
பளபளவென்று மின்னுகிற பிளாஸ்டிக் பெட்டியில் அந்த பார்க்கர் பேனாவைப் பார்த்த விநாடியிலேயே தீர்மானித்துவிட்டேன் – கிருஷ்ணனுக்கு இதைத்தான் வாங்கிப் போக வேண்டும். வேறு பொருட்களே யோசிக்கத் தோன்றவில்லை. கிருஷ்ணனுக்கு இதைவிடப் பொருத்தமான பரிசு இருக்கவே முடியாது. அவனுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.
ரொம்ப நாள் முன்பிருந்து – ரொம்ப என்றால் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் பிறக்கும் முன்பிருந்து அவன் சொல்கிற வசனம் எனக்கு மனப்பாடம்
“இதை வாங்கணும்ன்னு ரொம்ப ஆசைடா பாலா, என்ன பண்ண, டைம் ஒத்துவரமாட்டேங்குது.”
ஒத்துவராதது நேரம் இல்லை. பணம். நூற்றி “சொச்ச ரூபாய்கள் கொடுத்து ஒரு ஒரே ஒரு பேனா வாங்குவதென்பது அப்போது எங்களுக்கு வசதிப்படவில்லை. வீட்டில் கேட்டால் கட்டி வைத்து
மூன்று நாளைக்கு உதைப்பார்கள்.
அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் கிடைத்தால் அன்று அதிர்ஷ்ட தினம். மற்ற நாட்களில் அதிகபட்சமாய் ஐம்பது காசு கிடைக்கும். அவ்வளலாய்த் தேவைகளும் இல்லாத காலம் அது. அதிக பணம் கையில் புழங்குவதற்கான அவசியங்களே இல்லை. எட்டணா காசு கொடுத்தால் பேன்ட் பாக்கெட் நிறைய வேர்க்கடலை கிடைக்கும். கொறித்துக்கொண்டே நடந்தால் பத்து நிமிடத்தில் ஸ்கூல், பர்க்கெட்டில் பாக்கி சில்லறை தேறினால், கோணப் புளியங்காய், எலந்தப்பழம், கமர்கட் என்று வினோதப் பெயரில் பண்டங்களை கயிற்றுக் கட்டிலில் விரித்திருப்பதை வாங்கி வயிற்றைக் கெடுத்துக்கொள்ளலாம். ரொம்ப போரடித்தால், வெள்ளை வெளேர் தாடியுடன் ‘மிட்டாய் தாத்தா’ விற்கிற பலவண்ண ஜவ்வு மிட்டாயில் வாட்ச்சோ தேளோ செய்து கையில் ஒட்டிக்கொள்ளலாம்.
முன்சொன்ன அதிர்ஷ்ட தினங்களில் ஒரு ரூபாய் கொடுத்து கலர்கலராய் திரவங்கள் ஊற்றின முலாம்பழ ஜூஸ் சாப்பிடமுடியும். சந்தோஷமாய் ஸ்கூலுக்குள் போய்விட்டால் மாலைவரை வெளியே வருவதில்லை. எப்போதாவது டிபன் பாக்ஸ் எடுத்து வராத நாட்களில் மதியம் சாப்பிடவென்று வெளியே வருகிறபோதுகூட வேடிக்கைக்கெல்லாம் நேரம் இருக்காது. பரபரவென்று வீட்டுக்குப் போய் ‘மெதுவா சாப்பிடேண்டா கடங்காரா’ என்கிற திட்டுக்களை வாங்கிக்கொண்டு அரக்கப்பரக்க சாப்பிட்டுவிட்டு திரும்ப ஓடி வரத்தான் நேரம் சரியாயிருக்கும். ஸ்கூல் முடிந்து திரும்பி வருகிறபோதும் அந்த கயிற்றுக் கட்டில் கடைகள் அதே பரபரப்பில் இருக்கும். ஆனால், ட்யூஷன் என்று ஓட வேண்டியிருக்கும். அது முடிந்து வீட்டுக்குப் போனபிறகு வேறென்ன செலவு இருக்கிறது?
வருடத் துவக்கத்தில் அப்பா நோட்டுகள் வாங்கித் தந்துவிடுவார். இடையில் நோட் ஏதும் தீர்ந்துபோனால் தீர்ந்த நோட்டை அவரிடம் காட்டி நிரூபித்தாக வேண்டும். அதன் பிறகு மறுநாள் காலை அவராய் நோட்டு வாங்கிவருவார், புத்தகம், ஜாமின்ட்ரி பாக்ஸ், சார்ட், பென்சில் எதுவானாலும் இப்படியே., யோசித்துப் பார்க்கிறபோது என் கையில் காசு புழங்கக் கூடாது என்பதில் அப்பா ரொம்ப கவனமாய் இருந்ததாய்த் தோன்றுகிறது. ஏன்?…
கெட்டுப்போவேன் என்கிற பயமா? இருக்கலாம்., அப்படிக் கையில் பணம் புரண்டிருந்தால் வீணாய்ப் போயிருப்பேனோ! நண்பர்களுடன் ஊர் சுற்ற, கண்ட சினிமாப் படங்கள் பார்க்க, கெட்ட பழக்கங்கள் பழக என்று நிறைய வாய்ப்புக்களை இந்தப் பணம் உண்டாக்கித்தந்து ஆசை காட்டி என்னைக் கவிழ்த்திருக்குமோ? இன்றைக்கு என்ஜினியராய் கை நிறைய சம்பாதிக்கிறதில்லாமல், ஏதும் பட்டறையில் லேத் துடைக்கப் போயிருப்பேனோ? நான் அத்தனை பலமில்லாதவனா? அல்லது அந்த வயது என் நல்லதுகளையெல்லாம் தாற்காலிகமாய் மங்கச் செய்து மினுமினுப்பாய் கெட்டதை என்னுள் நுழைத்திருக்குமோ? நிகழாத சம்பவங்களைக் கற்பனை செய்துபார்ப்பதில்தான் எத்தனை ஸ்வாரஸ்யம்!
சொல்லவந்ததை விட்டுவிட்டு ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்த காலகட்டத்தில்தான் நானும் கிருஷ்ணனும் நெருங்கின நண்பர்களாய் இருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து ஸ்கூலுக்குப் போகிற வழியில்தான் அவன் வீடு இருந்ததால் தினமும் நாங்கள் ஒன்றாக நடந்துபோனோம், ஒன்றாக ட்யூஷன் போனோம். தேர்வு சமயங்களில் ஒன்றாகப் படித்தோம், ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு ஒன்றாக ‘தளபதி’ பார்க்கப் போய், ஒன்றாக வீட்டில் மாட்டிக்கொண்டோம்.
