ஸ்ரீராம் /நாளை முதல் நீ வேறோ நான் வேறோ…

அந்த காஃபி ஷாப் இருவரும் ஏற்கனவே பலநாட்கள் வந்த இடம்தான். கல்யாணத்துக்கு முன் தினமும் சந்தித்த இடம். அதன்பின் இப்போது விவாகரத்து தீர்ப்பாகி இன்று மறுபடியும் இங்கே.. பிரிவுக்கு முன் கடைசியாக ஒருமுறை இங்கேதான் சந்திக்க வேண்டும் என்று இருவருக்குமே தோன்றியது ஒரு விநோதம்தான்.
அவன் வரும்போது அவள் முன்னரே வந்து அமர்ந்திருந்தாள். இவன் வருவதை கவனித்திருக்க வேண்டும் என்றாலும் அவள் பார்வை வேறிடத்தில் இருப்பது போல காட்டிக்கொண்டு அருகில் வந்ததும் கைப்பையை அருகில் எடுத்துக் கொண்டு மெல்ல தலையசைத்து செயற்கையாகப் புன்னகைத்தாள்.
“இன்னிக்கேவா கெளம்பறே?”
“நாளை ஈவினிங் ஃபிளைட்”
பழகிய சர்வர் புன்னகையுடன் காஃபி கொண்டு வைத்தான். அவனுக்குத் தெரிய நியாயமில்லையே…
மங்கிய வெளிச்சத்தில் மௌனம் அவர்களை போர்த்திக் கொண்டிருந்தது. அவர்களுக்குத் தெரியும், நாளை முதல் அவர்கள் சந்திக்கப் போவதில்லை. அவள் வெளிநாடு போகிறாள். இவன் வேறு ஊர் செல்கிறான்.
எடுத்த முடிவு சரிதானா என்கிற எண்ணம் இருவருக்குள்ளுமே இப்போது இருந்தாலும் வெளியே சொல்ல முடியாத ஒரு இறுக்கம் சூழ்ந்து தலை கவிழ்ந்து ஒருவர் பார்க்காத போது இன்னொருவர் பார்த்துக் கொண்டார்கள். எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ என்கிற வரி இருவருக்குள்ளும் ஓடியது.
ஒருவரை ஒருவர் இன்னும் கொஞ்சம் மதித்து பொறுத்துப் போயிருக்கலாம் என்று இப்போது தோன்றினாலும் அப்போது அப்படி தோன்றவில்லை என்பதை இருவருமே நினைத்தார்கள்.
இன்றைய தினத்தின் இந்த உணர்வுகள் நாளை மாறி வேறு துணையை மனம் நாடலாம். என் பலவீனத்தை நான் ஏன் வெளிப்படுத்த வேண்டும் என்று இருவருமே மனதுக்குள் நினைத்துக் கொண்டார்கள்.
காஃபி குடிக்கப்படாமல் அப்படியே இருக்க, பில் யார் கொடுப்பது என்கிற விவாதங்களுக்கு இடம் வைக்காமல் அவள் பில்லை கையில் எடுத்துக் கொண்டு எழுந்து நடந்தாள்.

4 Comments on “ஸ்ரீராம் /நாளை முதல் நீ வேறோ நான் வேறோ…”

  1. கதை ரொம்ப நல்லாருக்கு ஸ்ரீராம். இப்போதைய தலைமுறையின் வாழ்க்கை முறையைக் கோடிட்டுக் காட்டுகிறது. காலகட்டத்தைச் சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம். வாழ்த்துகள் ஸ்ரீராம்!

    கீதா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன