
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 39
“போவோமா ஊர்கோலம்…பூலோகம் எங்கெங்கும்” என்று மங்களா ஆரம்பிக்க… மற்ற பெண்களின் குரல் தொடர ஒரே கலாட்டாவாக இருந்தது அந்த வண்டி. “கடைசில நிஜமாவே கிளம்பிட்டோம்டீ..” சந்தோஷத்தில் துள்ளினாள் ஸ்ரீமதி. . “அக்ஷயா கல்யாணம் வந்துச்சோ நாம எல்லாரும் ஒண்ணு சேர்ந்தோம்.” வாசவி சொன்னதை ஆமோதித்தாள் சிந்துஜா.
“நாம ஆறு பேரும் இப்படி ஒண்ணா சேர்ந்து எத்தனை நாள் ஆச்சு? படிச்சு முடிச்சு நான் மட்டும் நம்ப காலேஜிலேயே வேலைக்கு சேர்ந்துட்டேன். கோயம்புத்தூரிலேயே இருக்கேன். நீங்க எல்லாம் பெங்களூரு, ஒயிட் ஃபீல்டு. சென்னைன்னு பறந்துட்டீங்க.”
சொன்ன மங்களாவுக்குத் தான் இந்தப் பயணத்தில் ரொம்ப சந்தோஷம்.
“எல்லாம் சரி… எதுக்குடி உங்க அம்மாவையும் சேர்த்துக்கிட்ட?” தயா மங்களாவிடம் கிசுகிசுத்தாள்.
டிரைவரின் பக்கத்து சீட்டில் முன்னால் உட்கார்ந்து இருந்த மங்களாவின் அம்மா வசுமதி காதிலும் அது விழத்தான் செய்தது.கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர்கள் மங்களா, ஸ்ரீமதி, சிந்து, தயா, ஜனனி, சிந்துஜா என்ற இந்த ஆறு சிநேகிதியரும். படித்து முடித்து மங்களா உள்ளூரிலேயே வேலைக்குச் சேர மற்ரவர்கள் வேறு வேறு இடங்களில் உடன்படித்த அக்ஷயாவின் கல்யாணத்திற்காக கோயம்புத்தூர் வந்தவர்களுக்கு ஒன்றாக ஒரு நாளைக் கழிக்க ஆசை. ஒரு நாள் பயணமாகப் பக்கத்தில் சோலையாறு அணைக்கட்டிற்குப் போய் வரலாம் என்று மங்களா திட்டம் போட்டு ஏற்பாடு செய்ததில் இப்படிக் கிளம்பி இருக்கிறார்கள்.
வனாந்தரமாக வெறும் வயல் மட்டும் சூழ்ந்த அந்த பொட்டல் வெளியில் ஒரே ஒரு டீக்கடை மட்டும் இருந்தது.
“ இங்க நிறுத்தி ஒரு டீ சாப்பிடலாம்பா” என்று வண்டியை நிறுத்தச் சொன்னது ஜனனி.
வசுமதிக்கு அங்கே இறங்கக் கொஞ்சம் யோசனையாக இருந்தது. சுற்று முற்றும் வீட்டையே காணோம். ஆள் அரவமும் இல்லை. “சோலையாறு அணைக்கட்டு போக காலை எட்டு மணிக்குக் கிளம்பிப் போய் ராத்திரி எட்டு மணிக்குள் திரும்ப வந்து விடலாம், என்று திட்டம் போட்டார்கள். ஆனால் இவர்கள் கிளம்பவே 9 மணி ஆகிவிட்டது. கிளம்பி மூன்று மணி நேரம் ஆனதில் இதோ இங்கே ஒரு டீ பிரேக் வேறு. வாயைத் திறந்தால் மங்களா கத்துவாள்” என்று மனதிற்குள் நினைத்தவாறு பேசாமல் இறங்கினாள் வசுமதி.
சுற்றிவரப் பச்சைப் பசேல் என்று வயலும் மரங்களுமாய் ரம்யமாகத் தான் இருந்தது அந்த இடம். சற்று மேடாக ஏறிப் போனால் அந்த சின்ன டீக்கடை இருந்தது. மலையாளத்தில் பேசியபடி நல்ல கேரளத்து சாயலுடன் இரண்டு ஆண்கள் அந்த கடைக்குள் இருந்தார்கள். வெளியில் இரண்டு பெஞ்சுகள். பின்பக்கம் தகரக் கூரை போட்டு ஒரு வீடு. டீக்கடைக்கு வெளியே மரத்தில் எதிரெதிராக இரண்டு ஊஞ்சல்கள் கயிற்றில் தொங்கியபடி இருந்தன.
சினேகிதிகள் குதித்துக்கொண்டு ஊஞ்சலில் ஆடக் கிளம்பிவிட்டனர். எல்லோருக்கும் டீயும் பிஸ்கட்டும் சொல்லி அம்மாவின் அருகில் வந்து பெஞ்சில் உட்கார்ந்தால் மங்களா.
“மேடம் பக்கத்துல பத்து நிமிஷம் போனா பெட்ரோல் பங்க் இருக்கு. டீசல் போட்டுட்டு வந்துடறேங்க மேடம். பணம் கொடுங்க.”
அவர்கள் வந்த அந்த டொயோட்டா இன்னோவாவின் டிரைவர் சங்கர் வந்து கேட்க, பர்சைத் திறந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள் மங்களா.
“சீக்கிரம் வந்துடுப்பா லேட் பண்ணிடாத” என்ற வசுமதியிடம், “அரை மணி நேரத்துல வந்துடறேங்கம்மா”,என்று வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் டிரைவர் சங்கர்.
எழுந்து சினேகிதிகளை நோக்கிச் சென்றாள் மங்களா.
அடர்ந்த மீசையும், உயரமும் அகற்ற தோள்களுமாய், இருந்த அந்த இரண்டு ஆண்களைத் தவிர அங்கே சுற்றுமுற்றும் யாரையுமே காணோம்.
“ சேச்சி… கோயம்புத்தூராணு ?” வசுமதியைப் பார்த்துக் கேட்டான் அந்த டீக்கடைக்காரன்.
“ஆமா… சோலையாறு டேம் பார்க்க போறோம்” என்று அவர்களுடன் பேச ஆரம்பித்தாள் வசுமதி. கிருஷ்ணன், மாதவன் என்ற அந்த இரண்டு பேரும் இரட்டையர்கள். நாலைந்து வருடங்களாக இங்கே டீக்கடை வைத்திருக்கிறார்கள். பின்னால் இருப்பது இவர்கள் நிலம் தானாம். அங்கே விவசாயமும் பார்த்துக்கொண்டு டீக்கடையும் நடத்துகிறார்கள் தாங்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்கிறார்கள். வயது முப்பதுக்குள் தான். கல்யாணம் ஆகவில்லை. குடும்பம் கேரளாவில் செப்லேரி கிராமத்தில்.
பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. மணி ஒன்றைத் தாண்டி இருந்தது. டிரைவரைக் காணவில்லை. திரும்பிப் பார்த்தால் கவலையில்லாமல் இந்தப் பெண்கள் மரத்தடியில் உட்கார்ந்து சிரித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தார்கள். எழுந்து போய் மங்களாவைக் கூப்பிட்டாள் வசுமதி.
“ டிரைவரைக் காணுமேடீ. போன் பண்ணிப் பாரு”, என்றாள். மங்களா போனை எடுத்து டிரைவரை அழைக்கக் கால் போகாமல் பீப் சப்தம் மட்டும் வந்தது. ஜனனி, சிந்து, தயா ஒருவர் போனிலும் சிக்னல் இல்லை. அனைவரும் வசுமதி உட்படப் போன் செய்து பார்த்தார்கள். யாருக்கும் சிக்னல் கிடைக்கவில்லை.. கடைசியில் கிருஷ்ணனின் ஃபோனிலிருந்து டிரைவர் நம்பரைப் போட்டாள் வசுமதி. லைன் கிடைத்தது. டிரைவர் சங்கர் பேசினான்.
“மேடம், நான் போன் போட்டுக்கிட்டே இருக்கேன். மங்களா மேடமோட லைனே கிடைக்கலைங்க. இங்க வழியில ரோட்டில் ஒரு மரம் விழுந்து இருக்குங்க மேடம். டிராபிக் எல்லாம் அப்படியே நிக்குதுங்க. ஒரு மணி நேரத்துல கிளியர் ஆயிடுமாங்க. வந்துடுவேனுங்க. மன்னிச்சுக்கோங்க.”காத்திருப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது.
மணி இரண்டைத் தாண்டி மூன்றைத் தொட்டது. அணைக்கட்டில் சாப்பிடலாம் என்று கையில் கொண்டு வந்திருந்த சாப்பாட்டு மூட்டையும் வேனில் போய்விடப், பசியில் தவிக்க ஆரம்பித்தார்கள் பெண்கள்.
