செ. புனிதஜோதி கவிதை

உங்களிடம் சொல்லிக்கொள்ளாமலே
உங்கள் வீட்டிற்கு வந்திருந்தோம்.
நீங்கள் கண்ணாடிப்பேழையில்
படுத்திருந்தீர்கள்.

ஆனாலும், நீங்கள் எங்களை

அன்போடு அழைத்தீர்கள்;
எப்போதும் போல் கனிவோடு பேசினீர்கள்.
என் மகனின் நலம் விசாரித்தீர்கள்;
என் கணவரிடம் அவரின் அலுவலகப்

பணியைப் பற்றியும் கேட்டு அறிந்தீர்கள்.

எங்களால் தான் அந்த மௌனச் சொற்களோடு
உரையாட முடியாமல் கண்ணீர் விட்டோம்.

«கவிஞனுக்கு ஏதும்மா சாவு
அவன் தன் கவிசெட்டைகளுக்குள்
எந்நாளும் சிறகடிக்கும் பறவை» என்றீர்கள்.

எப்போதும் போல் உங்களிடமிருந்து
க விதைகளை பெற்றுக்கொண்டு,
தாளவொன்ன துயரத்தோடு விடைபெற்றோம்.