அவன் வீட்டிலும் கிட்டத்தட்ட எங்கள் வீடுமாதிரியான சூழல்தான். அவனுக்கும் காசு கொடுப்பதில்லை. அவனுக்கும் என்போலே சுயமாய் செலவுகள் செய்கிற ஆசையும், வீட்டாரின்மீதான ஆதங்கமும் இருந்தது. இதனால் நாங்கள் இன்னும் நெருங்கினோம். காசு தராத வீட்டாரை பரஸ்பரம் திட்ட சந்தோஷப்பட்டுக்கொண்டோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடை வீதிப்பக்கம் போகிறபோது நாங்கள் வாங்க விரும்புகிற பொருட்களை ஆசைஆசையாய்ப் பார்ப்போம். சிவசமயம் தைரியமாய்ப் போய் விலை கேட்டுவிட்டு “எடுத்து வைங்க, இதோ, பணம் கொண்டு வரோம்” என்று சொவ்விவிட்டு கடையைவிட்டு வெளியே வந்ததும் -பெருமூச்சைப் பரிமாறிக்கொள்வதும் உண்டு. கிருஷ்ணள் எனக்கும். நான் அவனுக்கும் ஆறுதல் சொல்லிக்கொள்வதாய் அந்தப் பயணங்கள் முடியும்.
இப்படியான ஒரு கடைவீதி உலாவில்தான் கிருஷ்ணள் அந்தப் பேனாவைப் பார்த்தான். நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாய் மின்னுகிற பார்க்கர் பேனா . அதைப் பார்த்தவுடன் அவன் சொன்ன அதிர்ச்சி கலந்த ‘ஹா’ இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. திறந்த வாய் மூடாது அதையே பார்த்துக்கொண்டிருந்தவன், சலனயில்லாது கண்கள் அந்தப் பேனாவில் நிலைத்திருக்க மெல்லமாய்ப் பேசினான் “பாலா, அந்த பச்சைக் கலர் பேனாவைப் பார்த்தியா? எவ்ளோ அழகா இருக்கு. இல்லை?”
நான் அப்போதுதான் அந்த பேனாவைப் பார்த்தேன். அருமையாய் இருந்தது, பெட்டிக்குள் அதை வைத்திருந்த அழகிலேயே ஒரு கம்பீரம் தெரிந்தது. ஒரு கற்பனை சிம்மாசனத்தில் அது கால்மேல் கால்போட்டு அமர்ந்திருப்பதாய் உணர்ந்தேன், ”ஆமாண்டா, சூப்பரா இருக்கு’ அப்போது தெரிந்த மிகையான அழகைச் சொல்கிற ஒரே வார்த்தை அதுதான்.
“என்ன விலைடா இருக்கும்?”
நான் பதில் சொல்லாது அருகில் போய்ப் பார்த்துவிட்டுவந்தேன். அப்போது அதன் விலை நூற்று இருபத்தைந்து ரூபாயோ என்னவோ, சரியாக நினைவில்லை. ஆனால் சர்வ நிச்சயமாய் எங்கள் பொருளாதார நிலைமைக்கு பல படிகள் மேலே. ஒன்றும் பேசாமல் கடையைவிட்டு வெளியேறினோம்.
கிருஷ்ணன் அந்தப் பேனாவை எந்த அளவு நேசித்தான் என்பது எனக்குமட்டும்தான் தெரியும். கேட்பதற்கு உங்களுக்கு வேடிக்கையாகக்கூட இருக்கலாம். ஆனால் அந்த வயதில் இனம் புரியாத ஒரு பற்றுதல் அவனுக்கு அந்தப் பேனாமீது
உருவாகியிருந்தது உண்மை. அந்த கடைப்பக்கம் போகிறபோதெல்லாம் உள்ளே நுழைந்தாகவேண்டும் என்று அடம்பிடித்தான். உள்ளே போய் ஒன்றும் செய்வதில்லை. வெறுமனே அந்தப் பேனாவைப் பார்த்துக்கொண்டிருப்பான், அதோடு சரி. ஒன்றிரண்டு முறை கடைக்காரரிடம் தைரியமாய் கேட்டுப்பார்த்தாயிற்று. “இதேமாதிரி டிசைன்லே விலை கம்மியா எதுனா பேனா இருக்கா?” – அவர் ரெடிமேடாய் ஒரே பதில்தான் சொல்வார். “இல்லை தம்பி, இது ரொம்ப உசத்தி கம்பெனி. இதிலே நூறு ரூபாய்க்குக் கீழே பேனாவே இல்லை.”
அவருக்கும் எங்கள் ஆசையும், இயலாமையும் புரிந்ததால்தான் ஒவ்வொரு முறையும் முகம் சுளிக்காது. எரிந்துவிழாது பேசினார் என நினைக்கிறேன். தெரிந்த பதில்தான், என்றாலும் கிருஷ்ணன் முகம் சுண்டிப்போகும்.
பரிதாபமாய் அவரைப் பார்த்துவிட்டு ஒரு அடிபட்ட பார்வையுடன் கடையைவிட்டு வெளியே போய்விடுவான். நான் பின்னாலே ஓட நேரும். அதன்பின் குறைந்தது அரைமணி நேரத்திற்காவது அவனிடமிருந்து பேச்சே வராது. வெறுமையான பார்வையில் ஏதுமற்ற சூன்யத்தை வெறித்துக்கொண்டிருப்பான். சகஜ நிலைக்கு வந்தபின் கேட்டால் ”ப்ச், அது பத்தி மட்டும் பேசாதே பாலா” என்பான்.
இயலாமை அவனைக் கொன்றுகொண்டிருந்தது. ரொம்ப மாறிப்போனான். கலகலப்பு குறைந்துபோனது. எதிலும் ஆர்வம் இல்லாதவனாய் ஸ்கூல் போவது, படிப்பது, வீட்டுக்கு வருவது யோசிக்கிறபோது ஆச்சர்யமாயிருக்கிறது. ஒரு பேனாமீது என்று கோடு போட்டதுபோல நடக்கஆரம்பித்தான். இப்போது கொண்ட ஆசை ஒரு மனிதனை இத்தனை பாதிக்குமா? அப்படியானால் காதலர்கள் அனுபவிப்பதாய்ச் சொல்கிற அவஸ்தைகள் எல்லாம் உண்மைதான் போலிருக்கிறது!
