
“எங்க அம்மா ஒரு ராட்சசி என்று வைத்துக்கொள் அத்தை. நாங்களாக இருக்கக் கொண்டு அவள் அதிகாரத்தின் கீழ் நலிந்து விட்டோம். வேறு யாராக இருந்தாலும் வீட்டைவிட்டுப் போயிருப்பார்கள்.”
சின்ன மகள் ரமா சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்ததும், ஹாலில் அடியெடுத்து வைக்கப் போன சுசீலா அங்கேயே நின்று விட்டாள்.
அன்று சுசீலாவின் கணவர் சுதாகருக்கு மணி விழா. மகள்கள், மாப்பிள்ளைகள், மகன், மருமகள், பேரன், பேத்தி… எல்லோரும் வந்திருந்து ஆர்பாட்டமாக நடத்தி வைத்தார்கள். குழந்தைகள் மூவரும் தொலைதூரம் என்று நினைக்காமல், முன்கூட்டியே வந்திருந்து, சந்தோஷமாக அந்த விழாவைக் கொண்டாடினார்கள்.
அதுவரையிலும் மகள்கள் இருவரும் தந்தை சுதாகர் தம்மை ஒரு வார்த்தை கடிந்து கொள்ளாமல், எவ்வளவு செல்லமாக வளர்த்து வந்தார் என்று சொல்லிப் பூரித்துப் போனார்கள். மகன் விஜய் தாய் சுசீலா தன்னை எவ்வளவு சிறப்பாக் வளர்த்தாள் என்று சொல்லிப் பெருமை பட்டுக் கொண்டான்.
மகள்கள் தந்தையை பாராட்டுவது, மகன் தாயை பாராட்டுவது இயற்கைதானே என்று நினைத்தாள் சுசீலா. மனம் முழுவதும் சந்தோஷம் பரவியது.
அழைப்பு பெற்று வந்த உறவினர்கள், நண்பர்கள் அந்தத் தம்பதியரை மனப்பூர்வமாக வாழ்த்தி, குழந்தைகளின் முன்னேற்றத்தைத் தெரிந்துகொண்டு, அவர்கள் அப்படி முன்னேறுவதற்குக் காரணமாக இருந்த சுசீலா மற்றும் சுதாகர் இருவரின் வளர்ப்பு முறையைப் பாராட்டினார்கள்.
எல்லோருடனும் வீடியோ, போட்டோ எல்லாம் முடிந்த பிறகு சுசீலாவின் மனம் திருப்தியால் நிறைந்து விட்டது. மறைத்துக் கொள்ள முடியாத திருப்தி அவள் முகத்தில் வெளிச்சமாக வந்து சேர்ந்தது. தாங்க முடியாத சந்தோஷத்தில் அவள் கண்கள் நட்சத்திரங்கள்போல் ஜொலித்துக் கொண்டிருந்தன.
விருந்துச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்த உறவினர், நண்பர்கள் எல்லோரையும் தனித்தனியாக விசாரித்து விட்டுக் களைத்து விட்டிருந்தாள் சுசீலா. புடவையை மாற்றிக்கொண்டு வருகிறேன் என்று மூத்த மகள் ராணியிடம் சொல்லிட்டு அறைக்குள் போன சுசீலா கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டாள்.
வந்தவர்கள் எல்லோரும் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டு, தாம் கொண்டு வந்த பரிசுகளை வழங்கியதில் சுசீலாவின் நெற்றியில் குங்குமப் பொட்டு பெரிதாகத் தென்பட்டது, வியர்வை அரும்பியதில் குங்குமம் நெற்றி முழுவதும் பரவி விடும் போல் இருந்தது.
காலையில் உடுத்திய பட்டுப் புடவையின் கனத்தால் கால்கள் இற்றுவிடும் போல் இருந்தன. குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, காட்டன் புடைவையை மாற்றிக் கொண்டு திரும்பவும் மேடையின் பக்கம் வருவதற்கு சுசீலாவுக்கு கொஞ்சம் அதிக நேரம் பிடித்தது.
விருந்தாளிகள் பெரும்பாலும் போய் விட்டிருந்தார்கள். சுதாகரும், குழந்தைகளும் ஓரிடத்தில் அமர்ந்து நெருங்கிய உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். உள்ளே வரலாம் என்று காலடி எடுத்து வைக்கப் போன சுசீலாவுக்கு…
“எங்க அம்மா ஒரு ராட்சசி என்று நினைத்துக்கொள் அத்தை” என்று சின்ன மகள் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள் பலமாகக் கேட்டன. அடியெடுத்து வைக்கப் போன சுசீலா அங்கேயே நின்று விட்டாள் வெளிறிப் போன முகத்துடன்.
தாழ்வான குரலில் தொடங்கிய ரமாவின் வார்த்தைகள் மேலும் பலமாக ஒலித்தன. “எல்லாவற்றுக்கும் சட்டம்தான். ‘இந்த வேலை இப்பொழுதுதான் செய்து முடிக்க வேண்டும். இந்த வேலையை இப்போ செய்யக் கூடாது. அது வேண்டாம். இதைச் செய்.’ அப்பப்பா! அம்மாவின் ராணுவ கட்டுப்பாடுகளுக்குச் செத்துப் போகாத குறைதான்.”
ரமாவின் பேச்சைக் கேட்டுத் திகைத்துப் போனாள் சுசீலா.
குழந்தைகளை ஒழுங்குமுறையுடன் வளர்ப்பது தவறா? படிப்பு, இசை, விளையாட்டு எல்லாவற்றுக்கும் ஒரு கால அட்டவணை போட்டு, அதனைக் கச்சிதமாகச் செயல்படுத்தும் விதமாகப் பார்த்துக் கொள்வது அதிகாரம் செலுத்துவதாகுமா? தான் அப்படி நடந்து கொண்டதால்தானே ரமா காம்பஸ் இன்டர்வ்யூவில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் சேர்ந்தாள். அந்த வேலையைப் பார்த்துத் தானே அவளுக்கு நல்ல இடத்திருந்து வரன் வந்தது என்று நினைத்துக் கொண்டிருந்த சுசீலாவுக்கு விஜயின் குரல் கேட்டது.
“போதுமே. பெண்பிள்ளை உன்னை மட்டும்தானா? ஆண்பிள்ளை ஆகிய எனக்கு மட்டும் எத்தனை தடைகள்? வெளியில் போனால் ‘எங்கே போகிறாய்? எதற்காகப் போகிறாய்? எப்போது வருவாய்?’ என்று பிடுங்கி எடுப்பாள். இன்ஜினியார் படித்துக் கொண்டிருந்தபோது கூட என் நண்பர்கள் எல்லோருடனும் தானே பேசிவிடுவாள். அவர்கள் என்னை ‘அம்மாக்கொண்டு’ என்று எப்படி நக்கலடிப்பார்கள் தெரியுமா?. அதனால்தான் இன்ஜினியரிங் முடித்தபிறகு மேலும் படி என்று சொனபோது கூட இந்த ஹிட்லர் ஆட்சியைத் தாங்க முடியாமல் வேலை தேடிக்கொண்டு அம்மாவின் இரும்புப் பிடியிருந்து விடுபட்டேன்.”
மகனின் பேச்சை மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சுசீலாவின் முகம் வெளிறி விட்டது. இந்த விஜய் ப்ளஸ் டூ படிக்கும்போது சுதீர் என்ற ரவுடி பயலுடன் நட்பு கொண்டு சிகரெட், குடி போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டான். அதைக் கவனித்து அந்த நட்பைத் துண்டித்து விட்டு, இருபத்தி நான்கு மணி நேரமும் மகன் பின்னாலேயே இருந்து, அவன் பார்வையை படிப்பின் மீது திருப்புவதற்கு தான் எவ்வளவு கஷ்டப் பட்டாள்!
அப்படிச் செய்ததால் தானே இன்று அவன் நல்லது கெட்டது உணர்ந்து கொண்டு வேலையில் சேர்ந்து மேலும் மேலும் முன்னேறி வருகிறான். அன்று தான் அப்படி நடந்துகொள்ள வில்லை என்றால் இன்று எங்கே எப்படி இருந்திருப்பானோ.
இவர்கள் இருவரின் பேச்சு இன்னும் முடியும் முன்பே மூத்த மகள் ராணியின் குரல் கேட்டது. மேலும் கவனமாகக் கேடகத் தொடங்கினாள் சுசீலா.
“சரிதான். அம்மாவின் ஹிட்லர் தனத்தை எல்லாம் தாங்கிக் கொண்டது நான்தான். மூத்த குழந்தை என்பதால் எல்லா பரிசோதனைகளும் என்மீதுதான். அவள் கிழித்த கோட்டை தாண்ட விட்மாட்டாள். உட்கார்ந்தால் குற்றம். நின்றால் குற்றம். ஏதாவது வாங்கித் தரச் சொன்னால், அதன் வரலாறை எல்லாம் அலசி ஆராய்ந்து, எதற்கும் லாயக்கு இல்லை என்று வாங்க விடமாட்டாள். அதுபோல் என் விருப்பு வெறுப்புகளை எல்லாம் எப்படி ஒதுக்கித்தள்ளிவிட்டாள் தெரியுமா?”
ராணியின் வார்த்தைகளைக் கேட்டுச் சுசீலா சிலையாகி விட்டாள்.
தான் செய்தவற்றை எல்லாம் மறந்து போய் எப்படி பேசுகிறாள் மகள்! அவள் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே உதவாக்கரை பயல் ஒருவனுடன் காதல் மாயையில் விழுந்தாள். அந்த மயக்கத்திலிருந்து அவளை வெளியில் கொண்டு வருவதற்கு தான் பட்ட பாடு அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட பெண்ணைப் பட்டப் படிப்புவரையில் படிக்க வைத்து, வங்கி தேர்வு பரீட்சைகளை எழுத வைத்து, வேலையில் சேரும்படியாகச் செய்து, நல்ல வரன் பார்த்து லட்சம் லட்சமாகச் செலவு செய்து திருமணம் செய்து வைத்த தன்னை இப்படி குற்றம் சொல்கிறாளே.
மூன்று குழந்தைகளையும் நல்லபடியாக வளர்த்து, படிக்க வைத்து நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தந்தால், அவர்கள் தன்னைப் பற்றி இந்த விதமாக நினைக்கிறார்களா? அவர்களுடைய பேச்சு அவள் உடலில் இருந்த சக்தியை முழுவதுமாக இழக்கச் செய்து விட்டது. அங்கேயே இருந்த ஒரு ஸ்டூல் மீது சரிந்து உட்காந்த சுசீலாவுக்கு இந்த முறை சுதாகரின் சொற்கள் காதில் விழுந்தன.
“உங்களுக்கு என்ன வந்தது? அவளுடைய கொடுங்கோல் ஆட்சியிலிருந்து வெளியேறி, உங்களுக்குப் பிடித்தாற்போல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கிட்டு இருக்கீங்க. ஆனால் எனக்கு மட்டும் உயிருடன் இருக்கும் வரையில் இந்தச் சிறைவாசம் தப்பாது. உறவினர்கள், நண்பர்களுக்கு இடையில் மனைவியின் ‘கைப்பாவை’ என்ற பட்டப் பெயர் என்னை விட்டு நீங்காது.”
அந்த வார்த்தைகள் காதில் விழுந்ததுமே சுசீலாவின் மனம் ஒரேதிரியாகக் கல்லாகச் சமைந்து விட்டது. சுதாகர்தானா இப்படிப் பேசியது? திருமணமான இந்த முப்பத்தி இரண்டு ஆண்டுகளில் ஒருநாளும் அவன் வாயிலிருந்து இது போன்ற வார்த்தைகளைக் கேட்டதில்லை. மேலும் ‘சுசீலா உன்னால்தான் நம் வீடு நிலைத்து இருக்கிறது. குழந்தைகள் முன்னுக்கு வந்தார்கள். எல்லாம் உன்னுடைய முயற்சிதான்’ என்று தன்னிடம் சொன்ன கணவன், தனக்குப் பின்னால் இதுபோல் பேசுகிறானே! அதாவது தன்னிடம் சொன்னதெல்லாம் பொய்தானா!