“என்ன எண்ணையோ வெரி அன் கிளீன்” என்று மறுத்தது போக, டீக்கடையில் இருந்த வடையையும் சமோசாவையும் கேட்டு வாங்கி சாப்பிட்டுக் காலி செய்தார்கள் எல்லோரும்.
வானம் இருட்டிக் கொண்டு நாலு மணி வாக்கில் தூறலாக ஆரம்பித்தது மழை. கொஞ்ச நேரத்தில் சோ வென்று கொட்ட ஆரம்பித்தது.
சகோதரர்கள் வீட்டிற்குள் வந்து உட்காரக் கூப்பிட்டதில் அந்த சிறிய தகரக் கூரை வீட்டிற்குள் போனார்கள் அனைவரும். முகத்தைச் சுளிக்க வைக்கும் அழுக்கும் வாடையும் மூச்சு முட்ட வேறு வழியில்லாமல் உள்ளே உட்கார்ந்தனர் ஏழு பேரும். ஒரு குண்டு பல்பு மத்திரம் சோகையாக எரிந்து கொண்டிருக்க மணி ஐந்தும் ஆகியது. மழை விடவில்லை. கொஞ்ச நேரத்தில் மின்சாரமும் போய்விட்டது.
வயிற்றில் பயம் பந்தாய்ச் சுருள ஸ்ரீமதிக்கும் தயாவிற்கும் அழுகையே வந்துவிட்டது. மற்றவர்களுக்கும் படபடப்புத்தான். இப்படி மரம் விழுந்துவிட்டால், மழையும் பெய்தால் அடுத்த நாள் காலையில் தான் ரூட் கிளியர் ஆகும் என்று தகவல் வேறு சொன்னான் அந்த டீக்கடைக்காரன் மாதவன்.
நேரம் 8 மணியை நெருங்க இதற்கு மேல் பெண்கள் பசி தாங்க மாட்டார்களே என்று யோசிக்க ஆரம்பித்தாள் வசுமதி. ஆறு பெண்களும் வெலவெலத்துப் போய் உட்கார்ந்திருந்தார்கள். பேச்சும் கலகலப்பும் மறைந்து, பயம் மட்டுமே மேலோங்கி இருந்தனர். கிருஷ்ணன் உள்ளே வந்து ஒரு அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்து வசுமதியிடம் சிலவற்றைச் சுட்டிக்காட்டினான்.
அங்கிருந்த மண் அடுப்பைப் பற்ற வைத்தாள் வசுமதி. உலை வைத்து அரிசியை போட்டாள். குடத்தில் இருந்த நீரைச் சாய்த்துப், புளி கரைத்து ஏதோ செய்தாள். அரை மணி நேரத்தில் ஒரு புளி சாதம் தயாராகி அந்த இடமே மணத்தது. டீக்கடையில் இருந்து மாதவன் வாழை இலைகளை எடுத்து வந்து தர, 10 நாள் பட்டினி கிடந்ததைப் போல சாப்பிட்டனர் எல்லாப் பெண்களும். சகோதரர்களுக்கும் கொண்டு கொடுத்தாள் வசுமதி. மழை அதிகமாகிக் கொண்டுதான் இருந்தது.
“நாங்கள் இப்படி டீக்கடையில் இரிக்கும். நீங்கள் எல்லோரும் உள்ளே படுங்கம்மே. நிங்கள் வண்டி இப்போழ் வராது. காலையில தான் வரும்” என்று கிருஷ்ணன் சொன்னதில் பயந்து விட்டாள் வாசவி. “நாம இத்தனை சின்ன பொண்ணுங்க இருக்கோம். ரெண்டு தடியங்க வேற இருக்காங்க. எப்படி இங்க தூங்கறது ஆண்ட்டி? இவங்கள எப்படி நம்புறது? எனக்கு பயமா இருக்கு ஆன்ட்டி , ”என்றாள்
“ஒரே வழி இன்னைக்கு ராத்திரி இங்க தூங்குறது தான். பேசாம அப்படியே படுங்க” என்று ஒரு அதட்டல் போட்டாள் வசுமதி. அதற்குள் சிந்துஜாவின் போனில் நெட்வொர்க் கிடைக்க, எல்லோர் வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வசுமதி அவர்களுடன் இருந்தது பெற்றவர்களுகெல்லாம் பெரும் ஆறுதலாக இருந்தது. பயத்திலும், அலைச்சல், அழுகையிலும் சோர்ந்து போய் உறங்க ஆரம்பித்தார்கள் அந்தப் பெண்கள்..
