முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /பூத்தோடு

வெகு நாட்களாகத் தேடி வந்த தோழி அவள்.
பள்ளி நாட்களில் ஊரில் ஒரு மஞ்சள் பூவைப் பறித்து, காதில் தோட்டிற்குப் பதில் மாட்டிக் கொண்டு வருவாள்.
பள்ளிச் சீருடையான பச்சைப் பாவாடை, மஞ்சள் சட்டையின் வண்ணத்திற்கு அது மிகப் பொருத்தமாக இருக்கும்.
காலங்கள் உருண்டோடி, இன்று தான் பெரிய ஓவியராகி விட்ட நிலையில், அவள் பெயரை முகநூலில் பார்த்ததும், மெசஞ்சரில் தன்னை அறிமுகம் செய்வதாய்க் குறுஞ்செய்தி போட்டு, அரும்பாடு பட்டு அலைபேசி எண்ணை வாங்கி விட்டான்.
இயல்பாகப் போனில் பேசிய அவள், திருமணம் ஆகி, பள்ளி செல்லும் வயதில் இரு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர் சொந்தத் தொழில் செய்து வருவதாகவும் கூறி, இவன் வளர்ச்சியை ஊடகங்கள் மூலம் அறிந்ததாகக் கூறி வாழ்த்தினாள்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை, பள்ளி நண்பர்கள் எல்லோரும் ஒரு ஹோட்டலில் சந்திக்க உள்ளதாகக் கூறி அவளையும் அழைக்க, வருவதாகச் சொன்னாள்.
அன்று மாலை அவளை முப்பது வயதுப் பெண்ணாகக் கற்பனை செய்து வரைந்தான்.
காதில் மட்டும் தோட்டிற்குப் பதிலாக அந்த மஞ்சள் பூவை ஞாபகமாக வரைந்தவன் , தானே வியந்தான்.மிக அழகாக அமைந்திருந்தது அந்த ஓவியம் !
ஞாயிற்றுக்கிழமை அவளைப் பார்க்கும்போது இதை அவளுக்கு அன்பளிப்பாகத் தந்தால் மகிழ்வாள்.
ஞாயிற்றுக்கிழமை…
பழைய பள்ளி நண்பர்களைப் பார்க்கக் கிளம்பிய அவள், காதில் தங்கம் போல மின்னும் கவரிங் கம்மலைப் போட்டுக் கொண்டாள்.
குடிகாரக் கணவன் இருக்கும் நகைகளை எல்லாம் விற்று அழித்ததை ,வெகு நாட்கள் கழித்துச் சந்திக்கும் பள்ளி நண்பர்களிடம் சொல்ல முடியுமா என்ன?

பி. ஆர்.கிரிஜா/ பரிவு – விருட்சம் நாளிதழ்

2 Comments on “முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /பூத்தோடு”

மரு. ச. கந்தசாமி உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன