
என் இல்லத்து பூஜையறையில் கம்பீரமாக சேவை சாதிக்கும் ஸ்ரீ பாஷ்யக்காரரை, ஸ்ரீ ராமானுஜரை, என் ஆச்சார்யனை இன்று காலை வணங்கினேன். இன்று அவரின் 1008வது திருநட்சத்திரம். எனக்கு மிகவும் பிடித்தவர் என்பதெல்லாம் சாதாரணமான வார்த்தைகள். தனியே அமர்ந்து யோசிக்கத் தொடங்கினேன். ஆச்சார்யனின் ஆயிரம் ஆண்டுகால சாதனைகள் நினைவுகளாக எழுந்தெழுந்து வந்தன. சர்வ சாதாரணமாக… அநாயாசமாக மனிதர்களை ஒன்று திரட்டிய ஆச்சார்யனை கைகூப்பி வணங்கினாலும், ஆயிரம் தெண்டனிட்டு நமஸ்கரித்தாலும் தீராது.
ஸ்ரீ ரங்கவாசியாக நானிருந்த காலங்கள், இன்று காலை முதலே என்னை சுகமாக அழுத்திக் கொண்டிருந்தன. ரங்கனும் ரங்கநாயகியுமே எனக்கு எல்லாமும்,பெரிய மதில் சுவர்களின் ஓரமாய் அமர்ந்து உற்சவாதிகளை அலைகள் போல நகர்ந்து நகர்ந்து வரும் நம்பெருமாளை கண்குளிர பார்த்து கொண்டே,செவி தொட்டு நெஞ்சை நிறைக்கும் பாசுரங்களை அகம் நிறைய கேட்டுக்கொண்டே இருக்கலாம் இன்றும் அப்படித்தான் ஓரிரு பாசுரங்கள் என்னை சூழ்ந்தன. அதன் தாக்கமாக ராமானுஜர் உள் நிறைந்து எண்ணமெல்லாம் அவராக இருந்தேன்.

மனம் குழைய, நெக்குருக வைக்கும் எத்தனை சம்பவங்கள் அவர் வாழ்வில். பிரம்மச்சாரியாக இருந்தபோதும் சோதனை. கிரகஸ்தராக இருந்தபோதும் ஏதோவொரு அவஸ்தை. சந்நியாசம் பெற்ற பிறகு இந்த ஒட்டுமொத்த மானிடர்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தாரே பார்க்கலாம்! ஒவ்வொரு ஜீவன்களும் கரையேறும் படிக்கு அன்பால் அவர் ஸ்தாபித்த தர்மங்கள் எத்தனை சூட்சுமமானவை. அதை ஸ்தாபிப்பதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் எத்தனை. தன்னையே கரைத்துக் கரைத்து நம்மையும் கரை சேர்க்கும் அந்தக் கருணை. பக்தியின் கரங்களில் நம்மை பிடித்துக் கொடுக்கும் அந்தக் காருண்யப் பிடிவாதம். மனிதர்களில் பேதமில்லை என்று அன்றே சொன்ன சமூகப் புரட்சியாளர். சிடுக்கான தத்துவங்களை எளிமையாக்கி நெஞ்சில் பதித்து தலைமுறைதோறும் உபதேசிக்கும் ஞானாச்சார்யன். …மகத்தான குரு …
விவேகானந்தர், sisters and brothers of america என்று சொன்னபோது கேட்டோரின் மேனி சிலிர்த்ததாம். ஏனெனில், அவர்களை நிஜமாகவே… வெறும் பாவனையாக அல்ல. சகோதரி, சகோதரர்களாக பார்த்தார். அதுபோன்றே எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்று ராமானுஜர் வெறுமே நம்பவில்லை. தன்னுள் உணர்ந்தபடி உரைத்தார். ஆங்கிலத்தில், A saint is an embodiment of compassion என்கிற வாக்கியம்தான் இங்கு நினைவுக்கு வருகிறது.
அரங்கனுக்கு சந்தனம் பூசுவது முதல் புஷ்பம் சாற்றுவது வரை, சிறு விழா முதல் பெருந் திருவிழா வரை அனைத்தையும் ஏற்பாடு செய்து கோயிலொழுகாய் அருளியவர், என் ஆச்சார்யன். இன்றளவும் சூட்சுமமாக ஆச்சார்ய வழிகாட்டுதலை அங்கு காணலாம். படிதவறி நடந்தாலும் நேராக்கும் நேர்மி.
