ஹரணி கவிதைகள்

விபத்து..
•••
கொஞ்சம் பார்த்துப்
போயிருக்கலாம்
அய்யோ பாவம்…
பார்க்காமல் போக
இயலாது..
பார்த்துப் போகும்போதுதான்
நடக்கிறது எல்லாமும்..

யார் யாரைப் பார்ப்பது?
எது யாரைப் பார்க்கிறது?

இவற்றுடன்தான்..
•••
பாதிக்குமேல்
செல்லரித்த வாழ்வில்..
சிலர் நல்ல தூக்கத்தில்
சிலர் இருமுகிறார்கள்
கொஞ்சம் தும்மல்கள்
தொண்டைக் கரகரப்பில்
கொஞ்சம் பேர்..
யோவ்.. நிறுத்துய்யா
ஸ்டாப்பிங் தெரியாதா?
பாக்கிக் கொடுங்க..
யாரும்…….. இறங்கணுமா?
ஹைலி இன்டீசண்ட் பீப்பிள்
சார்.. ஆமாம் சார்..
தினமும் நடக்கிறது
ஆனாலும் பேருந்து பயணம்
பாதுகாப்பானது
ஆமாம்.. எல்லாவற்றையும்
கவிதைக்குள் போட்டுவிட்டால்
எப்பவும் பயணிக்கலாம்..

மனிதன் மட்டுமே..
•••
ஒரு துளி
ஒரு துளி
ஒரு துளியாய்
மைல் கணக்கில்
பறக்கிறது தேனீ…

தேனடை குடும்ப
வாழ்வின் முகவரி…

மிகப்பெரிதான வாழ்வில்
துளிகூட வாழத் தெரியாதவன்

(04.04.2025 அன்று தபாலில் அனுப்பிய கவிதைகள்)