கிருஷ்ணனுக்கு அவன் அப்பாவிடம் கேட்கவும் பயம், அதே சமயம் அந்தப் பேனாவையும் அவனால் மறக்கமுடியவில்லை. எனக்கும் அவனை நினைக்கக் கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது, ஆனால் என்னாலும் எதுவும் செய்யமுடியவில்லை. ஏதேனும் அதிசயம் நடந்து கிருஷ்ணனுக்கு அந்த பேனா: கிடைத்துவிடவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.
அந்த அதிசயம் என் மூலமே நடந்தது. டென்த் பரீட்சை முடிந்து ரிசல்ட் வெளியானபோது கிருஷ்ணன் எங்கள் பள்ளியிலேயே முதலாவதாய் மார்க் வாங்கியிருந்தான்.. அவன் அப்பாவுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. கிருஷ்ணனை தலைக்கு மேல் தூக்கி முழுசாய் மூன்று சுழற்று சுழற்றினார். அதிகம் படிக்காத அவருக்கு மகன் நல்ல மார்க் வாங்கியதில் அடக்க மாட்டாத பெருமை. மகனைப் புகழ்ந்து ஆசிரியர்கள் பேசினதில், பாராட்டினதில், “இன்னும் நிறைய சாதிக்கப் போறான்’ என்று வாழ்த்தினதில் அவரின் சந்தோஷம் பலமடங்கானது. அவருடைய அரிசி மில்லில் வேலைசெய்கிற அனைவருக்கும் மூன்று வகை இனிப்போடு விருந்து கொடுத்தார். எல்லோரும் நிறைவாய்ச் சாப்பிட்டுவிட்டு கிருஷ்ணனை உச்சிமுகர்ந்து சந்தோஷமாய்ப் அப்போதுதான் கிருஷ்ணனின் அப்பா அவனிடம் கேட்டார் ”கண்ணா, சந்தோஷத்திலே உன்னை மறந்துட்டேனே. உனக்கு
என்னடா வேணும்? கேளு, அது எதுவா இருந்தாலும் வாங்கித் தரேன்!”
கிருஷ்ணன் பேசுமுன் நான் பேசினேன். “என்னங்க நீங்க, இதையெல்லாம் அவன்கிட்டே ‘கேட்கிறீங்க? அவனுக்கு என்ன வேணும்ன்னு நான் சொல்றேன் வாங்க.”
அடுத்த அரைமணியில் கிருஷ்ணனுக்கு அந்த பார்க்கர் பேனா கிடைத்தது. அவனால் பேசவே முடியவில்லை. முகம்முழுக்க சந்தோஷம் பொங்கிவழிந்தது. பரீட்சையில் முதலாவதாய்த் தேறினதோ, பள்ளி முழுக்க அவன் பெயர் சொல்லிப் பாராட்டினதோ, உள்ளூர்ப் பத்திரிகை நிருபர் ஃபோட்டோவுடன் அவனைக் குட்டியாய் ஒரு பேட்டி எடுத்துப்போய், அது மறுநாளைய தினசரியில் பிரசுரமாகப்போவதோ இப்படி அவன் சாதித்த எதுவும் அந்த சந்தோஷத்திற்குக் காரணமில்லை. இவற்றோடு ஒப்பிடுகிறபோது ஒரு அற்பப் பொருள் ஒரு பேனா – அவன் வனத்தில் பூக்களாய்க் குவித்ததென்றால் மனித மனத்தை என்னவென்று வர்ணிப்பது? கிருஷ்ணன் அந்தப் பேனாவிற்காகப் படிக்கவில்லை. தேர்வெழுதவில்லை, மார்க் வாங்கவில்லை அப்படிச் செய்திருந்தானேயானால் இந்தக் கள்ளமில்லாத சந்தோஷம் அவனிடத்தில் பொழிந்திருக்காது. “நினைச்சதை சாதிச்சுட்டேன் பார்த்தியா?” என்கிற கர்வம்தான் எழுந்திருக்கும், அலட்டல் தலைகாட்டியிருக்கும். “வேணும்கிறதைக் கேளு., வாங்கித் தரேன்’ என்று கூறப்பட்டபோதுகூட தன் விருப்பம் சொல்லாது நின்ற இந்த அடக்கம் வந்திருக்காது. பலன் எதிர்பாராது செய்யப்படுவது எதுவானாலும் மனத்திருப்தி கொடுக்கும். கொஞ்சம் தாமதம் ஆனாலும் மெய்வருத்தக் கூலி கிடைக்கும், அரசன் அன்று தருவான். தெய்வம் நின்று கொடுக்கும்.
கிருஷ்ணனின் வீடுமுழுதும் அன்று திருவிழா போலிருந்தது. தெருவோடு போனவருக்கெல்லாம் இனிப்பு வழங்கப்பட்டது.’
எல்லோரும் சந்தோஷமாயிருந்த அந்த சமயத்தில் கிருஷ்ணன் என்னை மாடிக்கு அழைத்துப்போய் கண்ணீரினூடே பேசினான். “ரொம்ப தேங்க்ஸ்டா பாலா, நான்கூட எங்கப்பாகிட்டே இவ்வளவு தைரியமா இந்த பேனா வேணும்ன்னு கேட்டிருக்கவே
மாட்டேன்.
” அது எனக்குத் தெரியும் கிருஷ்ணா, அதனாலேதான் உனக்கு முன்னாலே நான் பேசி உங்கப்பாவை சமாளிச்சேன்.’
*“நிஜமா சொல்றேன் பாலா. நீ எனக்கு ஃப்ரெண்டா கிடைக்க நான் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கேன்டா. என்னை
எவ்வளவு புரிஞ்சுவெச்சிருக்கே.”
வெறுமனே சிரித்தேன், “விடுடா, இதையெல்லாம் பெரிய விஷயமா பேசிகிட்டு, வா, கீழே போகலாம்” நகர முயன்றவனை அவன் கையைப் பிடித்து நிறுத்தினான். “இருடா, உனக்கு என்ன வேணும். சொல்லு, உனக்கு எதுனா தரணும்போல இருக்கு.’ அவன் வேகத்தைப்
பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. ”ரொம்ப உணர்ச்சிவசப்படாதேடா. எனக்கு நீ எதுவும் தரவேண்டாம், இத்தனை வருஷமா ஒரே க்ளாஸிலே படிச்சிட்டோம். ப்ளஸ் ஒன் போனபிறகும் நாம ஒரே குரூப்பிலே படிக்கணும். அதுமட்டும் போதும் எனக்கு” என்றேன்.
கீழே போய் ஒரு பழைய நோட்டை எடுத்து எழுதிப்பார்க்கச் சொன்னேன்.
