பானுமதி ந மூன்று கவிதைகள்

10/04/26 அன்று வாசித்த மூன்று கவிதைகள்

1.துளி

சீரான லயத்தோடு
கூரையின் கீழ் முற்றத்தில் விழுந்தது
கைகளை நீட்டி களிக்கிறாள் கயல்

தூசி போன மகிழ்ச்சியில் சிலிர்த்த மரம் காற்றின்
தடவலுக்கு ஏற்ப நீர் நடனம் ஆடுகிறது.
நின்று பார்க்கிறான் ராமன்.

சுமை தீர்ந்த நிறைவும் பிரிந்த வடுவுமாக மிதக்கிறது
மேகம். தலை உயர்த்தி பார்க்கிறான் மனிதன்.

கண்ணீர் திரண்டு கண்கள் நிரம்பி வழிகின்ற கன்னங்களை
பார்த்தும் பார்க்காமல் போகிறது உலகம்.

2.அறிதல்

அவரைப் பார்க்கப் போய் இருந்தேன்.
தனியாகப் பேசி தெரிந்து கொள்ள தயக்கம் இருந்தது.
எனக்கும் பேசத் தெரியும் என்ற ஆவலில் சென்றேனா
அல்லது மடக்கிக் கேட்கும் விருப்பத்தில் சென்றேனா நான் அறியேன் .
மெதுவாகப் புன்னகைத்தார் அருகில் அழைத்தார்.
எப்படி வந்தாய் என்றார் .
நான் பயணம் செய்வதற்கு முன்னரே பாதை விரிந்தது மனதில்.
அதில் ஏறி வந்தேன் என்றேன்.
மீண்டும் சிரித்தார்..
அருமை அருமை என்றார்.
மிக மிக அருகில் அழைத்து
அறிவால் பதில் சொல்கிறாய்.
உணர்ந்து சொல்லும் போது நீ
என்னைத் தேட மாட்டாய் என்றார்.

  1. புகழ்

அன்று நாம் நடந்திருந்த தோப்பில் சேகரித்த பத்து குந்து மணிகள்
இன்னமும் உன்னிடம் இருப்பதாகச் சொன்னாய்.
நான் தந்த மயிலிறகை இன்னமும் உன் பெட்டியில் வைத்திருக்கிறாய் என்றும்.
ஒரு சிறு வெளிச்சம் உன் மீது படரத் தொடங்கியவுடன் என்னை மறந்து விட்டதாகவும்.
மணிகளையும் மயில் இறகுகளையும் நம்பிய என் மனம்
நீ கடைசியில் சொன்னதை நம்ப மறுக்கிறது.
அதை சொல்லாமல் இருந்திருந்தால்
கனவுகளிலாவது வாழ்ந்திருப்பேன் அல்லவா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன