காலையிலிருந்து பலமுறை எழுத முயன்று தோல்வி கண்டேன்/பென்னேசா

என்னால் முடியவில்லை.

சாகிற வயதா என் வீருவுக்கு?

யதார்த்தாவை எப்போதும் குடும்பம் என்றுதான் நாங்கள் பெருமையுடன் சொல்வோம். அந்த வகையில் இன்று என் மூன்றாவது மகனை இழந்து தவித்து நிற்கிறேன்.

முதலில் எங்கள் சுந்தர். பிறகு இளஞ்சேரன். இப்போது இவன்.

யதார்த்தாவின் பொக்கிஷம் வீரு. மிக உயர்ந்த பதவியில் இருந்தபோதும் அவனை எதுவும் பாதிக்கவில்லை. எந்தவித வேறுபாடும் யாரிடமும் காட்டவில்லை. அவன் அனைவரிடமும் காட்டியது அன்பு ஒன்று மட்டுமே. சிநேக பாவத்துடன் எப்போதும் மலர்ந்திருந்த முகம். கோபமே வராத பெருங்குணம். ஒவ்வொருவர் மீதும் தனித்த அன்பு.

பல்வேறு காரணங்களால் இடையில் நாங்கள் ஒரு இருபது ஆண்டுகள் ஒருவருக்கொருவர் காணாமல் போய்விட்டோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீருவின் மகன் அனிருத் அவனை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தான். அனிருத் பணிபுரிந்த நிறுவனத்துக்காக பேராசிரியர் ரவீந்திரனை நீண்ட பேட்டி கண்டு அதனைப் படமாக்கும் பணி. அப்படித்தான் மீண்டும் என்னிடம் வந்து சேர்ந்தான் வீரு.

நான் எழுதும் எந்தக் குப்பையையும் அவனுக்கு உடனே அனுப்பி வைப்பேன். மிகுந்த பெருமையுடன் பாராட்டிக் கூச்சப்பட வைப்பான். உனக்குக் குறையே தெரியாதா என்று கேட்பேன். அவனுடைய “கேட்கும் செவிக்கு எங்கும் இசை” மற்றும் “ஒரே ஒரு ஊர்லே” இரண்டு கவிதைத் தொகுப்புக்களையும் பிழை பார்த்து எடிட் செய்து அட்டைப்படம் தயாரித்துக் கொண்டு இருந்த நேரங்களில் அவனைப் பாடாகப் படுத்தியிருக்கிறேன். எப்போதும் எதற்கும் சிரிப்புத்தான் பதிலாக வரும்.

இப்படி அன்பால் என்னை அவ்வப்போது மூழ்கடித்தான். நான் செய்யும் எல்லாவற்றிலும் அவனுக்குப் பெருமை. என் “போஜனம்” சிறுகதைத் தொகுப்புக்கு மிகவும் நெகிழ்வான ஒரு அணிந்துரை வழங்கினான். சொல்லப்போனால் அத்தொகுப்புக்கு “போஜனம்” என்ற தலைப்பை பரிந்துரைத்தது வீருதான்.

யாரிடமும் குறை காணாத நிறைமனது அவனுடையது. ஏதாவது உரிமையில் திட்டினாலும் அதற்கும் சிரிப்பான். மனது அப்படியே கரைந்து போகும். அவனைப் பற்றி இன்னும் எத்தனை தான் எழுதுவது? எழுத எழுத எதுவும் கரையாது என்றுதான் தோன்றுகிறது.

இன்று (13/04/26) காலை நடைப்பயிற்சிக்குக் கிளம்பும் போது திடீரென்று பெரிதாக மாரடைப்பு ஏற்பட்டு க்ஷணநேரத்தில் எங்கள் எல்லோரையும் விட்டுப் பிரிந்து விட்டான் என்ற செய்தி என்னை மட்டுமல்ல- என் குடும்பத்திலும் யதார்த்தாவிலும் அனைவரையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. அவனுடைய ஆப்த நண்பர்கள் இன்னும் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அவனை அறிந்தவர்கள் அனைவரும் இந்த இழப்புக்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு வீரு எங்கள் அனைவரின் வாழ்வில் இனி எப்போதும் கிடைக்க மாட்டான்.

நான் எழுதிக் கொண்டிருக்கும் கங்குல் நாவல் பற்றி அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருப்பான். நீண்ட நாட்களாக அது தடைபட்டு பேய்முழி முழித்துக் கொண்டு நிற்பது குறித்து வலுவாகக் கண்டனம் செய்வான். செல்லமாகக் கடிந்து கொள்வான். பல நேரங்களில் அவனுடன் பேசத் தொடங்கும்போது இன்று அவன் என்னுடைய நாவல் பற்றிக் கேட்கக் கூடாது என்று ஒவ்வொரு முறையும் சிறிது பதட்டமாக இருக்கும்.

இனி அப்படி என்னைக் கேட்பதற்கு யாரும் இல்லை.

எல்லாவற்றையும் இழந்தது போன்ற ஒரு துயரில் உழல்கிறேன்.

யதார்த்தா குடும்பத்தின் கரம் பற்றிக்கொள்கிறேன். வீருவின் ஆப்த நண்பர்களின் கரம் பற்றிக் கொள்கிறேன். குடும்பத்தினரின் கரம் பற்றிக் கொள்கிறேன்.

ஒன்றும் முடியவில்லை.

என்னமோ போடா பென்னேசா.

One Comment on “காலையிலிருந்து பலமுறை எழுத முயன்று தோல்வி கண்டேன்/பென்னேசா”

மீ. விசுவநாதன் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன