நிஷாந்தன்/பரிமாறுதல்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை

மனச்சட்டியில் இட்டு
மிகுந்த கவனத்துடன் சமைத்த
எனது எண்ணங்களைச்
சொற்களின் கரண்டியில்
பக்குவமாகப் பரிமாறுவதற்கு
எனக்குத் தெரியவேயில்லை.
என் முகத்தையும்
ஏந்திய கரண்டியையும்
அவநம்பிக்கையுடன்
பார்க்கிறீர்கள்.
சட்டியிலிடப்பட்ட
பொருட்கள் குறித்து
சந்தேகம் கொள்கிறீர்கள்.
காரசாரமாக விவாதிக்கிறீர்கள்.
கரண்டிக்கும் உணவுக்கும்
உள்ள வேறுபாட்டை
உங்களுக்கு
எப்படித்தான் நான்
புரிய வைப்பேன்
எனது இன்னொரு
கரண்டி மூலம்?