கடந்த முப்பத்து இரண்டு ஆண்டுகளின் வாழ்க்கை சுசீலாவின் கண்முன் நிழலாடியது. திருமணம் ஆகும்போது சுசீலா வேலையில் இருந்தாள். ராணி பிறந்ததுமே வேலையைவிட ஒரு தாயாகத் தன்னுடைய பொறுப்பு அதிகம் என்று உணர்ந்தவளாக வேலைக்கு ராஜினாமா கொடுத்தாள். அதன்பிறகு விஜய், ரமா பிறந்தார்கள். மூவரையும் கண்ணின் இமைபோல் காத்து வளர்த்தாள். சுதாகர் ஒரு நாளும் வீட்டு விஷயத்தில் தலையிட்டதில்லை. ஆபீஸ் விட்டால் நண்பர்கள், உறவினர்கள்… இவர்கள்தான் அவனுடைய பொழுதுபோக்கு. எதைப்பற்றியும் கவலைப் படாமல் இருந்தான். குழந்தைகளின் படிப்பு, திருமணம் எல்லாவற்றையும் அவள்தான் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. தானும் அந்தப் பொறுப்புகளை எவ்வளவு சந்தோஷமாக ஏற்றுக் கொண்டள்! இந்த உலகில் தன் ஒருத்திக்கு மட்டும்தான் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது போல் கண்ணும் கருத்துமாக அவர்களை வளர்த்து ஆளாக்கினாள்.
அதுபோல் பொறுப்புகளை எல்லாம் தன் தலையில் போட்டுக் கொண்டது, சுதாகருக்கு பத்து பேருக்கு நடுவில் அவமானமாக இருந்ததாமா?
ஆமாம். ஏன் தோன்றாது? அவன் தங்கையின் கணவன் வியாபாரத்திற்காக ஐந்து லட்சம் கடன் கேட்டபோது, குழந்தைகளின் எதிர்காலம் எப்படி என்று சண்டை போட்டு, சுதாகர் அந்தப் பணம் கொடுக்காமல் தடுத்து விட்டாள். தான் அப்படி நடந்து கொண்டதால் மாமியார் வீட்டில் எல்லோர்க்கும் எதிரியாகி விட்டாள். ஆனால் பிற்காலத்தில் அதுபோல் பணம் கொடுத்தவர்களுக்கு, நாத்தனாரின் கணவன் திருப்பிக் கொடுக்கவில்லை என்று புகுந்தவீட்டில் பேசிக் கொண்டார்கள். அது நினைவுக்கு வரவில்லையா?
அது பழங்கதை! ஆனால் சமீபத்தில் சுதாகர் ஒய்வு பெற்ற பிறகு வந்த பணத்தை குழந்தைகள் மூன்று பேரும் எதிர்பார்த்தபோது, தான்தானே ‘நமக்கும் வயதாகி விட்டது. எப்போ எந்தத் தேவை வருமோ? யாரையும் கேட்க முடியாது’ என்று அந்தப் பணத்தை வலுக்கட்டாயமாகப் பிக்ஸ்ட் டிபாசிட் போட வைத்தாள்.
குழந்தைகள் பணம் கேட்டபோது ‘உங்க அம்மா இப்படிச் சொல்லி விட்டாள்’ என்று தான் தப்பித்துக் கொண்டு, தவறு முழுவதையும் தன்மீது தள்ளிவிட்ட சுதாகர், அவர்களுக்கு நல்லவனாகி விட்டான். தான் ராட்சசியாகி விட்டாள்.
அந்தப் பக்கம் குழந்தைகளுக்கு ராட்சசி, இந்தப் பக்கம் சுதாகர் கண்ணோட்டத்தில் கொடுங்கோல்காரி. முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக உடல் ரீதியாகவும், மனதளவிலும் இந்த வீட்டுக்கும், குழந்தைகளுக்குத் தான் பட்ட சிரமத்திற்கு இறுதியில் தனக்குக் கிடைத்த பட்டம் இதுதானா?
மூடியிருந்த கண்கள் வழியாக வெளியேறிக் கொண்டிருந்த கண்ணீரை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் கூடச் சுசீலாவுக்கு வரவில்லை. அப்பொழுதே அவர்கள் முன்னால் சென்று, அவர்கள் பேசிய பேச்சுகளுக்கு அர்த்தம் என்னவென்று கூண்டில் நிற்கவைத்து கேட்க வேண்டும் என்று நினைத்த சுசீலா, ஏதோ யோசனையில் திரும்பவும் அந்த ஸ்டூல் மீதே உட்கார்ந்து விட்டாள்.
