ஜெ.பாஸ்கரன்/நெஞ்சம் மறப்பதில்லை….

“Every man’s life ends the same way. It is only the details of how he lived and how he died that distinguish one man from another.” — Ernest Hemingway.

மதுவந்தி.

பெயருக்கேற்ற இனிமையான பண்பாளர். முகத்தில் எப்போதும் பிரகாசிக்கும் அகச் சிரிப்பு. வெள்ளந்தியான மனிதர். வெளிப்படையான பேச்சில் எல்லோரையும் கவர்ந்துவிடும் எளிமையான மனிதர். தாராளமாகப் பாராட்டும் ரசிகர். தான் ரசித்ததைப் பிறரும் ரசிக்க வேண்டும் என்ற பேராவல் கொண்ட நல்ல நண்பர். கவிஞர்.

எனக்கு ஆர்க்கே, ஹரி மூலம் அறிமுகமானவர். முதல் சந்திப்பு(கள்) குவிகம் இணயவழிக் கூட்டங்களில்தான். பின்னர் சென்னை வந்தபோதுதான் நேரடி சந்திப்பு. வீட்டிற்கு வந்து இயல்பாகப் பேசி, சிரித்து மகிழ்ந்தார். தன் கவிதைப் புத்தகங்களைக் கொடுத்தார்.

நாங்கள் 7 பேர் ஏழு புத்தகங்களை ஒன்றாக வெளியிட்ட போது, அவரது மகிழ்ச்சியும், குதூகலமும் இன்னும் என் மனத்திரையில் அழியா ஓவியமாக உள்ளன. ‘ஒரே மாதிரி உடை அணிந்துகொள்ளலாமா?’ எனக் கேட்ட குழந்தை உள்ளம் நிழலாடுகிறது.

டெல்லி விமான நிலையத்திலிருந்து அலைபேசியில் அவருடன் பேசியது மறக்க முடியாதது.

அவரது கவிதைகள் வாழ்வியலை அழகாகச் சொல்லும். மனதில் ஆழமாகச் சென்று லேசாக அசைத்துப் பார்க்கும். சமயத்தில் உதட்டைப் பிரித்து புன்னகைக்க வைக்கும். யாருடைய கவிதையானாலும் அதனை ரசிக்கும் அவரது பார்வை வித்தியாசமானது. எப்போதாவது நான் கிறுக்கும் கவிதைக்கு (அவர் சொல்லித்தான் எனக்கே தெரியும் அது கவிதை என்று!) ஒரு அர்த்தமும் சொல்லிப் பாராட்டுவார், பெரிய மனம் படைத்தவர்.

இலக்கியக் கூட்டங்களில் உரைகளின் மையக் கருவை ஒட்டிச் சொல்வதற்கு எப்போதும் ஏதாவது ஒரு சுவாரஸ்யம் அவரிடம் இருக்கும்!

வைத்தீஸ்வரன் ஆவணப்படம், குவிகம் குறும்புதினம், சிறுகதைப் போட்டி, அளவளாவல் என எல்லாவற்றிலும் எதிர்பார்ப்பில்லாத ஒரு பங்களிப்பு இருக்கும். வைத்தீஸ்வரன் ஆவணப்படத்தின் ஆரம்பப் புள்ளியே மதுவந்திதான் என்பது என் எண்ணம். மூவர் கொண்டுவந்த தீபாவளி மலர், வசந்த மலர் இரண்டிலும் அவரது பங்கும், ஆற்றலும் போற்றுதலுக்குரியது.

பூபாளத்தின் நான்கு தூண்களில் ஒன்றென்றாலும், எல்லா வகையிலும் தூக்கி நிறுத்தும் வலிமையான தூண்போல் செயல்பட்டவர் மதுவந்தி. அனைத்து படைப்புகளையும் முழுமையாகப் படித்து, பிழை திருத்தம் சொல்லி, தம் கருத்தையும் சொல்வார். எந்தப் படைப்பையும் முழுமையாக அவர் நிராகரித்ததாக எனக்கு நினைவில் இல்லை.

பூபாளத்தின் நால்வரும் சிறுவயது முதலே பழகியவர்கள் – ‘வாடா’ ‘போடா’ நட்பு எனிலும் வாடாத நட்பு! பூபாளத்தின் ஆலோசகனாக ஏற்றுக்கொண்டார்கள் – வயதின் காரணமாக இருக்கலாம்! இருந்தாலும் தனிப்பட்ட முறையில் என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர் மதுவந்தி. சென்ற வாரம்தான் பத்திரிகையாளர் வாஸந்தி அவர்களை என் கேள்விகளுடன், பூபாளத்திற்காகச் சந்தித்து வந்தார். அந்தச் சந்திப்பை மிகவும் மகிழ்ச்சியுடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அவரது கடைசி குவிகம் – வசந்த மலர் கூட்டத்திற்குத் தாமதமாக வந்த என்னை உள்பெட்டியில் வாயார வரவேற்றவர் மதுவந்தி. யாரையும் தவிர்த்துவிட மாட்டார். நெறியாளர் மறந்துவிட்டாலும், நினைவுபடுத்தி உரிய வாய்ப்பினை வழங்கச் செய்வார்.

அவரது திடீர் மறைவு, அதிர்ச்சியளிக்கிறது. வாழ்வின் நிலையாமை ஒரு நொடியில் நிலைகுலையச் செய்கிறது. ‘என்ன அவசரம்’ என மனது புலம்பிக்கொண்டே இருக்கின்றது. குடும்பத்தில் ஒருவரை – ஆம், குவிகம் குடும்பத்தில் ஒருவர்தான் – இழந்தது போன்ற துக்கம் நெஞ்சை அடைக்கின்றது.

“The life of the dead is placed in the memory of the living.” என்பான் மார்க்கஸ் டுல்லியஸ் சிசேரோ. உண்மைதான், எங்கள் மனதில் உங்கள் நினைவுகளை மிக ஆழமாகப் பதிந்து விட்டுப் போயிருக்கிறீர்கள் மதுவந்தி!

போய்வாருங்கள் கவிஞரே – உங்கள் மலர் முகம் கண்டு, கவிதைகளை ரசிக்க அங்கு ஒரு பிரபந்த உலகமே காத்திருக்கிறது!

2 Comments on “ஜெ.பாஸ்கரன்/நெஞ்சம் மறப்பதில்லை….”

Meenakshi Balganesh உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன