திருப்பாவை பாடல் 13/திருவெம்பாவை பாடல் 13


திருப்பாவை பாடல் 13


புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

விளக்கம்:

கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?


திருவெம்பாவை
பாடல் 13

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பொருள்:

கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் நமசிவாய என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

விளக்கம்:

கரிய நிறம் கொண்டவள் அம்பிகை. இதனால் தான் அவளை சியாமளா என்கிறோம். சியாமளம் என்றால் கருநீலம். சிவந்த நிறமுடையவர் சிவபெருமான். மாணிக்கவாசகர் தன் தெய்வீகப் பார்வையால் கரிய குவளை மலர்களை அம்பிகையாகவும், தாமரையை சிவனாகவும் பார்க்கிறார். சாதாரண குளத்தில் உடல் அழுக்கு நீங்கும். பக்தி குளத்தில் மன அழுக்கு நீங்கும் என்பது அவரது இனிமையான கருத்து.

நன்றி : தினமலர்

திருப்பாவை பாடல் 12/திருவெம்பாவை பாடல் 12 – விருட்சம் நாளிதழ்