தீராத பிரச்சனை/ கொடவடிகண்டி குடும்பராவ்

தமிழில்: கௌரி கிருபானந்தன்

திரௌபதியை யாரும் ரம்பை என்று சொல்லவில்லையே தவிர, பத்து வருடங்களுக்கு முன்னால் அவளை அறிந்தவர்கள், “அவளுக்கென்ன? மூக்கும் முழியுமாக லட்சணமாக இருப்பாள்” என்று சொல்லுவார்கள். இப்பொழுதெல்லாம் அவள் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்தால், “சரிதான். எதைப் பார்த்துப் பண்ணிக்கொள்வார்களாம்? அவள் தந்தை கொடுக்கும் வரதட்சணையை பார்த்தா? அவள் அழகைப் பார்த்தா?” என்று உதட்டைப் பிதுக்குகிறார்கள். திரௌபதி மாறித்தான் போய்விட்டாள்.

ஏன் மாறமாட்டாள்? இருபத்தொன்பது வயது முடியப் போகிறது. இதுவரையில் திருமணம் நடக்கவில்லை. இனி நடக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. பி.ஏ. பாசாகி இருக்கிறாள். அண்ணன் சுப்புணியின் சம்பாத்தியத்தில் ஆயிரம் இன்னல்களுடன் குடும்பம் எப்படியோ ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே அவனுக்கு ஆறு குழந்தைகள். நோயாளி மனைவி. குழந்தைகளைப் பெறுவதற்குத் தவிர அந்தம்மாள் எப்போதுமே  நோயாளிதான். அந்த நோயாளி மனைவியைப் பார்த்துக்கொள்வதற்கு நோயாளி மாமியார். ஒரு தூறல் போட்டாலும், கொஞ்ச நேரம் தண்ணியில் நின்று வேலை செய்தாலும் கால் நரம்புகளை இழுத்துக்கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருப்பாள். மடி ஆசாரம் மிகுந்தவள் என்பதால் நாளில் பெரும்பாலும் தண்ணீரில் நின்று புழங்காமல் இருப்பது சாத்தியமில்லை.

கிழவருக்கு, அதாவது திரௌபதியின் தந்தைக்கு, சொத்து போனது முதல் மனநிலை சரியாக இல்லை. எப்போதும் வீட்டிலேயே உட்கார்ந்து இருப்பதால் வீட்டின் பிரச்சனைகள் எல்லாம் அவரை வருந்தச் செய்யும் போலும். எப்போதும் அவற்றைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருப்பார். சுப்புணி தந்தையை அவ்வபோது கடிந்துகொள்வான்.

“உனக்கு என்ன வந்தது? தீர்த்து வைக்கப் போகிறாயா? அல்லது உன்னால் தீர்க்கத்தான் முடியுமா?  என்ன நோய் வந்தாலும், என்ன கஷ்டம் இருந்தாலும் நாங்கள்தான் அவஸ்தைப் பட்டுகொண்டு இருக்கிறோமே. நேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக உட்கார்ந்துகொள். எந்தக் கவலையும் இல்லை என்று நினைத்துக்கொள்.”

கிழவருக்கு அதில் விருப்பம் இல்லை. மாடு உழுதால் மேலே உட்கார்ந்திருக்கும் காகத்திற்கு மூச்சிரைத்தாற்போல், உண்மையான சிரமத்தைச் சுப்புணி பட்டுக்கொண்டிருந்தால், அவன்பால் இரக்கம் காட்டுவதுபோல் கிழவர் முனகிக் கொண்டிருப்பார். இது போன்ற சூழ்நிலையில் சுப்புணி தன்னைக் கடிந்து கொண்டதும் அவருக்குத் தாங்க முடியவில்லை. உடனே மகள்மீது பாய்ந்தார்.

“உன் முகத்தைப் பார்த்தாலே விடியாது. நீ படித்து என்ன கிழித்தாய்? என் சொத்தை எல்லாம் உன்னைப் படிக்க வைப்பதற்கு தாரை வார்த்தேன். உன் படிப்பை வைத்துக்கொண்டு ஒற்றை ரூபாய் சம்பாதிக்க முடியுமா உன்னால்? அந்தப் பணத்தால் சுப்புணியை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்திருந்தால், அவனுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் கிடைத்திருக்கும். ஆயிரக்கணக்கில்! கடவுள் உன் தலையில் என்னதான் எழுதி இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருத்தன் கூட உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள முன் வரவில்லை. நொண்டி, முடம், கூன், குருடு எல்லோருக்கும் நிமிஷத்தில் கல்யாணம் முடிந்து போகிறது. உனக்கு மட்டும் ஆக மாட்டேன் என்கிறது. உனக்குக் கணவன் என்று ஒருத்தன் பிறந்து இருந்தால்தானே?”

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு  எல்லாம் திரௌபதியால் பதில் சொல்ல முடியும். ஆனால் என்ன பிரயோஜனம்? சுடுசொல் தாங்க முடியாமல் சிலசமயம் திரௌபதி அழுவாள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், “அழாதே. மூளை இல்லாதவனின் பேச்சைப் பொருட்படுத்துவார்களா?” என்று சமாதானம் செய்வார்கள். ஆறுதல் சொல்வது சுலபம். குறி பார்க்கத் தெரியாதவன் கல்லை விட்டெறிந்தாலும், அடிபட்டால் வலிக்கத்தான் செய்யும். மூளை இல்லாத மனிதனுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டு, மூளை இருக்கும் மனுஷியாக வருட கணக்கில் நாட்களைத் தள்ளுவது ரொம்பவும் கஷ்டம். டிப்ரெஷன், ஹிஸ்டீரியா போன்றவை மனரீதியான தொற்று நோய்கள். திரௌபதிக்கு சில சமயம் சந்தேகம் வரும், தனக்கு மூளை சரியாகத்தான் இருக்கிறதா என்று.

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பணிவிடை செய்வதற்கு தெம்பாக இருக்கும் ஒரே மனுஷி திரௌபதி மட்டும்தான். அவள் அந்த வீட்டில் செய்யும் வேலைகளை வேறு எங்கேயாவது செய்தால் மாதம் நூறு ரூபாயாவது தருவார்கள். ஆனால் சுப்புணியால் என்ன தர முடியும்? அவனுடைய வருமானமே நூற்றி இருபத்தைந்து ரூபாய்.

 அதனால் திரௌபதி வீட்டு வேலைகள் அனைத்தையும் தன் சொந்தத்திற்காகச் செய்வதாக நினைத்துக்கொண்டு செய்ய வேண்டும்.

துரதிருஷ்டம் என்னவென்றால், இந்த வீட்டில் உழைப்பைத் தவிர திரௌபதிக்கு சொந்தமானது எதுவும் இல்லை. இந்த வீடு தன்னுடையது என்றும், இந்த வீட்டில் தனக்கும் ஒரு இடம் இருக்கிறது என்றும் திரௌபதி நம்பிக்கையைத் துறந்து ஐந்தாறு வருடங்கள் ஆகிறது.

கிழவருக்கு முழுவதுமாக மூளை கலங்கிப் போவதற்கு முன்பு, “இவளுக்குக் கல்யாணம் ஆனால் தவிர எனக்கு நல்ல காலம் பிறக்காது. ஜாதகம் பார்த்த ஜோசியன் எல்லோரும் அதைத்தான் சொல்கிறார்கள்” என்று சுயபுராணம் பாடி வந்தார். காலப்போக்கில் அந்தப் பாட்டில் பல ஜோடனைகள் வந்து சேர்ந்து கொண்டன. “இவள் முகத்தைப் பார்த்துவிட்டுப் போனால் எவனும் சல்லிகாசுகூட தரமாட்டேன் என்கிறான். இவளுக்குக் கல்யாணம் ஆவது எப்போது? என் தசை மாறுவது எப்போது?” என்று விலகிப் போய்விட்டார்.

சுப்புணி வேறு விதமாக விலகிப் போனான். தங்கையைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், எப்படியாவது கல்யாணம் முடிந்து அவள் இந்த வீட்டை விட்டுப் போனால் பாரம் கொஞ்சம் குறையும் என்றும் சுப்புணி நினைத்து இருந்தால், திரௌபதிக்கு இவ்வளவு வருத்தம் ஏற்பட்டு இருக்காது. அவளும் படித்தவள்தான். நிலைமையைப் புரிந்துகொள்ளக் கூடியவள்தான். ஆனால் சுப்புணி அப்படி நினைக்கவில்லை. அவளுக்கு மூன்றாம் தரமான வரன்களை கொண்டு வந்து கல்யாணத்தை முடிக்க அவசரப்பட்டான். அழகும், குணமும் இல்லாத இடத்தில் பணத்திற்காகப் பத்தும் செய்பவர்களையே நாம் தாழ்வாக நினைப்போம். அழகும், குணமும், பணமும் கூட இல்லாத கழிச்சடை வரன்களை கொண்டு வந்து தங்கையின் மணத்தை முடிக்கப் பார்த்தான் சுப்புணி. அந்த வரன்களைப் பற்றித் தங்கையிடம் வாய்க்கு வந்தபடி பொய் சொல்லிப் பிடிபட்டு விட்டான். அவள் தங்களை விட்டு விட்டுப் போனால் போதும். பிற்பாடு அவள் கதி எப்படி ஆனாலும் சரி என்ற நிலைக்கு அண்ணன் வந்து விட்டான் என்று தெரிந்த பிறகு, திரௌபதி அண்ணனை வேற்று ஆளாக எண்ணி ஒதுக்கி விட்டாள். அவ்வளவு இயலாமை நிலையில் இருக்கும் திரௌபதி அண்ணனை வேற்று ஆளாக ஒதுக்குவதைத் தவிர வேறு எந்த விதமாக அவனுக்குத் தண்டனை கொடுக்க முடியும்?

கூடப் பிறந்தவள் என்ற அபிமானம் இல்லை என்றாலும் போகட்டும். தன் குழந்தைகளுக்கு, மனைவிக்கு, இன்னும் சொல்லப் போனால் மாமியாருக்குக்கூட சலிக்காமல் உழைத்துக் கொண்டிருப்பதற்காக அண்ணன் தன்பால் கொஞ்சமாவது நன்றி உணர்வைக் காண்பிக்கக் கூடாதா? அவன் சொன்னதற்குக் கட்டுப்பட்டு எந்தக் கழிசடையையாவது கல்யாணம் பண்ணிக்கொண்டு அவள் இந்த வீட்டை விட்டுப்  போய் விட்டால், மறுநாள் இந்தக் குடும்பத்தின் நிலை என்ன? அதைப் பற்றி அவன் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தானா?

தந்தையும், அண்ணனும் கூட அவளை விட்டு விலகிவிட்டப் பிறகு திரௌபதிக்கு அந்த வீட்டில் நெருங்கியவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? மனதில் இருப்பதை யாருடன் பகிர்ந்துகொள்ள முடியும் அவளால்? வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத வேதனை அவள் மனதைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது. இது அவள் வாழ்க்கையில் தீராத பிரச்சினை! கல்யாணம், பணம், சுதந்திரம்! இந்த மூன்றுமே ஒன்றோடு ஒன்று பிணைந்து சிடுக்காக இருந்தன.

தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் மனநோய்க்கு ஆளானது மற்றவர்களின் பார்வையில் சகஜமாக இருந்தாலும், அவள் விஷயத்தில் அது செயற்கையாக உருவான பிரச்சனைதான். ஏன் என்றால், இதே தந்தை முன்னாளில் படிப்புதான் அவள் வாழ்க்கைக்கு முக்கியம் என்பது போலவும், கல்யாணம் முக்கியம் இல்லை என்பது போலவும் பேசி வந்தார். அந்தக் காலத்தில் அவளைப் பண்ணிக் கொள்வதற்காக வீடு தேடி வந்த வரன்களை எல்லாம் அவர் அவமானம் செய்து அனுப்பிவிட்டு ஒதுக்கித் தள்ளினார். இப்போது அந்த விஷயம் அவருக்கு நினைவிலேயே இல்லை. ஆனால் திரௌபதிக்கு நினைவில் இருக்கிறது. அது மட்டுமே இல்லை. கணவன் இல்லை என்ற கவலை மட்டும்தான் என்றால் எந்தப் பெண்ணும் உருகிப் போய் விட்டிருக்க மாட்டாள். கணவன் இறந்து, விதவைக்கோலம் பூண்டு, கருங்கல் போன்று திடமாக இருக்கும் விதவைப் பெண்மணிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

ஆனால் இந்தச் சூழ்நிலையில் திரௌபதி இப்போது சாதாரண மனுஷியாக இருக்க முடியவில்லை. திருமணத்தைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. இந்தச் சூழலை விட்டு, இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் திருமணத்தைத் தவிர வேறு வழியும் இல்லை. திருமணம் ஆகி விட்டால் தன்னுடைய மற்ற பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஆனால் திருமணம் தான் நடக்கும் வழியாகத் தெரியவில்லை.

‘நான் மேகத்தின் மீது அமர்ந்துகொண்டு உண்மை என்னவென்று புரிந்துகொள்ளாமல் இருக்கிறேனா? அண்ணன் எனக்காகக் கொண்டு வந்த வரன்களைவிட உயர்வான வரன்கள் கிடைப்பதற்கு எனக்குத் தகுதி இல்லையா? அவன் என் தகுதியைச் சரியாகத்தான் எடைபோட்டானா? என்னைப் பற்றி நானே எவ்வளவுதான் தாழ்வாக மதிப்பீடு செய்து கொண்டாலும், மற்றவர்களுக்கு இன்னும் தாழ்வான கருத்து இருப்பது போல் தோன்றுகிறதே. என்ன காரணம்? இன்னும் எந்த அளவிற்கு குன்றிப் போவது? இதற்கு முடிவுதான் என்ன?’ சில சமயம் திரௌபதி யோசித்துப் பார்ப்பாள்.

ஒரு நாள் சுயநம்பிக்கை எல்லாம் காணமல் போய்விட்டது. ‘இந்த முறை எவனாவது கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று முன்வந்தால் கண்களை மூடிக்கொண்டு சம்மதித்து விடுகிறேன். நான் ஏன் கவலைப்பட வேண்டும்? முழுவதும் மூழ்கியபிறகு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன? யாரை திருமணம் செய்துகொண்டாலும் இதைவிட மோசமாக, தரித்திரமாக, மனநோய்க்கு இடமளிக்கும் விதமாக இருக்காது இல்லையா? ஏதாவது இருப்பனுக்குத்தான் இழந்து விடுவோமோ என்ற பயம் இருக்கும். ஒன்றும் இல்லாத தன்னைப் போன்றவள் இழக்கப் போவது என்ன? இந்த முறை எவன் வந்தாலும் பண்ணிக் கொள்கிறேன். இது நிச்சயம்’ என்று முடிவு செய்தாள்.

சோதிப்பது போல் திரௌபதிக்கு ஒரு வரன் வந்தது. வரனுக்கு ஐம்பத்தி ஐந்து வயது. சமீபத்தில் மனைவி இறந்து விட்டாள். ஐந்தாறு குழந்தைகள். தாய் தந்தை இருக்கிறார்கள். தந்தை பைத்தியம். தாய் நித்திய நோயாளி. மடி ஆசாரம் மிகுந்த விதவை சகோதரி உடன் இருக்கிறாள். வயதில் சின்னப் பெண்ணாகப் பண்ணிகொள்ளச் சொல்லி அந்தம்மாள் ஒரே ரகளையாம். இவர்தான் கொஞ்சம் உலகஞானம் இருப்பவர். முதிர்கன்னியைத்தான் பண்ணிக்கொள்வேன் என்று தீர்மானமாகக் கிளம்பி வந்திருக்கிறார். திரௌபதியை பெண் பார்த்துவிட்டுப் போனார்.

அவரைப் பற்றி எல்லா விஷயங்களையும் கேள்விப்பட்ட பிறகு திரௌபதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்தத் திருமணம் ஆனால் தன் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. இந்த வீட்டில் இருக்கும் மனிதர்களின் பிரதிபிம்பம்தான் அவர்கள். இவர்கள் தன்னை வேற்று மனுஷியாக நடத்தியது போலவே அவர்களும் நடத்தப் போகிறார்கள். எதற்காக இந்தத் திருமணம்?

“எனக்கு வேண்டாம் இந்த வரன்.” நாக்கு நுனிவரையில் வந்த வாரத்தையை வலுக்கட்டாயமாக அடக்கிவிட்டாள்.

மறுநாள் சுப்புணி செய்தியைக் கொண்டு வந்தான். அந்தப் பெரிய மனிதனுக்கு திரௌபதி ரொம்பவும் கச்சலாக, நோய் வாய் பட்டவள் போல் தென்பட்டாளாம். அவர் இன்னொரு வரனை, பதினெட்டு வயது பெண்ணைப் பண்ணிகொள்வதற்கு ஒப்புதல் தெரிவித்து விட்டாராம்.

அப்பூரி சாயாதேவி/அவருடைய புகழுக்குப்‌ பின்னால்‌ – விருட்சம் நாளிதழ்