
வேளச்சேரி பஸ் டெர்மினஸ் தாண்டி வந்து கொண்டிருந்தேன்.
நடுவில் வந்த ஒரு தெருமுனையில் ஒரு பெண்மணி ஸ்கூட்டரில் எதிர்ப்பட்டார்.
என்னருகில் நிறுத்தி “சார்! பனகல் பார்க் எங்க இருக்கு?”
“இது வேளச்சேரி. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் டி நகர்லதான் பனகல் பார்க் இருக்கு. இங்க சில சாதா பார்க்தான் இருக்கு”
“சார்! உங்களுக்கு தெரியாட்டி விடுங்க. இங்கதான் இருக்குன்னு சொன்னாங்க, என்று கழுத்தைத் தூக்கி வேளச்சேரி பஸ் ஸ்டாண்ட்டை குறிப்பது போல காட்டினார்.
“அதுவா… maybe பஸ்ஸோட போர்ட்ல பனகல் பார்க்ன்னு எழுதியிருக்கலாம். ஆனா அங்க பனகல் பார்க் இல்ல. டி நகர்லதான் இருந்தது”.
அந்த பெண்மணி ரொம்ப confident ஆக பேசவும் எனக்கே கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஏதாவது மெட்ரோ திட்டத்துக்காக பனகல் பார்க்கை, ராவோட ராவா, வேளச்சேரிக்கு மாத்திட்டாங்களா?
அதற்குள் அந்த பெண்மணி “சார்! நீங்க இந்த இடத்துக்கு புதுசா? பனகல் பார்க் இந்த ஏரியாதான். சொன்னாங்களே!” என்றார்.
“பழசுதாம்மா. ஆனா எனக்குத் தெரிஞ்சவரை இங்க இல்ல. கூகுள் மேப்ல வேணா மாருங்க. ப.பா. டி நகர்தான் காட்டும்”
“சார்! நிறைய ஐடி கம்பெனியெல்லாம் கூட இருக்கும்ன்னு சொன்னாங்க”
சட்-டென உறைத்தது. அம்மணி டைடல் பார்க் தேடுகிறார். வேளச்சேரியில்.
“அம்மா! நீங்க தேடறது பனகல் பார்க்கா? டைடல் பார்க்கா?”
“ஆங்… அதுதான். டைடல் பார்க்குதான். இங்க எங்க இருக்குது?”
“அதுவும் இங்க இல்லம்மா…”
“என்னா சார் எது கேட்டாலும் இல்லேங்கறீங்க?”
நான் ஏதோ டைடல் பார்க்கை கடத்திவிட்டது் போல பார்த்தார். ஏதாவது முட்டு சந்துக்கு வழி சொல்லலாமா என்று யோசித்தேன்.
பார்த்தால் பாவமாக இருந்தது. வழியே தெரியாத யாருக்காவது வழி காட்டினால் திங்கள் பெயர்ச்சி பலனாக செவ்வாயில் ஏதாவது நல்ல கர்மவினை விளையலாம் என்று தோன்றியது.
“டைடல் பார்க் இங்க இல்ல. தரமணியில இருக்குது. நீங்க இப்படியே நேரா போங்க. ரைட்ல தரமணி ரோட்ல திரும்பி போனா வந்துடும்”
“தேங்க்ஸ் சார்!”
“தேங்க்ஸ் இருக்கட்டும். அங்க போய் அப்பவும் கண்டுபிடிக்க முடியலேன்னா யாரையாவது கேளுங்க”
“சரி சார்!”
“ஒரு விஷயம். அங்க போய் பனகல் பார்க்ன்னு கேட்டுடாதீங்க. போற வழியெல்லாம் டைடல் பார்க், டைடல் பார்க்ன்னு சொல்லிண்டே போங்க!”
