
அழகியசிங்கரின் இன்றைய சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது ஐந்து கவிதைகள்
காலாற நடக்கும் கரை
———
உழைத்துக் களைத்த உடல்
ஓய்ந்து படுப்பதற்கும்
எழுந்து நடப்பதற்கும்
ஏற்பட்ட கடற்கரை
காதலர் சேர்வதற்கும்
கடும்தீனி அரைப்பதற்கும்
மாறிய கோலத்தால்
மண் வாசம் போனது
கரை தாண்ட முடியாத
அலையெல்லாம் நுரை தள்ளி
கோபத்தில் கத்துவது
காதுகளில் கேட்கலையா
சுற்றுப் புறம் பார்த்து
சுகாதாரம் காத்து
காற்றின் குரல் கேட்டு
கடற்கரையைப் பேணிடுவோம்
——-
வேர் வைக்கும் ஆசைகள்
———
வேர் வைக்கும் ஆசைகளை
வேர்வை ஊற்றி வளர்த்தால் தான்
நீண்டு மரமாகும்
நின்று நிழலாகும்
பூவாகிப் பிஞ்சாகிக்
காயாகிக் கனி ஆகும்
ஆகாயக் கோட்டைகளை
ஆயிரமாய்க் கட்டி விட்டு
சும்மா கிடந்திருந்தால்
சுவர் கூட எழும்பாது
அஸ்திவார எண்ணத்தை
ஆழமாய்ப் போட்டு விட்டு
சிறுகக் கட்டுவதில்
செயலைச் செலுத்தி விட்டால்
பெருக வாழ்ந்திடலாம்
பெருமை சேர்த்திடலாம்
——
எரிமலைக் குழம்பாய் –
———
உப்புப் பற்றாது என்று
உணவுத் தட்டை
தூக்கியெறியும் கணவனிடமும்
இந்தச் சுடுகாட்டில்
எரிக்காதே உடலை என்று
தடுக்கும் சாதிக் கனவானிடமும்
காசைக் கொடுத்தாச்சு
ஒழுங்கா ஓட்டுப் போடு என்று
மிரட்டும் அரசியல் பணவானிடமும்
எதிர்த்துப் பேச முடியாமல்
உள்ளுக்குள் குமுறும் அந்த
உணர்ச்சிகள் வெடிக்கும் போது
எரிமலைக் குழம்புதான்
புரட்சிப் பூகம்பம் தான்
புதியதோர் உலகம் தான்
——
அவள் அப்படித்தான்
———
கோபத்திலும் வேகத்திலும்
கொஞ்சம் கூடுதல் தான்
தாபத்திலும் தவிப்பிலும்
கொஞ்சம் கூடுதல் தான்
அன்பிலும் அறிவிலும்
கொஞ்சம் அதிகம் தான்
அழகிலும் ஆற்றலிலும்
கொஞ்சம் அதிகம் தான்
அழுவதிலும் சிரிப்பதிலும்
அவள் அப்படித் தான்
அணைப்பதிலும் பிரிவதிலும்
அவள் அப்படித் தான்
———-
வீழ்த்தி விளையாடும் காதல்
————
விளையாட்டா வினையா
வீழ்தலா எழுதலா
காதலுக்குத் தெரியாது
கண்ணில்லை அதற்கு
எண்ணமும் செயலும்
இருப்பது நமக்குள்ளே
வளர்ந்த முறையும்
வாழும் முறையும்
வளர்க்கும் ஹார்மோன்
வசத்தில் விழுந்து
கண்ணீரில் குளிக்கையில்
காதல் என்ன செய்யும்
——-
