புரியாத வயதில்/அனங்கன்

சிறுவயதில் சரோஜாதேவியை தீவிரமாய்க் காதலித்தேன்.
ஆனால் அவர் அன்பெல்லாம் எம்.ஜி.ஆரிடம்தான்
எனப்பல படங்களில் தெரிந்தபோது எண்ணத்தை
மாற்றிக்கொண்டேன்.

நடிகைகள் பெரும்பாலும்
படத்திற்கு ஒருவரைக் காதலித்ததால்
நம்பிக்கையற்றுப்போனேன்.

அதன்பிறகு புதிதாய் வந்த
கணக்குடீச்சரை காதலிக்கலாம் என்று தீர்மானித்த
நேரத்தில் அவருக்கு திருமணமாகிவிட்டது.

கோமதியிடம் கோனார் தமிழ்உரையைக்கொடுத்து
வளர்த்துக்கொண்ட ஒருதலைக் காதலில் மதிப்பெண்
குறைந்து வாழ்க்கை மாறிப்போனது.

மணமானபிறகு ஒரு மாறுதலுக்காய் மனைவியை
காதலிக்கத்
தொடங்கினேன்.

அவளுக்கும் என்போன்று புரியாதவயதில்
காதல் பிறந்திருக்கவாய்ப்பிருக்கிறது…
நெருக்கிக்கேட்டு அவளும்
எம்.ஜி.ஆரை காதலித்ததாய் சொல்லிவிடக்கூடுமானால்
எதற்கு வம்பு…

உயர்த்திப்பிடிக்கும் நியாயத்தராசில் எடைசாயும் பக்கும்
என்றுமே ஆண்களுக்கானதாயிருக்கும்போது…
சிலநேரங்களில் சில உண்மைகள் உறங்கிப்போவதுதான்
வாழ்க்கைக்கு அழகு.

10 Comments on “புரியாத வயதில்/அனங்கன்”

  1. அழகான கவிதை..
    ஆணாதிக்கம் சமீப காலங்களில் குறைந்திருக்கிறது என்றாலும் முற்றிலும் வற்றி விடத்தான் இல்லை.
    ஆண்கள் நோக்கில் காதலும், பெண்ணின் காதலை ஏற்றுக் கொள்கிற பக்குவம் இல்லாமையும் பெரிய உண்மை.
    எங்கள் பேராசிரியர் ஒருவர் சொல்வார் -“ஊரெல்லாம் தேடித்தேடி களங்கம் இல்லாத பெண்ணைத் தேடுவான் ஆண்மகன். அவன் அவளைக் களங்கப்படுத்துவதைத் தவிர வேறொரு காரணமும் இல்லை”.

    இந்த சமூகம் இப்படித்தான் இருக்கும்.

    இப்படி இருப்பதும் ஒருவகையில் நல்லது. நமக்கு வாசிப்பதற்கு அழகான கவிதைகள் கிடைத்துக் கொண்டிருக்கும்.

Comments are closed.