10 மார்ச், 1983
மரங்கள் செறிந்து, தனித்து ஒதுங்கிய பாதை யொன்று – மனிதச் சந்தடி , விலங்குத்தன்மை, நாகரீகத்தின் இழிந்த நிலை இவற்றிலிருந்து மிகத் தொலைவிலும், மனிதன் உண்டாக்கிய பொருட்கள் அனைத்திலிருந்தும் அடியோடு விலகியும் இருந்த பாதை அது. அங்கு எல்லாப் பொருட்களையும் அணைத்துத் தழுவிய அமைதியும், தெளிந்ததோர் உணர்வும், தொலைவின் உணர்வும், மண்ணின் அனைத்து ஓசைகளும் ஒருங்கிணைந்த உணர்வும் இருந்தது. நீர் அப்பாதையின் திருப்பத்தில் செல்லும் பொழுது புதர்கள், மரங்கள், சுவர்கோழிகள், பறவைகள், மற்றும் மண்ணின் பொருள் ஒன்றையும் தொந்தரவு செய்யாமல் சென்றீர். திடீரென்று இரண்டு அணில்கள் ஒன்றுடன் ஒன்று சச்சரவு செய்து கொண்டிருந்தன. ஒரு அணில் தன்னுடைய பொந்திற்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருக்கும் மற்றொரு அணிலை அங்கு வராமல் தடுத்து சண்டையிட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுது பொந்தின் உரிமையாளர் ஒருபாடாக வெற்றியடைந்ததும் அந்த மற்றொரு அணில் ஓடி மறைந்தது. மறுபடியும் அங்கு ஆழ்ந்த தனித்ததொரு அமைதி. மலையுச்சிக்கு செல்லும் அப்பாதையில் போகும் பொழுது முணுமுணுத்தவாறு மென்மையாக இறங்கி வரும் நீர் வீழ்ச்சியை நோக்கினீர். பேரழகும், எல்லையற்ற கண்ணியமும், மேன்மையும் நிலவியது. இந்த கண்ணியம் மனிதன் விழைந்தடையும் மேன்மை, தற்பெருமை, செருக்கு இவை போன்றதன்று. இச்சிறு பிராணியும் மனிதனைப் போலவே, தன்னுடைய சிறிய பொந்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறது, நாமும், நமது இனம், பண்பாடு, நம்பிக்கை வைத் திருக்கும் பொருட்கள், கற்பனை உருவம், மற்றும் நம்மை இக்கட்டுக்களிலிருந்து விடுவித்து நம்மை மீட்கக்கூடிய ஒருவர், அல்லது மேலதிகாரி என இவைகளுடன் ஒன்றிக்கொள்ள விழைகிறோம். ஏதாவதொரு பொருளுடன் ஒன்றிக்கொள்வது மனிதனின் இயற்கை எனக் காண்கிறது. ஒருக்கால் அச்சிறு பிராணிகளிடமிருந்து இந்த உணர்வு நமக்கு வந்திருக்கலாம். மீண்டும் அந்த அமைதியும், ஆழ்ந்த அத்தனிமையின் உணர்வும் அங்கிருந்தது. ஏன் இந்த ஒன்றுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மனிதனிடம் இருக்கிறது என்பது ஒரு வியப்பு, நம் உடலின் தேவைக்கான பொருள்கள் – உணவு, உடை, இடம் இவற்றுடன் ஒன்றிக் கொள்வதை ஒருவர் புரிந்து கொள்ளலாம். ஆனால் உள்ளூர, நம் மனத்திற்குள்ளும், நமது உடலுக்குள்ளும், சென்ற காலத்திலும், தலைமுறையாக வந்த பழக்க வழக்கங்களிலும், பல கற்பனை அல்லது புதுமைத் தோற்றங்களிலும், மற்றும் பலராக போற்றப் படும் அடையாளங்களிலும், மனிதன் தன்னை ஒன்றிக்கொள்ள முயல்கிறான். இவ்வாறு இணைந்து கொள்வதில் கவலையற்ற நிலையும், பாதுகாப்பில் இருக்கிறோம் என்ற உணர்வும், உரிமை தரும் உறுதியும் அவனுக்குப் பெரும் ஆறுதலைத் தருகின்றன. எல்லா விதமான பொய்த் தோற்றங்களிலும் அவன் ஆறுதலைப் பெறுகிறான். மனிதனுக்கு இவ்விதமாக பொய்த்தோற்றங்கள் தேவையெனக் காண்கிறது