அது ஒரு கோடை காலம். சித்திரையில் கோடை உற்சவத்தில் ரங்கன் ஒவ்வொரு இடமாக தேடித்தேடி சேவை சாதிப்பான். இன்று ரங்கன் எங்கே இருப்பான்… எங்கே இருப்பான்… என்று தேடித்தேடி சென்று சேவிப்போம். அப்படித்தான் நானும் எங்கே ரங்கன் என ஓடியபடி இருந்தேன். சொன்ன வழி கேட்டு வந்தபோது, சிறு தோப்பு தெரிந்தது. அருகே செல்ல அது சோலையாகத் தென்றல் வீசியது. என்னவொரு மதுரமான இடம். அருகேயே துணியை சலவை செய்யும் தொழிலாளர்கள் குடியிருப்பு. அங்கிருந்த பார்க்க, சோலைக்கு மத்தியில் சிறு மண்டபம். மண்டபத்தை நோக்கிச் செல்ல ஒற்றையடிப் பாதை. சற்று தூரத்தில் ரங்கன். மண்டபத் தூணில் யோக நித்திரையில் சாய்ந்தபடி இருக்கும் பட்டாச்சார்யார். கையில் துப்பாக்கியோடு காவல் காக்கும் காவலர். இன்றும் என்னால் மறக்க முடியாது. திருமலை திருப்பதியின் ஜருகண்டி இல்லை… வி.ஐ.பி. பாதையில் செல்லும் பெருமிதம் இல்லை. அருகே சென்றேன். என் பெருமாளின் இல்லை… இல்லை… நம் பெருமாளின் முகவாயை பிடித்து அழுத்தும் தூரத்தில் இருந்தேன் . இது போதும் என்று தோன்றியது. அதுபோன்று ஒரு தரிசனம் இனி எப்போது காண்பேனோ இன்று எழுதும்போது தோன்றுகிறது.
மெல்ல, அந்த மண்டபத்தின் பக்கவாட்டில் சற்றே தூர நடக்க, படித்துறையில் பெண்கள் குளித்துவிட்டு பட்… பட்டென்று தலை துவட்டும் சப்தம். துணிகளை உலர்த்தும் பாட்டிகள். இரண்டு படிகள் இறங்கினேன். மூன்று வயது குழந்தை ஆடை இல்லாமல் குறும்பாக பார்த்து விட்டு குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிந்தது. என்னை பார்த்தவுடன் மண்டபத்தை நோக்கி ஓடியது. பெருமாளை சுற்றிக் கொண்டும், பெருமாளின் அருகே போய் விரலைச் சூப்பியபடி நின்றது. யாரைச் சுற்றுகிறோம் என்று தெரியாமல் பெருமாளையே மீண்டும் வலம் வந்தது. என்னைப் பார்த்து பயந்தவளாக பெருமாளின் பின்னால் மறைந்து போக்கு காட்டியது. ஆஹா… அத்தனை சுலபனா ரங்கன். அவனும் ஈடு கொடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். தன்னையே சுற்றி சுற்றி வரும் குழந்தையின் தலை சுற்றப் போகிறதே என குழந்தையை கை நீட்டி நிறுத்துவானோ என நினைத்தேன்.
மெல்ல பெருமாளின் அருகே நகர்ந்தேன். ஆஹா…. இவரைத்தான் ராமானுஜர் ஆஸ்ரயித்தார். ஆண்டாள் இவனுக்குள்தான் கலந்தாள் அல்லவா? ஆழ்வார்கள் இவனைப் பார்த்துத்தான் கதறியிருப்பார்கள் அல்லவா? பிள்ளை லோகாச்சார்யார், ஸ்வாமி தேசிகன் முதல் அனைத்து ஆச்சார்ய புருஷர்களும் பழியாய் இவன் முன் கிடந்திருப்பார்கள் அல்லவா? அப்பேற்பட்ட ரங்கன் இப்போது ஜொல்லு வழியும் குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியை என்னால் மறக்க முடியாது.
மீண்டும் என் ஆச்சார்யனை நினைத்தேன். இந்த மானுடத்தின் மேல் எத்தனை அன்பு… எல்லாம் என் ஆச்சர்யனின் ஏற்பாடு என்னை அந்தச் சூழல் கலங்க வைத்தது. கலங்கிய கண்களோடு த்வயம் சொன்னேன். யாரோ என் துப்பட்டாவை இழுப்பது போன்ற உணர்வு. யாரென பார்த்தேன். அந்த மூன்று வயது குழந்தை மூக்கொழுக என்னை உறுத்துப் பார்த்தாள். ‘‘அழாத… இந்தா முட்டாயி’’ என்று கல்கண்டை நீட்டியது. அங்கேயே மடிந்து அமர்ந்து அந்த குழந்தையை கட்டிக் கொண்டேன். ரங்கநாயகி… என்று அவளை பார்த்துச் சொன்னேன்.
ரங்கநாயகியின் பார்வை பட்டு பட்டு… சிறுமி முதல் பெண்கள் வரை அனைவருமே அவளின் ஜாடையில் தெரிகிறார்கள் போலும்… பின்னால் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளை படிக்கும்போது நான் பார்த்த அந்த மூன்று வயது தேவதையே என் நினைவில் வந்தாள்.
காரேய் ராமானுஜா…. உன் கருணைதான் என்னே!
இன்றளவும் அந்த தரிசனத்தை என்னால் மறக்க இயலாது.