யாரை கேள்வி கேட்க நினைக்கிறாள்? தன் ரத்தத்தைப் பகிர்ந்து கொண்டு பிறந்த குழந்தைகளையா? அது சாத்தியம் தானா? எந்தத் தாயாக இருந்தாலும் குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போது கால்களால் உதைத்தால், அந்த வேதனையை எவ்வளவு சந்தோஷமாக அனுபவித்தாளோ. இப்பொழுது கூட அவர்கள் சொன்ன வார்த்தைகளை அதுபோலவே சந்தோஷமாக ஏற்றுக் கொள்வாளே ஒழிய, குழந்தைகள்மீது கோபம் கொள்ள மாட்டாள்.
சுசீலா பெருமூச்சு விட்டுக் கொண்டாள். குழந்தைகள் தன்னை பாராட்ட வேண்டும் என்று அவர்களை அப்படி வளர்த்தாளா? தன்னுடைய பொறுப்பாக நினைத்துச் செயல் பட்டாள். அம்மா அடித்து விட்டாள் என்று தாய் மீது கோபம் கொள்ளும் சிறுவனுக்கு, அம்மா ஏன் அடித்தாள் என்ற எண்ணம் வந்தால் தவிர அந்தக் கோபம் நீங்கி அம்மாவின் மீது அன்பு ஏற்படாது. சில சமயம் குழந்தைகள் அதை உணர்ந்து கொள்வார்கள். சில சமயம் அந்தத் தாய் வாழ்க்கையிலிருந்து நீங்கி விட்டாலும் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.
ஆனால் தாய் மட்டும் அப்படி உணரவில்லை என்று நினைக்கமாட்டாள். குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருப்பதற்காக அப்படித்தான் செயவாள். வேறு விதமாக நடந்துகொள்ள மாட்டாள்.
குழந்தைகளின் வார்த்தைகளுக்குத் தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்ட சுசீலாவுக்கு, சுதாகரின் பேச்சை எப்படி சமாதானம் செய்து கொள்வது என்று தெரியவில்லை. அவனைப் பற்றித் தெரியாமல் இல்லை. ஆனால் பத்து பேருக்கு நடுவில் நல்லவன் என்று பெயர் வாங்குவதற்காக மனைவியின் மீது பழியைத் தள்ளி விட்டான்.
அப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு எப்படி சமாதானம் தேடுவது? ஒருநாளும் முடியாத காரியம். எல்லோர் முன்னிலையிலும் நிற்க வைத்துக் கேள்வி கேட்டால் என்ன? அதனால் என்ன பயன்? உண்மை எப்போதும் சுடும். இது போன்ற சமயத்தில் பழைய நிகழ்சிகளை தோண்டி எடுத்து, உண்மையை வெளிப் படுத்துவதால் எந்த நன்மையையும் நேரப் போவதில்லை.
பின்னே என்னதான் செய்வது? தன்னையே கேட்டுக் கொண்டாள் சுசீலா. ஒரே ஒரு வழிதான் அவளுக்குத் தோன்றியது. அதுதான் மன்னித்து விடுவது! ஆமாம்… அவனை மன்னித்து விட்டு விட வேண்டியதுதான். கணவனை நிற்க வைத்துக் கேள்வி கேட்காமல் இருப்பதால், வீட்டின் மான மரியாதையைக் காப்பாற்றியவள் ஆவாள். அதைவிட தனக்கு வேறு என்ன வேண்டும்? அதற்கு முதலில் தன்னைத்தான் எந்த அளவுக்கு ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தபோது சுசீலாவின் இதழ்கள்மீது வறண்ட முறுவல் வந்து சேர்ந்தது.
பெரியவர்கள் சும்மா சொல்லவில்லை. மனைவி என்பவள் தாய் போல் வயிற்றை நிரப்ப வேண்டும், அமைச்சர்போல் அறிவுரை வழங்க வேண்டும், தாசி போல் பணிவிடை செய்ய வேண்டும். ‘க்ஷமயா தரித்ரி’… பூமாதேவி போன்று பொறுமையை கடைப் பிடிக்க வேண்டும்.
பெரும்பாலான இல்லத்தரசிகள் போலவே தானும் அந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்று நினைத்தபடி, மனதை ஒரு நிலை படுத்தி, வலிந்த சிரிப்பை உதட்டில் ஒட்ட வைத்துக் கொண்டு ஹாலுக்குள் அடி எடுத்து வைத்தாள், ராட்சசி சுசீலா!
பிரகாஷை காணவில்லையாம்!/வாரணாசி நாகலட்சுமி – விருட்சம் நாளிதழ்

Very good narration.