ஸ்ரீராம்/அப்பாவின் காதல்

ஹால் சோபாவில் உட்கார்ந்து இருந்த ஜேம்ஸ், சுவரில் மாட்டியிருந்த அப்பாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அப்பாவின் நினைவு தினம் .
அவர் இப்படித்தான் அடிக்கடி கொல்லைப்பக்கம் ஒரு பெட்டியின் மேல் உட்கார்ந்து அம்மாவின் நினைவில் கிடார் வாசித்துக் கொண்டிருப்பார். அம்மாவும் அப்பாவும் தங்களுடைய டீனேஜ் பருவத்தில் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட காதலை பற்றி அடிக்கடி சொல்லி இருக்கிறார்கள். அம்மா சர்ச் கொயரில் பாடுபவர். அப்பா கிட்டார் வாசிப்பார். இருவரும் காதலாகி கசிந்து திருமணம் புரிந்து கொண்டார்கள். இரண்டு குழந்தைகள் ஆனபின் இடையில் எதிர்பாராமல் அம்மா மறைந்ததும் அப்பா பித்து பிடித்தவர் போல ஆனார். அவர் மறையும் வரையிலும் பெரும்பாலான மாலை நேரங்களில் இப்படித்தான் உட்கார்ந்து, இவர் வாசித்து அம்மா ரசித்த இசை துணுக்குகளை கிட்டாரில் வாசித்துக் கொண்டிருப்பார். அவர் தன்னை புகைப்படம் எடுக்க யாரையும் அனுமதித்ததில்லை. இந்தப் படம் கூட இப்படி அவர் வழக்கமாக அமரும் நிலையை தன் நண்பனிடம் காட்டி வரைந்தது தான்.
அப்பா தன் துயரங்களை ஒருபோதும் இவர்களிடம் காட்டிக் கொண்டதில்லை. இவர்களிடம் மிகவும் பாசமாகவே இருந்தாலும், அடிக்கடி இவ்வாறு தனிமையில் உட்கார்ந்து கிடார் வாசித்துக் கொண்டிருப்பார் . மறைந்த அம்மாவின் நினைவை மறக்க முடியாமல் பெரும்பாலும் மாலை நேரங்களில் கண்கள் நனைய இப்படி வாசித்துக் கொண்டிருப்பார். அம்மாவின் மீதான அப்பாவின் அந்த அபரிமித காதல், அதனால் அவர் பட்ட பாடு இவன் மனதையும் மிகவும் பாதித்திருந்தது.
இப்படிப்பட்ட அன்பைப் பெற தன் அம்மா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தோன்றும். அதை அனுபவிக்க முடியாமல் பாதியிலேயே மறைந்ததால் கொடுத்து வைக்காதவள் என்றும் தோன்றும்.
எப்போது இந்தப் படத்தை பார்த்தாலும் அதனாலேயே இவன் கண்கள் நீரில் நிறையும்.

One Comment on “ஸ்ரீராம்/அப்பாவின் காதல்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன