
மிகச் சிறிய குட்டை ஒன்று இன்னும்
வற்றாமல் இருக்கிறது என்னிடம்
சாகா வரம் பெற்ற மீன்களும்
தவளைகளும் பாம்புகளும்
சர்வ சுதந்திரமாக நீந்திக்
குளிக்கின்றன அதற்குள்
இரவானால் நிலாவும் நட்சத்திரங்களும்
பித்துப் பிடித்துப் போய்
வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன
நிலா சற்று பொடிப் பொடியாக உதிர்கிறது
ஒரு எரி நட்சத்திரம் தலை குப்புற குதித்து
நீர் சமாதி கொள்கிறது
வெள்ளத்தின் தாலாட்டை
தொலைத்த கூழாங்கற்கள்
தமக்குள் சிணுங்கி கொண்டிருப்பதையும்
ஈரத்தை பிரிந்த மணற் துகள்கள்
வெம்பிக் கொண்டிருப்பதையும்
இரவின் நிசப்தத்தில் காது கொடுத்து கேட்டால்
ஒரு காலத்தில் இங்கே
ஓடிக் கொண்டிருந்த மிகப் பெரிய
ஆற்றை நீங்கள் மறுபடியும்
காணக் கூடும்
