அர்ஜுனன்/தவறிய கணக்கு

அவர்கள் இருவரும் ஒரு சிற்றுண்டி கடையில் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.
காபி கிண்ணத்தில் எழுந்த நீராவி, புது மணத்துடன் ஆடிக்கொண்டிருந்தது.
அவனது முகம் துண்டுகளாக உடைந்த கண்ணாடி போல இருந்தது. அது அவனது உடைந்த மனதை வெளிப்படுத்தியது.
அவளது பார்வை, அவனை குற்றம் சாட்டுவது போல இருந்தது.
“நாம் முதலிலேயே சுதாரித்திருக்க வேண்டும்.” அவன் மெதுவாக சொல்லி, காபியில் ஒரு மிடறு விழுங்கினான்.
“ம்ம்.. நடந்ததை நினைத்து என்ன செய்ய?” அவள் தனது கோப்பையை எடுத்துப் பருகினாள்.
“முன்பெல்லாம் நாள் கணக்கு நாம் நினைத்தபடி அமையும்.”
“ஆமாம். கடவுள் இப்படி சோதனை செய்வார் என்று நானும் நினைக்கலை.”
“நடுவில் ஒருநாள் கல்யாணநாள் என்று அளவுக்கு அதிகமாகவே கொண்டாடி விட்டோமோ?” கண் சிமிட்டியபடி கேட்டான்.
அவள் சிரித்தாள்… ஆனால் அந்த சிரிப்பிலும் வேதனைதான் தெரிந்தது.
“இதுக்குத் தான் எப்பவும் முதல் சிலிண்டர் காலியான உடனே பதியனும்னு சொல்வேன். நீங்கதான் மெதுவா பார்க்கலாம்னு தள்ளிப் போட்டுட்டீங்க.” என்றாள்.
“ஆமாம். இப்போ ரெண்டாவது சிலிண்டரும் காலியாயிடுச்சு. இண்டக்ஷன் அடுப்பு கூட கடையில கிடைக்கல. காபி குடிக்கக்கூட வெளியே வர வேண்டி இருக்கு. இவங்களும் எத்தனை நாள் கடை திறந்திருப்பாங்களோ தெரியல.”
என்று அவன் புலம்பினான்.
மேசையின் நடுவில் இருந்த வண்ண மலர்கள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருந்தன.

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /புலனப் புகைப்படம் – விருட்சம் நாளிதழ்

3 Comments on “அர்ஜுனன்/தவறிய கணக்கு”

கீதா உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன