உ.வே. சாமிநாதையர்/புதியதும் பழையதும்

  1. ‘என்ன வேண்டும்?’

தமிழ்நாட்டிலுள்ள சிவஸ்தலங்களுள்ளே பூமி தேவிக்கு ஹ்ருதய கமலமென்று சிறப்பிக்கப் பெறுவது திருவாரூர். சிவபெருமான் புற்றிடங்கொண்டு பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கப் பெற்றதாகிய பெருமையை உடையதும் அதுவே. அங்கே திருக்கோயிலில் ஸ்ரீ முசுகுந்த சக்கரவர்த்தியால் தேவலோகத்திலிருந்து கொணர்ந்து பிரதிஷ்டை செய்யப்பெற்ற ஸ்ரீ தியாகேசப்பெருமான் விளங்குகிறார். அம்மூர்த்திக்குத்தான் ஏனைய மூர்த்திகளைக் காட்டிலும் சிறப்புக்கள் அதிகமாக நடப்பதுண்டு; நாள் தோறும் பூஜைகளும் அவ்வப்போது திருவிழாக்களும் மிக விரிவாக நடைபெறுவது வழக்கம். [1]திருவந்திக் காப்பு அத்தலத்தில் ஸ்ரீ தியாகேசர் சந்நிதியில் தொன்றுதொட்ட விசேஷமுடையது.

சிவபக்தர்கள் அந்தத் தரிசனத்தைச்செய்து இன்புறுவதற்கு ஆவலுற்றிருப்பார்கள். இந்தச் சிறப்பினால் ஸ்ரீதியாக ராஜப்பெருமானுக்குத் திருவந்திக்காப்பழகர் என ஒரு திருநாமம் வழங்குகின்றது.

தஞ்சாவூரில் இருந்த [2]சரபோஜிமன்னர் ஒருமுறை திருவாரூர் சென்றிருந்தார். அங்கே அவருக்கு அரண்மனை முதலியன உண்டு. அவர் ஸ்ரீதியாகேசர்பால் ஈடுபட்டவர் : திருவாரூருக்குச் செல்லும் காலங்களில் திருவந்திக்காப்புத் தரிசனம் செய்து உள்ளமுருகி இன்புறுவார். ஒருநாள் அங்ஙனம் தரிசனம் செய்யும்போது திருவந்திக்காப்பு மிகவும் சிறப்பாக நடை பெற்றது. தீபாராதனைக் காலத்தில் பலவகையான உபசாரங்கள் முறைப்படி நிகழ்ந்தன. பலவகையான வாத்தியங்கள் முழங்கின.

வாத்தியப் பணிவிடை செய்பவர்களுள் சின்னத் தம்பியென்ற ஒரு நட்டுவன் இருந்தான். அவன் எப்பொழுதும் விபூதி ருத்திராட்ச தாரணம் செய்து கொண்டு விளங்குபவன்; ஸ்ரீ தியாகேசப் பெருமானுக்குச் சுத்தமத்தளம் வாசிக்கும் தொண்டு பூண்டவன் ; சிறந்த பக்திமான்.

சரபோஜிமன்னர் தரிசனம் செய்கையில் உபசாரங்களுள் ஒவ்வொன்றையும் கவனித்துவந்தார். அவர் கவனித்து வருதலை யறிந்த வாத்தியக்காரர்கள் தாம் நாள்தோறும் இயல்பாக வாசிப்பதைக் காட்டிலும் தம் திறமையை அதிகமாக அன்று காட்டி ஊக்கத்தோடு வாசிக்கலானார்கள். முன்னே கூறிய நட்டுவனும் சுத்தமத்தளத்தை வாசித்து வந்தனன். அவன் ஸ்ரீதியாகராஜமூர்த்தியின் திருவடியில் ஈடுபட்டவனாதலின் தன் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு வாசித்தான். மற்றவர்களைப்போல் அரசரை உத்தேசித்து அதிக ஊக்கமுடையவனாக அவன் காணப் படவில்லை. அவனுடைய உள்ளத்திலிருந்த பக்தி முகத்திலே புலப்பட்டது. வேறுயாதொன்றிலும் நினை வில்லாமல் ஒன்றுபட்டமனத்தோடு அவன் வாசித்து வருவதை மன்னர் கவனித்தார். அவன் வாசிக்கும் வாத்திய லயமும் அவனுடைய அன்போடு கூடிய மனோலயமும் அவருடைய உள்ளத்தைக் கவர்ந்தன. அவனது தோற்றப் பொலிவையும் இயல்பாகவே அத் தொண்டில் அவன் ஈடுபட்டு நிற்பதையும் உணர்ந்து அவர் மனங் குளிர்ந்தார்; ‘இந்த மூர்த்திக்குச்செய்யும் உபசாரங்களில் யாருக்குத்தான் பக்தி பிறவாது !மிகவும் பரிசுத்தனாக விளங்குகின்ற இவனுடைய பணி விடை நமது மனத்தை அதிகமாகக் கவர்கின்றது என்று எண்ணி மெல்ல அந்த நட்டுவனது அருகிற் சென்றார். யாவரும் அஞ்சி விலகி வழிவிட்டு நின்றனர். நட்டுவனோ தன் கண்ணைத் திறவாமலே வாசித்துக்கொண்டு நின்றான். தானாக அவன் கண்ணைத் திறந்து வாத்தியத்தை நிறுத்தும் வரையில் அவனுடைய வாத்திய வாசிப்பிலும் தோற்றத்திலும் சரபோஜிமன்னர் தம்மை. மறந்து ஈடுபட்டனர் ; அவருக்கு அவன் வாசிப்பு ஒவ்வொரு நிமிஷத்திலும் இன்பத்தை விளைவித்தது.

வாசிப்பதை ஒருவகையாக நட்டுவன் பூர்த்தி செய்தபின்பு தியாகேசப்பெருமானைக் கும்பிடுவதற்காகக் கண்ணைத் திறந்தான். தனக்கு அருகில் அரசர் நிற்பதை யறிந்து திடுக்கிட்டான். அவனது உடல் பயத்தால் நடுங்கியது.உடனே அரசர், “சும்மா இரு, அப்பா! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

நட்டுவனுக்கு மனம் கலங்கியது. அருகிலிருந்த வாத்தியக்காரர்களும் பிறரும் அவனையும் மன்னரையும் விழித்த கண்மூடாமல் பார்த்துக்கொண்டே நின்றனர். ‘இந்த அதிர்ஷ்டம் நமக்கு இல்லையே!’ என்று சிலர் எண்ணினர். நட்டுவனுக்குப் பேச நா எழவில்லை. அவன் தன் மனத்திலுள்ள கருத்தை வெளியிட அஞ்சுவதை உணர்ந்த சரபோஜி மன்னர், உனக்கு எது வேண்டுமானாலும் கேள்; தருகிறேன்; பயப்படாதே” என்றார். உடன் இருந்தவர்கள் எதை அவன் கேட்பானோவென்று கூர்ந்து கவனித்து நின்றனர்.

நட்டுவன், “எங்களையெல்லாம் பாதுகாத்து வரும் மகாராஜா அவர்களே! அடியேனுக்கு ஒரு வரங கொடுக்க வேண்டும். ஸ்ரீ தியாகேசப்பெருமானுடைய மகா சந்நிதானத்தில் திருவந்திக்காப்பு வேளையில் அடியேன் என்றும் இந்தப் பணிவிடையையே செய்து கொண்டிருக்கும்படி கட்டளையிட வேண்டும்; இதுவே எனக்குப் போதுமானது. இதையே நான் என்றைக்கும் செய்து வாழும்படி அருள் புரிய வேண்டும்” என்று கைகுவித்துக் கொண்டே சொன்னான். அவனுடைய கண்களிலிருந்து தாரை தாரையாக நீர்பெருகியது.

சரபோஜியரசர் சங்கீதப் பயிற்சி மிக்கவரென் பதையும் பல சங்கீத வித்துவான்களையும் வாத்தியக் காரர்களையும் தம் ஆஸ்தானத்தில் இருக்கச்செய்து பாதுகாத்து வருபவரென்பதையும் அந்த நட்டுவன் நன்கு அறிந்தவன்; ஆதலின் தஞ்சைக்கே தன்னை அழைத்துச் சென்றுவிட்டால் ஸ்ரீ தியாகேசப்பெருமான் பணிவிடையினால் வரும் ஆனந்தத்தை இழக்க நேருமேயென்று அவன் எண்ணிக் கலங்கினான்; அவ்வரசருக்குத் தன்பால் உண்டான அருள் தியாகப்பெருமானது பிரிவை உண்டாக்கித் தனக்குத் துன்பத்தைக் கொடுத்தால் என் செய்வதென்று அஞ்சினான்.
அவன் அரசரிடம் கூறியவற்றைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள். அரசருக்கு அவனுடைய தீவிரமான பக்தி நன்கு புலப்பட்டது.

“உன்னுடைய இஷ்டம்போல் சௌக்கியமாக இந்தப் பணிவிடையையே செய்துகொண்டிரு. பெருவள்ளலாகிய ஸ்ரீதியாகேசரைத்தவிர னுடைய பணிவிடையை ஏற்றுக்கொள்ளும் யோக்கி யதையுள்ள பிரபு வேறு யாரும் இல்லை. உன் பாக்கியமே பாக்கியம்!” என்று சொல்லி அவனை நன்றாகப் பாதுகாக்கும்படி தேவஸ்தானத்தாருக்கு உத்த ரவு செய்தார். அன்றியும் அவனை ஒருமுறை தம் அரண்மனைக்கு வருவித்து உயர்ந்த சம்மானங்கள் செய்து, “உன்னுடைய பணிவிடைக்கு எத்தகைய தீங்கும் வாராமல் இருக்கும்படி நாம் பார்த்துக் கொள்வோம் ” என்று சொல்லி யனுப்பினார்.

இந்த நிகழ்ச்சியை அறிந்தவர்கள், “பெரிய புராணத்தில் திருவாரூர்த் திருக்கூட்டச் சிறப்பைப்பற்றிக் கூறும் பகுதியிலுள்ள, [3]’கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறல்’ என்பதை இவனிடம் கண்டோம்” என்று சொல்லிச்சொல்லி அவனைப் பாராட்டினார்கள்.

[1] சாயங்கால பூஜை.
[2]. இவருடைய வரலாற்றைச் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் என்னும் புத்தகத்தில் விரிவாகக் காணலாம்.

[3]. கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறல் – இறைவன்பாற் கூடிய அன்பினால் அவனை வணங்கும் இன்பத்தையன்றி முத்தியின்பத்தையும் வேண்டாத வீரம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன