
அந்த ” ஆரண்யா காப்பிக் கடை ” காப்பி, டீ இரண்டும் குடிக்கும் யாரையும் மறுபடி வரச் சொல்லும் சுவையுடன் இருக்கும்.
சந்தோஷ் தனக்கு டீயும், சங்கீதாவுக்கு பில்டர் காப்பியும் ஆர்டர் செய்தான்.
“சொல்லு சங்கீதா , எதுக்கு வீட்டுக்குப் போகும் முன் இங்கே வரச் சொன்னே? ஏதும் பிரச்சினையா? வீட்டில் நீ செல்ல மருமகளாச்சே, ஆபீஸிலா? “
” அப்பா போன பின்பு அம்மாவுக்கு மூளை வளர்ச்சி குறைந்த தம்பியை தனியே கவனிக்க முடியாமல் இரத்த அழுத்தம் கூடி இன்னிக்கு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க . நல்ல வேளை பக்கத்து வீட்டு மாமி பார்த்து எனக்கு போன் செய்தாங்க. நான் அரைநாள் விடுப்பில் போய் வந்தேன்.”
” என்னையும் கூப்பிட்டு இருக்கலாமே. அவங்களைத் தனியாவா விட்டு வந்தே? இப்போ நாம் என்ன செய்யணும்னு யோசித்து வைத்திருப்பியே ,அதைச் சொல்”
“நம் வீட்டு மாடியில் ஒரு அறை பாத்ரூம் வசதியோடு கட்டினோமே, அதில் அம்மா, தம்பியை கூட்டி வரலாமா ? அத்தை, மாமா கீழே இருப்பதால் நாம் வேலைக்குப் போகும் போதும் அவசரத்திற்கு துணைக்கு ஆள் இருப்பாங்க. சமையல் இன்னும் 2 பேருக்கு சேர்த்து செய்துடலாம் “.
” இதென்ன கேள்வி, என் அம்மா, அப்பாவை கவனிப்பது எப்படி எனக்கு கடமையோ, அதே போல் உன் குடும்பத்தையும் கவனிப்பது கடமை தான் . உடனே செய்திடலாம். என்னைப் பற்றி உன் புரிதல் இது தானா டியர்? “
” அப்படி இல்லை சந்தோஷ், அம்மா உடம்பு சரியில்லைன்னதும் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன் .”
“முதலில் காப்பியைக் குடி, நாளைக்கே அந்த அறையை சுத்தம் பண்ணிட்டு அவங்களைக் கூட்டி வந்துடலாம்” என்றபடி அவளின் கைகளை ஆதரவாகப் பிடித்தான்