கிருஷ்ணன் அந்தப் பேனாவை பயபக்தியாய்க் கையிலெடுத்து, நடுங்கும் கைகளால் முதல் முதலாய் ‘பாலா’ என்றெழுதி அடிக்கோடிட்டபோது சிலிர்த்தது, “உன் பேரை எழுதிப்பாருடா முண்டம்.”
“இருக்கட்டும். அதான் எப்பவும் எழுதப்போறேனே.”
நானும் பேனாவை வாங்கி கிறுக்கிப்பார்த்தேன்.
வெண்ணெயாய் வழுக்கிற்று. “இந்தா, பத்திரமா உள்ளே வை. ஸ்கூல் திறந்தப்புறம் எடுத்துக்கலாம்.”
“ம்ஹூம், நான் மாட்டேன்ப்பா. இனிமே எப்பவும் இந்தப் பேனா என் பாக்கெட்லயேதான் இருக்கும்.”
சொன்னதுபோல செய்தான். ஸ்கூல் திறக்கிறவரை நாங்கள் எப்போது வெளியில் போனாலும் அந்த பேனாவை சட்டைப் பையில் வைத்துக்கொண்டான். விளையாடுகிறபோது ஸ்கோர் குறிக்க, லைப்ரரிக்குப் போனால் ஏதேனும் புத்தகத்திலிருந்து தகவல்கள் எழுதிக்கொள்ள என்று முடிகிறபோதெல்லாம் அதைப் பெருமையோடு உபயோகித்தான். அவனைத் தவிர யாரிடமும் அதைத் தருவதில்லை. ஒரு பூவைப்போல அதைப் பாதுகாத்தான். அந்தப் பேனாவைச் சுற்றிவந்திருந்த அட்டைப் பெட்டியைக்கூட பத்திரமாய் வைத்திருந்தான். பார்க்கர் ரக பேனாக்களுக்கென்றே ஒரு விசேஷ இங்க் இருக்கிறதாய்ச் சொன்னார்கள். அதை வாங்கி வைத்துக்கொண்டான். ‘இதிலே எழுதியிருந்தா பரீட்சையிலே இன்னும் நிறைய மார்க் வாங்கியிருப்பேன் பாலா.” என்று அடிக்கடி சொன்னான். எப்படியோ, பழைய உற்சாகமான, துள்ளலான கிருஷ்ணனை மறுபடி பார்க்கமுடிந்ததில் எனக்கு ஏக சந்தோஷம். 96
ஜூன் வந்தது. எங்கள் பள்ளியில் ப்ளஸ் ஒன் குரூப் லிஸ்ட் அறிவித்தார்கள். எதிர்பார்த்தபடி நானும் கிருஷ்ணனும் முதல் குரூப்பிலிருந்தோம். ஸ்வீட் ஸ்டால் போய் அதைக் கொண்டாடினோம்.
அப்போதுதான் சீரியஸாய் நிறையப் பேசினோம். கிருஷ்ணன் ஏகப்பட்ட திட்டங்கள் வைத்திருந்தான். பனிரண்டாம் வகுப்பு பப்ளிக் தேர்விற்கு இப்போதே படிக்கவேண்டும், அதனோடே இணையாய் என்ட்ரன்ஸிற்கும் தயார் செய்யவேண்டும். இன்னும் நிறைய சொன்னான். இதெல்லாம் முடியுமா என்று எனக்கே சந்தேகமாயிருந்தது.
ஆனால் முடிந்தது. கிருஷ்ணனின் உழைப்பால் எங்கள் இருவராலுமே முடிந்தது. கிருஷ்ணன் வெறி வந்தாற்போல் படித்தான். வாரம் இரண்டு நாட்கள் – சனி, ஞாயிறில் ப்ளஸ் டூ பாடங்கள் படித்தோம். அதில் சின்னதாய் தேர்வுகள் எழுதிப்பார்த்தோம். நுழைவுத் தேர்வுக்கென மாலைகளில் படித்தோம். இத்தனைக்கும் இடையில் 11ம் வகுப்புப் பாடங்களும்.
சாதாரணமாய் நான் பெரிய சோம்பேறி. ஆனால் கிருஷ்ணனின் அக்கறையும், ஈடுபாடும்தான் என்னையும் செலுத்தினது. நான் மசங்கியிருந்தாலும் என்னைக் கெஞ்சியோ, கொஞ்சியோ, அடித்தோ படிக்க வைத்துவிடுவான் எமகாதகன்.
கிருஷ்ணனிடம் இன்னொரு பிடிவாதப் பழக்கம் – படித்தது எதையும் ஒருமுறையாவது எழுதிப்பார்த்தாகவேண்டும் அவனுக்கு. “எனக்கு அப்பதாண்டா மண்டையிலே ஏறும்” என்பான். பக்கம்பக்கமாய் சளைக்காமல் எழுதுவான். அவனுக்கென்று ஏதேனும் ஒரு பழைய கேள்வித்தாள் கிடைத்துவிடும். ஓரமாய் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பவனை நானும் என் சோம்பேறித்தனமும் சேர்ந்து கிண்டலடிப்போம்.
கேள்வித்தாளை ஒருமுறை நோட்டம்விட்டு, எல்லாக் கேள்விகளுக்கும் பதிலை மனதுக்குள் ஓட்டிப்பார்த்துவிட்டாலே தேர்வெழுதிவிட்ட திருப்தி எனக்கு. அதன்பிறகு ஆனந்தவிகடன் படிக்கப் போய்விடுவேன். ஒரு மணி நேரம் கழித்து திரும்பிப்பார்த்தால் ஆரம்பத்தில் காட்டின அதே உற்சாகத்துடன் எழுதுகிற பேடை மார்போடு அணைத்தபடி சுவாரஸ்யமாய் எழுதிக்கொண்டிருப்பவனைப் பார்க்க ஆச்சர்யமாயிருக்கும். எப்படி முடிகிறது இவனால் இந்த எழுதுகிற ஆசைதான் இவனை அந்தப் பேனாமேல் விருப்பம் கொள்ளவைத்ததோ என்று நினைத்துக்கொள்வேன்.
அந்தப் பேனாபற்றி அவன் சொன்னதெல்லாம் கொஞ்சமும் மிகையில்லை என்பது காலாண்டுத் தேர்வு முடிவுகள் அறிவித்தபோது புரிந்தது. முக்கியப் பாடங்கள் நான்கிலும் கிருஷ்ணன் நூற்றைம்பதுக்கு நூற்றைம்பது வாங்கியிருந்தான். ஹெட் மாஸ்டர் அவன் கன்னம் தடவி நெட்டிமுறித்து, ”உன்னாலே இந்த ஸ்கூலுக்கு நல்ல பர் வரப்போகுதுன்னு எனக்குத் தோணுது. யங் பாய், கீப் இட் அப்!” என்றார். அவன் அளவுக்கு இல்லாவிட்டாலும் நானும் நல்ல மார்க் வாங்கியிருந்ததில் எனக்கும் சந்தோஷம்.
அரையாண்டுக்கு இன்னும் சில நாட்களே மீதமிருந்தபோது, ஒரு நாள் கிருஷ்ணனின் அந்த பச்சைப் பேனா தொலைந்துபோனது. எங்கே விட்டான் என்று அவனுக்கே தெரியவில்லை. காலைமுதலே விடாமல் அழுதுகொண்டிருந்தவனை நான்தான் தேற்றி பள்ளிக்குக் கூட்டிப்போனேன். என் மாணவர் தலைவ செல்வாக்கைப் பயன்படுத்தி ப்ரேயருக்குமுன் மைக்கில் பேனா தொலைந்த விஷயத்தையுழ், அது கண்டுபிடித்துத் தருபவருக்கு சிறு பரிசு உண்டென்றும் அறிவிக்கச்செய்தேன். ஸ்கூல் நோட்டீஸ் போர்டிலும் ஒரு அறிவிப்பு வைத்தேன்.
கிருஷ்ணன் ஓரளவு தெம்பாயிருந்தான். அன்று மாலை வீட்டுக்குக் கிளம்புகிறவரையில் இருவரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். ம்ஹூம், கிருஷ்ணன் மறுபடி அழ ஆரம்பித்துவிட்டான். “ஏய், விடுடா. இதுக்குப்போய் யாராவது அழுவாங்களா? நாளைக்குக் காலையிலே யாராவது கொணாந்து தந்திடுவாங்க, கவலைப்படாம வீட்டுக்குப் போகலாம் வாடா.’
“பாலா, நான் இதை எப்படிடா வீட்டிலே சொல்வேன்? எங்க அப்பா முதுகுத் தோலை உரிச்சுடுவார். எனக்கு பயமா இருக்குடா.’ தேம்பலினூடே பேசினான். “இதோ பாரு கிருஷ்ணா., இன்னிக்கு இதை வீட்டிலே சொல்லவேண்டாம். நாளைக்குவரைக்கும் பார்ப்போம், எனக்கென்னமோ இது
கிடைச்சிடும்ன்னுதான் தோணுது. அப்படி கிடைச்சிட்டா பிரச்சினை இல்லை. கிடைக்கலைன்னா என்ன பண்ணலாம்ன்னு நாளைக்கு யோசிச்சு முடிவுசெய்வோம். இப்ப வா, வீட்டுக்குப் போகலாம்!” வழியெல்லாம் புலம்பிக்கொண்டே வந்தான். “ நூத்தி அம்பது ரூபாயாச்சே ” என்றான் திரும்பத்திரும்ப. எனக்கு அவனை நினைக்கவே பாவமாயிருந்தது. இதை எப்படி எங்க அப்பாகிட்டே சொல்வேன்?”
ஆனால் அந்த பேனா தொலைந்(த்)த விஷயத்தை அவன் அப்பாவிடம் சொல்கிற அவசியமே ஏற்படவில்லை. அன்று இரவு கிருஷ்ணனின் அப்பா தூக்கத்திலேயே ஹார்ட் அட்டாக் வந்து போய்விட்டார்., மறுநாள் காலை நான் படுக்கையிலிருந்து எழுந்தபோது அம்மா இந்தச் செய்தியைச் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. பரபரப்பாய் ஓடிவந்து பார்த்தபோது கிருஷ்ணன் வீடுமுன் கழிகள் நட்டு, அவசர ஷாமியானா விரித்து, வாடகை சேர்கள் போட்டிருக்க, ஆங்காங்கே சிலர் உட்கார்ந்து நியாயம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த மரணம் கிருஷ்ணனின் வாழ்க்கையை முற்றிலும் திசைமாற்றிவிட்டது. வீட்டுக்கு ஒரே ஆண் பிள்ளை என்று கட்டாயப்படுத்தி அவன் படிப்பை நிறுத்தி, மில்லை நிர்வகிக்கக் கூட்டிப்போய்விட்டார்கள். டி.ஸி. வாங்கக்கூட அவன் பள்ளிக்கு
வரவில்லை. காலையில் ஸ்கூலுக்குப் போகிறபோது நான் அவன் வீட்டை ஏக்கமாய் பார்த்துக்கொண்டே நடப்பேன்
அவன் அதிகாலையிலேயே கிளம்பி மில்லுக்குப் போயிருப்பான் என்பது தெரிந்தும் அந்தப் பார்வையையும், எதிர்பார்ப்பையும் என்னால் தவிர்க்கமுடியவில்லை.
பையன்கள் இடையே உட்கார்ந்து படிக்கிறபோதோ எழுதுகிறபோதோ கிருஷ்ணன் ஞாபகம் வந்து கொல்லும். வீட்டில் அதிகாலையில் எழுந்து படிக்கத்துவங்குகையில் அவன்
ஓரமாய் உட்கார்ந்து ஏதேனும் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறானா என்று தேடத் தோன்றும். இன்னும் நிறைய சம்பவங்கள், சுருக்கமாய்ச் சொன்னால் கிருஷ்ணன் பிரிவால் நான் நிறையவே பாதிக்கப்பட்டேன்.
ஒருமுறை அவனைப் பார்த்தே ஆகவேண்டும் என்று ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவன் வீட்டுக்குப் போனேன். அவன்தான் வந்து கதவைத் திறந்தான். அப்பா மரணத்திற்காக மொட்டைபோட்ட தலையில் இன்னும் முழுசாய் முடி வளர்ந்திருக்கவில்லை. பார்வையில் ஒரு ஆசையோ, வாத்ஸல்யமோ, ஒரு இடைவெளிக்குப்பிறகு சந்திக்கிற துடிப்போ ஏதுமின்றி, ‘என்ன வேணும் உனக்கு’ என்பதாய்ப் பார்த்தான்.
ஏன் என் கிருஷ்ணன் இப்படி மாறிப்போனான்? அத்தனை வருடப் பழக்கம் இத்தனை சுலபமாய் மறந்துபோகுமா? அவனிடம் நிறையப் பேசவேண்டும் போலிருந்தது. ஆனால் அவன் எந்தப் பேச்சுக்கும் தயாரில்லாதவன்போல் தோன்றினான்.
“என் கணக்கு நோட்டெல்லாம் இங்கே விட்டுட்டேன், வாங்கிட்டுப் போலாம்ன்னு வந்தேன்” தடுமாறிப் பேசினேன்.
“ம்” உள்ளே போனவன் திரும்பிவரவில்லை. அவன் தங்கைதான் என் நோட்டுக்களைக் கொண்டுவந்துகொடுத்தாள். ஏமாற்றமாய்த் திரும்பினேன். மனசு ரணமாய்த் தகித்தது. பேச்சைவிட மௌனம் அதிகம் காயப்படுத்தும் என்று அப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
அதன்பின் ஏகப்பட்ட சம்பவங்கள், கிருஷ்ணன் என்னை விட்டாலும் அவன் என்னுள் உண்டாக்கிப்போயிருந்த பழக்கங்கள் என்னைச் செலுத்தின. சனி, ஞாயிறுகளில் விடாது படித்தேன். அவன் இல்லாததற்கும் சேர்த்துப் படிப்பதுபோன்ற ஆவேசம் என்னுள். நுழைவுத் தேர்வுக்கும் தயார்செய்தேன்.
இவை எல்லாம் எனக்கு அடுத்த வருடம் உதவிற்று. ப்ளஸ் டூ முதல் நாள் வகுப்பினுள் நுழையுமுன்னமே அனேகமாய் எல்லா சப்ஜெக்டிலும், எல்லாப் பாடங்களையும் ஒருமுறையாவது படித்திருந்தேன். வகுப்பில் பாடங்கள் கேட்கையில் சுலபமாய்ப் புரிந்தது. கேள்விகளுக்கு பதில் சொல்லவும், சந்தேகங்கள் கேட்டுத் தெளிவு பெறவும் முடிந்தது. எல்லாமே எளிமையாய்த் தோன்றியது. என்னுள்ளே எழுகிற தன்னம்பிக்கையை என்னாலே உணரமுடிந்தது புரியாது கேட்கிற நண்பர்களுக்கு விளக்கமாய் சொல்லித்தரமுடிந்தது. தேர்வுகளை எளிதாய் சந்தித்து சாதிக்கமுடிந்தது.
ப்ளஸ் டூ பொதுத் தேர்வை எழுதச் சென்றபோது மனதால் நான் வெகு பலவானாயிருந்தேன். ‘முடியும்’ என்கிற வாக்கியம் உள்ளே நின்று எரிந்தது. ஒரு தேர்வுகூட எனக்கு கடினமாய்த் தோன்றவில்லை. அநாயாசம் என்று சொல்வார்களே – அதைவிட ஒரு படி மேலாகவே செய்தேன். இதையெல்லாம் பெருமைக்காகச் சொல்லிக்கொள்ளவில்லை கிருஷ்ணன் என்னுள் வைத்துப்போன நல்லவைகளின் பலனை
விளக்கநினைத்தேன். அந்தத் தேர்வில் நான் குவித்த மார்க்குகளுக்கும், மருத்துவம், பொறியியல் இரண்டிலும் எனக்கு மெரிட்டில் சீட் கிடைத்ததற்கும் என் கிருஷ்ணன் ஒரு முக்கியக் காரணம் என்பதைச் சொல்லநினைத்தேன். ஒரு சாதாரண மாணவனாயிருந்த இந்த பாலாவை அவன்தான் முழுமையாக்கினான் என்பதை வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது.
ரிசல்ட் வந்தபோது அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள அவன் இல்லாததின் சோகம் உறுத்திற்று. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக அவனைப் பார்க்கவே இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. காலம்தான் எத்தனை
*வேகமாக ஓடுகிறது!
காலேஜ் அட்மிஷன் கடிதம் வந்த தினத்தில் கிருஷ்ணன் வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன். அவன் இல்லை என்று சொன்னார்கள். ஏதோ வியாபார விஷயமாய் மெட்ராஸ் போயிருக்கிறானாம். மறுபடியும் ஏமாற்றத்தோடு திரும்பினேன்.
பொறியியல் சேர்வதாய் முடிவுசெய்து அடுத்த இரு தினங்களில் அட்மிஷனுக்காக நானும் அப்பாவும் கோயம்புத்தூர் கிளம்பிப் போய்விட்டோம்.அவ்வளவுதான், அதன்பின் இந்த நாலு வருடங்களில் அவ்வப்போது ஊருக்கு வந்துபோன சமயங்களில்கூட அவனைப் போய்ப்பார்க்கமுடியவில்லை. கொஞ்ச நாளில் அவனை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டேன் என்று சொல்லலாம். அத்தனை வருட நட்பை மறந்ததற்காக சில நாள் முன்பு அவனை நினைத்து நான் ஆச்சர்யப்பட்டேன். சற்று தாமதமாய் என்றாலும் நானும் மறந்துதானே போயிருக்கிறேன்! பழையன கழிதலும், புதியன புகுதலும் நாம் முயன்றாலும் தவிர்க்கமுடியாத நிதர்சனங்களோ!
படிப்பை முடித்து, இங்கே வேலையில் சேர்ந்து மூன்று மாதங்களாகி, முதல்முறையாக வீட்டுக்குப் போகிறேன். வீட்டிலிருக்கிறவர்களுக்கு ஏதும் வாங்கிப்போகலாம் இந்த கடைக்குள் நுழைந்து அலசிக்கொண்டிருக்கையில் இதோ, அதே பச்சை வண்ண பார்க்கர் பேனாவைப் பார்த்துவிட்டு பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்துவருகிறேன். சற்றே வெட்கமாகக்கூட இருக்கிறது. கிருஷ்ணன் ஆசைப்பட்ட அதே டிசைன், நட்பு என்கிற அதி உன்னத உறவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாய்த் தோன்றுகிறது. அவன்தான் தப்பு செய்தானென்றால் நானும் அதைச் சாக்காய் வைத்துக்கொண்டு வெகு சுலபமாய் அவனைத் தவிர்த்திருக்கிறேன்.
எவ்வளவோ செய்திருக்கலாம். ஒரு கடிதம் எழுதியிருக்கலாம், ஒரு தீபாவளி (அல்லது) பொங்கல் வாழ்த்து அனுப்பியிருக்கலாம், ஒருமுறை ஃபோனில் பேசியிருக்கலாம்,
ம் முயன்று பார்த்திருக்கலாம், செய்யவில்லை. லேசாய் குற்றவுணர்ச்சி உறுத்திற்று. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. தவறுக்குப் பிராயச்சித்தமாய் அந்தப் பேனாவை வாங்கிக்கொண்டேன். இப்போது அதன் விலை முன்னூறுக்கு மேலாகியிருந்தது. பார்சலைக் கையில் வாங்குகிறபோது இது எங்களிடையே இருக்கிற விரிசலை ஒழிக்குமா என்று எள்ளையே கேட்டுக்கொண்டேன்.
உடனே கிருஷ்ணனைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.
பதினைந்து மணி பயணக் களைப்பில் எட்டரை மணிநேரம் தூங்கினேன். எழுந்தபோது உலகம் தெளிவாய்த் தெரிந்தது. பகலில் இத்தனை நேரம் தூங்கியிருக்கிறேன் என்று கூச்சமாகக்கூட இருந்தது.
முதல் சம்பளத்தில் அப்பா, அம்மா, தங்கைக்கு வாங்கிவந்திருந்தவைகளை எடுத்துக் கொடுத்தேன். அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். அம்மாவுக்கு புடவையின் நிறமும், தங்கைக்கு சுடிதாரின் டிசைனும் பிடிக்காமல்போனது நான் எதிர்பார்த்ததுதான்.
“அடுத்த தடவை உங்களையே கடைக்கு கூட்டிப்போறேன். நீங்களே செலக்ட் பண்ணிக்கோங்க” என்றேன் சிரித்து.
சாப்பிடும்போது அம்மாவிடம் கிருஷ்ணன்பற்றிக் கேட்டேன்.
இப்ப என்னடா திடீர்ன்னு அவன் ஞாபகம் உனக்கு? அவங்க வீடு மாத்திப்போயிட்டாங்களே.”
“கடவுளே, எந்த ஊருக்கு?”
“ஏண்டா கத்தறே? இதே ஊருதான்! அவங்க மில் தெரியுமா உனக்கு?”
“தெரியும்”, ஒரு முறை போயிருக்கிறேன்.
” அதுக்குப் பக்கத்திலேயே, பெரிய பங்களாவாட்டமா வீடு. போய்ப் பாரு, சுலபமா கண்டுபிடிச்சிடலாம். வியாபாரம் பெருசாயிடுச்சி. அதான் மில்லுக்குப் பக்கமா வீட்டை மாத்திக்கிட்டாங்க,
போன மாசம் அவனுக்குக் கல்யாணம்கூட ஆயாச்சு தெரியுமா?”
“யாருக்கு, கிருஷ்ணனுக்கா?”
“பின்னே, அவன் பேரனுக்கா?” இப்படி ஏதும் ஜோக்போலே சொல்லிவிட்டு சமையலறைப் பக்கம் போய்விடுவது அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.
என் கவலை அதிகரித்தது. அரை விநாடியில் எனக்கும் கிருஷ்ணனுக்குமான தொலைவு பல அடி தூரம் அதிகரித்துவிட்டதாய்த் தோன்றியது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் கிருஷ்ணனைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன்.
“என்னடா, பாதி சாப்பாட்டிலே எழுந்துட்டே?”
அம்மாவுக்கு நான் எவ்வளவு சாப்பிட்டாலும் பாதி சாப்பாடுதான்.
யாரோ புதிய மனிதனைப் பார்ப்பதுபோலிருந்தது. ஒட்டக் கத்தரித்த முடியும், கற்றை மீசையும், கறுப்புக் கண்ணாடியுமாய் பொம்மைபோலே உட்கார்ந்திருந்தான் கிருஷ்ணன். வெள்ளை வேட்டியும் சட்டையும் அவனுக்கு – இனிமேல் அவன் என்று சொல்லலாமா தெரியவில்லை கச்சிதமாய்ப் பொருந்தியிருந்தது. என்னைப் பார்த்ததும் எழுந்துகொண்டான். அடையாளம் தெரிகிறது என்பதான பாவனையில் முகத்தில் ஒரு மலர்ச்சி. டேபிளைவிட்டு வெளியேவந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டான். சில விநாடிகள் இருவரும் பேசவில்லை. எனக்கு நிறையப் பேசவேண்டும்போலிருந்தது. ஆனால் முடியவில்லை. சுதாரித்துக்கொண்டு அவன்தான் முதலில் பேசினான்.
“வாங்க வாங்க, உட்காருங்க.”
அந்த ‘ங்க’ வலித்தது. ஐந்தரை வருடத்திற்குமுன் தொலைத்த என் நண்பனைத் தேடிவந்து வேறு யாரையோ கண்டுபிடித்ததாய். உணர்ந்தேன். நான் தேடின கிருஷ்ணன் இங்கே இல்லை. இது வேறு யாரோ. என்னை உட்காரவைத்துவிட்டு, கடமைக்கு என்னுடன் உபச்சார வார்த்தைகள் பேசிக்கொண்டு, ஃபோனில்., யாரிடமோ “என்னய்யா? அரிசி லேசா கறுப்பா இருந்தா என்ன? வந்து பாருய்யா, எங்க வீட்டிலேயே அதுதான் சமைக்கிறோம். எட்டரைக்கு எடுக்கமாட்டேன்னு சொன்னியாமே? மூட்டைக்கு அம்பது ரூபா லாபம் போதாதா உனக்கு? ரொம்ப அலட்டாம வாங்கிப்போடுய்யா” என்று கைதேர்ந்த குரலில் வியாபாரம் செய்கிற இந்தக் கிருஷ்ணன் எனக்குப் புதிது. குழந்தை மனதோடு என்னுடன் உலகைப் படித்த என் தோழன் கிருஷ்ணனை எங்கேயோ தொலைத்துவிட்டேன். இப்போது இந்த மனிதனுக்குள் அவனைத் தேடவந்திருக்கிறேன். என் தேடல் என்னாகுமோ என்கிற பயம் முதல்முறையாய் எழுந்தது.
ஃபோனில் ரகசியம் பேசி மனைவியை அழைத்தான். பட்டுப் புடவையும், நகைகளுமாக சோம்பலாய் மாடியிலிருந்து இறங்கிவந்தவளை எனக்கு அறிமுகப்படுத்தினான். “விமலா, இது பாலச்சந்தர் – என் ஃப்ரெண்ட்.’
‘பாலச்சந்தர்’ – எனக்குத் தெரிந்து கிருஷ்ணன் ஒருமுறைகூட என் பெயரை இப்படிச் சொன்னதில்லை. பாலா, பாலா. எப்போதும் பாலாதான். ஸ்கூலில் வாத்தியார்களிடம் என்னைப்பற்றிப் பேசும்போதுகூட என்னை ‘பாலா’ என்றுதான் விளிப்பான். இப்போது ‘பாலச்சந்தர்’ – அத்தனை விலகி வந்துவிட்டேனோ? எனக்கு அழுகை வரும் போலிருந்தது. கடவுளே, நான் இங்கே வந்திருக்கக்கூடாதோ!