காலை 7:00 மணிக்கு டிரைவர் சங்கர் குரல் கேட்டு விழித்தனர் அனைவரும். “விடிய விடிய மரத்தை அறுத்து எடுத்தானுங்கம்மா. கொஞ்சம் இடம் கிடைச்ச உடனேயே பூந்து வந்துட்டேங்கம்மா.” நிஜமான வருத்தத்துடன் நின்றிருந்தான் டிரைவர் சங்கர். வாரிசுருட்டிக்கொண்டு எழுந்து வண்டிக்கு ஓடினர் அந்த இளம் பெண்கள்..
“ஓ வண்டி வந்நு…….?” சிரித்தான் கிருஷ்ணன்.
“நாங்க வேகம் ஊர் போய்ச் சேரணும். வள்ளர நன்னி”, என்று இரண்டு 500 ரூபாய்த் தாட்களை எடுத்து அவர்களிடம் நீட்டினாள்.
“எந்தா அம்மே? எல்லாரும் நம்ம சேச்சிமாரு. நிங்கள் எங்களோட அம்மை மாதிரி. ரூபாய் எல்லாம் வேணாம் அம்மே.” பவ்யமாக மறுத்த அவர்களை வியந்து விடை பெற்றுக் கொண்டு வண்டி ஏறினாள் வசுமதி. இன்னோவா அணைக்கட்டை மறந்து திரும்ப ஊரை நோக்கிப் பறந்தது.
ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்கிற மிரட்சியில் அமைதியுடன் இருந்தனர் அனைவரும். தயா தான் வசுமதியைப் பார்த்துக் கேட்டாள்,“எப்படி ஆண்ட்டி இவ்ளோ பெரிய நெருக்கடியிலேயும் அமைதியா பயப்படாம மேனேஜ் பண்ணினீங்க?” அங்கிருந்த எல்லோர் மனதிலும் அந்தக் கேள்வி இருந்தது.
“ஒரு பிரச்சினை வந்திடிச்சு. என்ன பண்றது? “துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா” அப்படின்னு பாரதி சொன்னார் இல்லையா? அந்த மாதிரி தைரியமா எதிர் நோக்க வேண்டியது தான்!”
“ இருந்தாலும் ரெண்டு ஆம்பளைங்களுக்கு நடுவுல மாட்டினதுல நாங்க நடுங்கிப் போயிட்டோம்.” ஜனனி சொன்னதற்கும் பட்டென்று பதில் சொன்னாள் வசுமதி.
“ஆண்கள் எல்லாருமே அயோக்கியர்கள்னு யார் சொன்னது? நமக்கு இடம் கொடுத்து. அவர்கள் மழையில படுத்துகிட்டு, சமைக்க வழி பண்ணி எல்லாம் பண்ணவங்க நல்ல மனசுக்காரங்களா தானே இருக்கணும்? நம்பிக்கையும் தைரியமும் தாம்மா வாழ்க்கை.” கம்பீரமாகச் சொன்னாள் வசுமதி.
பாரதியைப் படிக்காத அந்த இளம் பெண்கள் அன்று வசுமதியிடம் இருந்து வாழ்க்கைப் பாடம் கற்றார்கள்.
ஆசிரியர் குறிப்பு
வயது 70
எழுத்தாளர், இதழாளர் ( 1997ல் இருந்து வெளி வரும் மகளிர் மாத இதழ்)
திருமதி கிரிஜா ராகவன் எழுத்தாளர், இதழாளர், ஊடகப் பிரமுகர்.
ஆசிரியர் ,வெளியீட்டாளர்-லேடீஸ் ஸ்பெஷல்.
புகழ் பெற்ற வை.மு.கோதை நாயகி அம்மாவுக்குப் பிறகு ஒரு மகளிர் மாத இதழின்பதிப்பாளராகத் திகழும் ஒரே பெண்மணி என்ற புகழ் வாய்ந்தவர் இவர்.
அமெரிக்கா,கனடா , ஜெர்மனி ,சீனா மலேசியா, குவைத் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.
11 புத்தகங்கள் வெளியீட்டுள்ளார். அவற்றுள் ஒன்று கவிதைப் புத்தகம். வெல்லலாம் வா செல்லமே
என்னும் புத்தகம் கவிதை உறவு
போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றுள்ளது

மிகவும் அருமையாக இருக்கிறது.. வாழ்த்துகள்.