மனுஷ்ய புத்திரன் கவிதை

எனது மிக மோசமான நாட்களின்
ஒன்றான இன்று
என் செல்லப் பிராணியைத் தேடிப்போனேன்
நான் சாத்திக்கொண்டு படுத்திருந்த
அறையின் கதவை
அது தலையால் முட்டி திறந்துகொண்டு
என்னிடம் பாய்ந்து வந்தது

இன்று அதன் கண்களில்
என்மீதான விசுவாசத்தைக் காட்டிலும்
என் மீதான அன்பைக் காட்டிலும்
என் மீதான கருணையே மிகுந்திருந்தது

என் செல்லப் பிராணி
எப்படியோ எல்லாவற்றையும்
அறிந்துகொண்டுவிடுகிறது

நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பதை
நான் ஒரு விபத்தில் சிக்கி
தப்பினேன் என்பதை,
படித்த மூடர்களிடம்
மனம் சோர்ந்துபோனேன் என்பதை,
ஒரு திருமணப் பத்திரிகையை
ஒரு பிரிவுப் பிரகடனம்போல
பெற்றுக்கொண்டேன் என்பதை,
நான் இன்னொருமுறை
ஏமாற்றப்பட்டேன் என்பதை

என் உடல் வாசனையிலிருந்தே
எனக்கு நடந்தவை அனைத்தையும்
அது யூகித்துவிடுகிறது

எப்போதும் நான்தான்
அதை கையில் தூக்கிக்கொள்வேன்
இன்று அது
என்னைத் தூக்கிக்கொள்ள
போராடிக்கொண்டிருந்தது
தன் ஈரநாவால்
என்னை ஆழமாகத் தொடுகிறது

என் செல்லப்பிராணி பயப்படுகிறது
தனிமையில் விட்டால்
என் மனம் இன்னும் நொறுங்கிவிடுமென்று

ஒரு செல்லப்பிராணியால்
நமக்கு உதவமுடியாமல் இருக்கலம்
ஆனால் அது நம்மோடு இருக்கிறது
உறுதியாக
மிக உறுதியாக
மிகவும் உறுதியாக

15.7.2025
இரவு 10.14
மனுஷ்ய புத்திரன்