் மன்னன்.
”நாம் ஒருவருக்கொருவர் தொண்டர்கள் என்று சொன்னது தவறு என்று கூறினீர்களே, நான் இந்தப் பிச்சைக்காரனுக்குத் தொண்டு செய்தேன். தாங்கள் என் கைத்தடியை எடுத்துக் கொடுத்து எனக்குத் தொண்டு செய்தீர்கள்” என்றான்.
அரசன் அவர் சொன்னது சரியென்று தீர்மானித்து, “அப்படியானால் நான் உங்களுக்கு நூறு பசுக்கள் கொடுத்தாக வேண்டும்” என்றான்.
“அந்தப் பசுக்களை இந்த ஏழைக்குக் கொடுங்கள் எனக்கு வேண்டாம்” என்றார் போக்பார்.