தொலைவில் ஓர் ஆந்தையின் அகவல், எதிர்ப் பக்கத்திலிருந்து அதற்கான மறுகூவல். வைகறைப் பொழுது இன்னமும் முடியவில்லை . நாள் போக்கின் இரைச்சல் தொடங்கவில்லை, எங்கும் நிறைந்த அமைதி. காலைக் கதிரவன் எழும்பொழுது முன்பின் காணாத் தன்மையும், தூய்மையும் அங்கு இருக்கிறது. அமைதி கொண்ட அப்புத்தொளிக்கு ஓர் இறைஞ்சுதலும், பண்ணிசைப்பும் இயல்பாகவே இங்கிருக்கின்றன. அந்த அதிகாலையின் ஒளி அடக்கமாக இருந்தது. காற்றும் வீசவில்லை. தாவர வகையனைத்தும், எல்லாப பயிர்களும், மரங்கள், புதர்கள் அனைத்தும் அமைதியாக, அசைவற்றுக் காத்திருக்கின்றன. சூரியனின் எழுச்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. சூரியன் மேலெழும்புவதற்கு இன்னம் அரை மணி நேரம் ஆகக்கூடும். வைகறை தன் விந்தையான அசைவற்ற தன்மையை
மெல்ல மெல்ல மண் மீது விரித்தது.
உயர்ந்த அம்மலைச் சிகரம் சூரிய ஒளி படவும் தங்கமெனத் திகழ்ந்தது; அம்மலையின் மேலிருந்த தூய்மையான பனி, நாள் பொழுதின் சூரிய ஒளியால் பழுதடையாது தூய்மையாக இருந்தது.

அந்தச் சிற்றூரின் பாதைகளை விட்டு, நீர் மலையின் மேல் ஏறும் பொழுது, மண்ணின் ஒலியும், சுவர்க்கோழிகளின் கிறுகிறுப்பும், காடைப்பறவை மற்றும் பல பறவைகளின் கரைதலும், காலைப்பள்ளி எழுச்சியும், வளம் செறிந்த பண்ணிசையும் தொடங்கின. சூரியன் மேலெழும்பி வரவும், நீர் அவ்வொளியின் ஒரு பகுதியாகவே இருந்தீர். எண்ணம் சேர்த்து வைத்த நினைவுகளை எல்லாம் விட்டு விலகி, உம்மை முழுவதும் மறந்தீர். *ஸைகி தன் போராட்டங்கள்,துன்பங்கள் எல்லாம் துடைக்கப்பெற்று, வெட்ட வெளியானது. நீர் நடந்து செல்லும் பொழுதும், மலையேறும் பொழுதும், வேறானவர் என்ற உணர்வு இல்லை, ஒரு மனிதன் என்ற உணர்வுமில்லை . காலையின் மூடுபனி மெதுவாக அப்பள்ளக்தாக்கில் திரளத் தொடங்கியது, அடர்ந்து நெருக்கும் அந்தப்பனியும் மேன்மேலே வளரும் கற்பனையும், மனித வாழ்க்கையின் அறியாமையும் எல்லாம் நீங்களே! நீண்ட நேரத்திற்கு பின் நீர் இறங்கி வந்தீர். காற்றின் ஓசை, பூச்சிகளின் முணுமுணுப்பு , பல பறவைகளின் கூவல் அங்கே இருந்தன. கீழே இறங்கி வரவும் மூடு பனி வெளிவாங்கிக் கொண்டிருந்தது. தெருக்களும், கடைகளும் இருந்தன. வைகறையின் சிறப்பு விரைவாக மங்கிக் கொண்டிருந்தது. மனிதனுடன் மனிதன் வாக்குவாதங்களில் பிடிப்பட்டு இருக்கும் வழக்கத்தாலும், கட்சிப் பிரிவுகளின் வேற்றுமையாலும், கருத்துக்களின் வேறுபாடுகளாலும், போர் செய்வதற்கு வேண்டிய ஆயத்தங்களாலும், தன்னுடைய உள் மனத்தின் வேதனையாலும், என்றும் முடிவுறாத் துன்பத்தாலும், வேலை செய்யும் பழக்கத்தினாலும், மனிதன் கட்டுண்டு இருக்கிறான்; காலையின் வழக்கமான அலுவல்களை நீர் தொடங்கினீர்.
