
ஒரு நிமிடம்
பொறுத்திருங்கள்
ஒரே ஒரு நிமிடம்.
ஒரு மரத்திலிருந்து
பழுத்த இலை ஒன்று
விடை பெறுவது போல
இயல்பாய்
ஒரு விடைபெறல் நிகழட்டும்.
பூவைத் தேடி
வண்டின் வருகை நிகழ்வது போல
ஒரு காதல்
உங்களுக்கும் நிகழ்வதாக.
மெல்ல மெல்ல
முட்டி முகடு கிழித்து
ஒரு விதையிலை
வெளிப்படுவது போல
ஒரு புன்னகை
தன் நிலையில்
வெளிப்படட்டும்.
ஒரு நிமிடம்
ஒரே ஒரு நிமிடம்
நின்று நிதானியுங்கள்.
நெடுஞ்சாலையில்
அரளிச் செடிகளின் கையசைப்பில்
கரும்புகை வீசி
விடைபெறும்
வாகனப்பிசாசுகள் போல
நம்மை கடப்பவை
கடந்து போகட்டும்.
பனி விலக
சூரிய தரிசனம் தெரிவது போல
அக இருள் விலக
கொஞ்சம்
நிதானிக்கும்படி
உங்கள் மனசுக்கு
ஒருமுறை சொல்லுங்கள்.

ஆஹா. அருமை.