அவன் மனைவி கொடுத்த காபியைக் குடித்துவிட்டு. டபராக்களுடன் அவள் நகர்ந்தபிறகு என்ன பேசுவது, என்ன செய்வதென்று இருவருக்கும் புரியவில்லை. அசிங்கமாய்
மவுனித்திருந்தோம். அப்போதுதான் ஞாபகம் வந்து, பாக்கெட்டிலிருந்து அந்த பரிசுப் பார்சலை எடுத்தேன். “இந்தா கிருஷ்ணன், முதல் சம்பளத்திலே உனக்காக வாங்கினேன்.”
சலனமில்லாது வாங்கிக்கொண்டான். ஒரு எதிர்பார்ப்பு. ஆசை எதுவுமில்லாது கறுத்துத் தடித்த விரல்களால் அந்த பார்சலைப் பிரித்தான். ஏதோ கடமைக்குச் செய்வதுபோலிருந்தது அவன் செயல். பிரித்து அந்தப் பேனாவைக் கையிலெடுத்தபோதுகூட உடனடியாய் அவனிடத்தில் எந்த மாற்றமும் இல்லை. சற்றுப் பொறுத்து லேசாய்ச் சிரித்தான்.
“அதே பச்சைக் கலர் பேனா, இல்லை!”
என் இதயத் துடிப்பு அதிகரித்தது. நான் நினைத்தது நடக்கப்போகிறதோ!
எதுவும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்தேன். நான் கிருஷ்ணனின் சிரிப்பில் நாங்கள் இருவருமே சில வருடங்கள் பின்னோக்கிப் போய்வந்தது போலிருந்தது. பேனாவைத் திறந்து அவன் முன்னிருந்த தினத்தந்தியில் ஏதோ கிறுக்கினான். மறுபடி சிரித்தான்.
“அதே பேனா. அதே மாதிரி நைசா, அருமையா எழுதுது. கொஞ்சம்கூட மாறலை” என்று சொன்னபடி பேனாவை மூடி என் கையில் கொடுத்தான். “இது எனக்குத் தகுதியான பொருள் இல்லைங்க, நீங்களே வெச்சிக்கோங்க!” என்றான் திடீரென்று.
அதிர்ந்துபோனேன். “என்ன கிருஷ்ணா, உனக்காக தேடிப் பிடிச்சு ஆசையா வாங்கிட்டுவந்திருக்கேன். இப்போ ஏன் இப்படி சொல்றே?” என்றேன்.
“இல்லைங்க, வேணாம்.”
/ “அதான் ஏன்னு கேட்கிறேன்.’
“வேணாம்ன்னா விட்டுடுங்களேன்.”
“என்ன கிருஷ்ணா இப்படிப் பேசறே? இப்போ நீதானே சொன்னே, அதே பேனா, மாறவே இல்லைன்னு. என் நினைவா இதை வாங்கிக்கோயேன் ப்ளீஸ்.” என் குரலில் குற்ற உணர்ச்சியும், கழிவிரக்கமும் அதிகரித்துக்கொண்டேவந்ததை
மறைக்க முயன்று தோற்றேன்.
கிருஷ்ணன் ஒரு நிமிடம் என்னையே ஊடுறுவுவதான ஒரு பார்வை பார்த்தான். பிறகு மெல்லமாய், ஆனால் அழுத்தமாய்ப் பேசினான். “பேனா மாறலைங்க, நான்தான் மாறிட்டேன். ஒருதடவை நான் இருக்கிற இந்த இடத்தைச் சுற்றிப்பாருங்க. எத்தனை தூசு, குப்பை, உமி – இதுதான் இப்போ என் வாழ்க்கை. இனிமேலும் இதுதான். சாகிறவரை இங்கேதான் இருந்தாகணும், அலைஞ்சாகணும், வியாபாரம் பண்ணியாகணும், இதுதான் நிரந்தரம். அன்னிக்கு இருந்த கிருஷ்ணன் ராஜா வீட்டுப் பிள்ளை. இன்னிக்கு இருக்கிறவன் அரிசி வியாபாரி. இவனுக்கு இந்தப் பேனாவெல்லாம் ஆடம்பரம் இல்லையா? இத்தனை உசத்தியான பேனாவுக்கு நான் தகுதியில்லைங்க.
நீங்க எத்தனை ஆசையா இந்தப் பேனாவை வாங்கிட்டுவந்திருப்பீங்கன்னு எனக்குப் புரியுது. வாங்கினது சரிதான், வாங்கிட்டு வந்த நேரம்தான் சரியா இல்லை. இப்போ இது என் கையிலே இருக்கவேண்டியது இல்லைங்க. உங்க பாக்கெட்டிலே இருக்கவேண்டியது. எனக்கு இதுதான் லாயக்கு. எனக்கு இது போதும்.” அவன் கை உயர்த்திக் காட்டின பால்பாயிண்ட் பேனாவின் விலை நிச்சயமாய் ஒரு ரூபாய்க்கு மேலிருக்காது.
“கிருஷ்ணா,’ பேச முயன்றவனைக் குறுக்கிட்டு அவனே பேசினான். ”இல்லைங்க, இதை அவ்வளவு சீரியஸா எடுத்துக்காதீங்க. எனக்கு உங்கமேலே எந்தக் கோபமோ, வருத்தமோ இல்லை., நான் சொன்னது யதார்த்தம். அது
சிலசமயம் கசப்பாதான் தெரியும். அதை ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். வேற வழியில்லை. சில விஷயங்கள் கண்ணாடிப் பாத்திரம்மாதிரி. நாமா உடைச்சாலும் சரி, அதுவா உடைஞ்சாலும் சரி., திரும்ப ஒட்டவைக்கமுடியாது. முயற்சி செஞ்சும் புண்ணியமில்லை” கை கூப்பினான். “உங்களை சந்திச்சதிலே ரொம்ப சந்தோஷம். அடிக்கடி முடிஞ்சபோது வந்துபோங்க. அது போதும், அதுதான் இப்போதைக்கு நம்மாலே முடியும்!” எழுந்துகொண்டான்.
நடந்த எதையும் என்னால் நம்பவே முடியவில்லை. வீட்டுக்கு வரும்வழியில் பாக்கெட்டிலிருந்த அந்தப் பேனாவைத் தொட்டுப்பார்த்துக்கொண்டேன்.
அம்பலம் – டிசம்பர் 1999
