
ராமசாமி தன் வாய் பேசாத மகனான ராஜேஷை கூப்பிட்டுக்கொண்டு அவன் வைத்தியத்திற்காக குறைந்தது 10 மருத்துவர்களை பார்த்திருப்பார் .அவனுக்கு பேச முடியும் ஆனால் பேச மாட்டான் . கல்லூரி படிப்பை முடித்து 2 வருடமாக வீட்டில் தான் உள்ளான் . நன்றாக படிக்கும் பையன் ,ஆனால் கடந்த இரண்டு வருடமாக அவன் பேச்சு குறைந்துவிட்டது , அவரும் என்னவெல்லாமோ வைத்தியம் பார்த்தார் . ஒன்றும் கேட்கவில்லை .
ராஜேஷின் அம்மா அவன் 5 வயது குழந்தையாக இருக்கும் போதே தவறிவிட்டார் . எனவே வீட்டில் அவனும் அவன் அப்பாவும் தான் . அவர் பிரபல எழுத்தாளர் விக்ரமனின் வாகன ஓட்டுனராக பணி புரிகிறார் .
இப்படி வேலைக்கு போகாமலும் பேசாமலும் இருக்கும் மகனை நினைத்து அவர் வருந்தாத நாளே கிடையாது . இதை ஒரு நாள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று திரும்புகையில் இவருடைய மௌனமான கண்ணீரை பார்த்து கேட்டறிந்தார் விக்ரமன் அய்யா .உடனே “அவர் சரி ராமசாமி , நாளை உன் மகனை என் வீட்டிற்கு அழைத்து வா , “ என்றார் ..அவரும் சரி என்று கூறி கிளம்பினார் .
அடுத்த நாள் காலை , தன் மகனை கூப்பிட்டு கொண்டு அய்யா வீட்டிற்கு சென்றார் , அவர் உள்ளே நுழைந்ததும் அவருக்கு ஒரே ஆச்சர்யம் ,அது வீடா இல்லை நூலகமா என்று ,அவருடைய மாணவர்கள் சிலர் அங்கு புத்தகம் படித்துக் கொண்டிருந்தனர். இருவரையும் உள்ளே அழைத்து “ராமசாமி தினமும் அவனை நீ வேலைக்கு வரும்போது இங்கே விட்டுவிட்டு போ ,” என்று மட்டும் கூறினார் . அவரும் சரி என்றார் .
இவனுடைய இந்த ஆழ்ந்த மௌனத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை அறிய விரும்பினார் . அவருக்கு ஒரு அவசர வேலை இருந்ததால் ராஜேஷை உட்கார சொல்லிவிட்டு , அவர் ராமசாமியை வண்டியை எடுக்க சொல்லி புறப்பட்டார் ..
அவருடைய மாணவர்கள் அவர்கள் படிக்கும் வேலை முடிந்தவுடன் கிளம்ப தொடங்கினர் .அப்பொழுது தான் ஒன்று கவனித்தனர் . ராஜேஷ் உள்ளே வந்த நொடி முதல் தன் கைபேசியில் தான் இருந்தான் , அவனுக்கு நண்பர்கள் பெரிதாக கிடையாது என்பதால் அவனுக்கு அழைப்பு எதுவும் வரவில்லை ,ஆனால் தன் கைபேசியில் விடாமல் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்து விக்ரமன் அய்யாவிடம் கூறினார்கள் .அவரும் வீட்டிற்கு வரும்போது, யார் வருகிறார் போகிறார் என்பதை பார்க்காமல் கைபேசியை பார்த்துக்கொண்டிருந்த ராஜேஷை கவனித்தார் .
அப்பொழுது அவர் ராமசாமியிடம் “ராமசாமி உன் மகனின் பிரச்சனைக்கு என்னிடம் ஒரு தீர்வு உள்ளது , அதனால் அவன் இங்கேயே தங்கட்டும் ,சரி ஆன உடன் அவனே உன்னை தேடி வருவான்” என்றார் .
ராமசாமிக்கு இது முதலில் நம்ப முடியவில்லை , இருந்தாலும் அய்யா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பினார் .
அவன் கைபேசி வைத்திருப்பது தெரியும் ஆனால் இப்படி அடிமையானான் என்பது அவருக்கு தெரியாது ஏனெனில் காலையில் செல்பவர் அவன் தூங்கிய பின்னர் தான் வீடு திரும்புவார் .
அன்று இரவு ராஜேஷை சாப்பிட கூப்பிட்டு பொது அவன் தன் பாக்கெட்டில் இருந்து சார்ஜ்ரை எடுத்து சார்ஜ் போட்டுவிட்டு வந்தான் . இதன் மூலம் அவன் மனநலம் பாதிக்க பட்டவன் இல்லை என்பது நன்கு புரிந்தது . அவனை திருத்த ஒரு யோசனையும் கண்டுபிடித்தார் .
இப்படியே ஒரு வாரம் ஓடின , அவன் கைபேசியுடன் வாழ்ந்தான் மற்ற மாணவர்கள் கையில் புத்தகம் , இவன் கையில் கைபேசி ,எல்லோரும் இவனை வினோதமாக பார்த்தனர் . ராமசாமியும் பையனை பற்றி விசாரிக்கவில்லை ,எல்லாம் அய்யா பார்த்துக்கொள்வார் என்றிருந்தார் .
ஒரு நாள் விக்ரமன் அய்யா , ராஜேஷை அழைத்து தன்னிடம் இருந்த ஐபோனை கொடுத்தார் . அவனும் அதனை சந்தோஷமாக பெற்றுக்கொண்டான் ,ஆனால் அது கொஞ்சம் பழைய மாடல் , வாங்கும் போது அது ராஜேஷிற்கு தெரிந்திருந்தாலும் ஐபோன் மகிமை அவன் கண்ணை மறைத்தது . வாங்கிக் கொள்ளும் போது தெளிவாக சார்ஜ்ரையும் கேட்டு வாங்கிக் கொண்டான் .
ஒரு வாரம் கடந்தது , அவன் ஐபோன் உபயோகப்படுத்தும் மகிழ்ச்சியில் திளைத்த போது , விக்கிரமன் அய்யா அவர்கள் ஒரு நாள் அவனுக்கே தெரியாமல் அவன் ஐபோன் சார்ஜ்ர் மற்றும் பழைய போனை எடுத்து மறைத்து வைத்தார் . அன்று அவர் மாணவர்களை தன் வீட்டிற்கு அடுத்த நாள் வரும்படி கூறினார் .
அவர் அன்று எங்கும் போக வேண்டிய வேலை இல்லாததால் அவர் ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தார் . ராஜேஷ் தன் போன் சார்ஜ்ரை தேடு தேடு என்று தேடினான் , கிடைக்கவில்லை , வெறுப்புடன் எல்லாவற்றையும் கீழே தள்ளினான் .கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போல் நடந்துகொண்டான் , அவனுக்கு அய்யாவிடம் கேட்க பயம் ,வேறு ஒன்று வாங்க வேண்டும் என்றாலும் அப்பாவை அழைத்து கேட்க வேண்டும் , அவன் அப்பாவும் அங்கு இல்லை ஒரு வேலை விஷயமாக அய்யா அவரை வெளியில் அனுப்பி உள்ளார் . அங்கு கைபேசியும் கிடையாது தொலைபேசியும் கிடையாது . என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தான் .
சிறிது நேரம் கழித்துசும்மா உட்கார்ந்திருக்க வெறுப்பு வந்தது , எனவே தட்டி விட்ட புத்தகங்களை ஒவ்வொவொன்றாக எடுத்து அலமாரியில் அடுக்கி வைக்க ஆரம்பித்தான் . அப்பொழுது அவனையும் அறியாமல் ஒரு புத்தகத்தின் அட்டை படம் அவனை ஈர்த்தது அது தான் “எழுத்தாளர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன் – பாகம் 1” அதை எடுத்து படிக்க ஆரம்பித்தான் , அவன் தன் மனதிற்குள் முதல் முதலில் மௌனம் களைந்து பேச ஆரம்பித்தான் , “இது தான் பொன்னியின் செல்வன் புத்தகமா ? இதை வைத்து தான் படம் எடுத்துள்ளனரா ? ஒழுங்காக தான் எடுத்திருக்கிறார்களா ? என்று படித்து பார்த்து தெரிந்து கொண்டால் என்ன ? என்று நினைத்து படிக்க ஆரம்பித்தான் “
ஆரம்பித்தது தான் தாமதம் , அந்த புத்தகம் முடித்து அடுத்த பாகத்திற்கு சென்றான் அப்படியே அடுத்த அடுத்த புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தான் ,சாப்பிட போகும் போதும் கையில் புத்தகத்துடன் சென்றான் ,பிறகு தூக்கம் வர தூங்கி விட்டான் ,பிறகு அடுத்த நாள் காலை எழுந்து அடுத்த பாகம் படிக்க ஆரம்பித்தான் , ஒவ்வொரு நாளும் அவனுக்கு அந்த புத்தகங்கள் ஒரு இன்பத்தை கொடுத்தன .
பிறகு பிரபல எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை படிக்க ஆரம்பித்தான் , கைபேசியை முற்றிலுமாக மறந்தான் .இதை கவனித்த விக்ரமன் , அவனை கூப்பிட்டு இப்பொழுது அவனுக்கு என்ன ஆக வேண்டும் என்பதை கேட்டார் , அவன் “தங்களை போல நான் பெரிய எழுத்தாளர் ஆக வேண்டும் “ என்றான் .
அவர் சிரித்துக்கொண்டே “ராஜேஷ் நீ தாராளமாக எழுத்தாளர் ஆகு ,ஆனால் வருமானத்திற்கு என்ன யோசித்துள்ளாய் , உன் அப்பாவிற்கும் வயதாகிறது அல்லவா ? என்றார் .
அவன் முழித்தான் , அவர் உடனே “ராஜேஷ் , இந்தா என்று TNPSC புத்தகங்களை எடுத்து கொடுத்தார் , உன் எழுத்தாளர் ஆசை நியாயமானது ஆனால் அது உடனே நடக்காது , நீ நிறைய படிக்க வேண்டும் நிறைய எழுத வேண்டும் ,மனதில் சிந்திப்பதை வார்த்தையில் கொண்டு வர வேண்டும் ,அதற்கு பெரும் முயற்சி தேவை , நீ எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம் , படிக்கலாம் ,வேண்டும் என்கிற புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம் , உன்னுடைய இந்த மாற்றம் எனக்கு பெருமகிழ்ச்சி தருகிறது , ஒன்று நினைவில் கொள் ,புத்தகங்கள் நிரந்தரமான ஒன்று , இன்று வந்திருக்கும் அணைத்து தொழில்நுட்பங்களும் அந்த நிரந்தரமான ஒன்றிற்கு உதவி புரிபவை ,ஆனால் அதுவே உலகம் அல்ல “ என்றார் .
அவனுக்கு வாசிப்பும் புத்தகங்களும் ஒரு புதிய வாழ்க்கையை காட்டியது, தனக்கு என்ன வேண்டும் என்பதை யோசிக்க வைத்தது …
மடிப்பாக்கம் .
