தி சோ வேணுகோபாலன் கவிதைகள்/என்ன பொருள்?/

தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்

துடித்து நெளிந்து வெடித்தனை!
வயிற்றைச் சுருட்டி
மடித்து அலையாக்கிக்
குமுறியதேன்?
எந்த மௌனச்சுமை
உந்தன்
இதயத்தில் பிறந்து பின்
வளர்ந்து நசுக்கியது?
உஷ்ணப் பெருமூச்சு
குரல்வளை தாண்டிக்குதித்துக்
கொக்கரிப்பதும் ஏன்?
நின் கடைவாய்வழி
வெற்றிலைச் சாறு
வழிந்து
பசுங்கதிர் பொசுக்கிக்
கருந்தடம் போட்டதேன்?
பல்லற்ற கிழவியின் வசையும்,
பச்சிளம் சிறாரின் கேவலும்,
நின் பேச்சானதேன்?
கோபுரம் ஒன்றும்,
மாளிகை சிலவும்,
சரிந்து சிதைந்து மரணமடைந்தன:
நீயும்
காலத்தின் போக்கை உணர்ந்தனை என்று
கொண்டாலும்
குடிசையும் தீய்ந்து புழுதியாய் மாறிட
என்ன காரணம்
நீ காட்டுவாய்?
என்ன பொருள்
நின்
பேய்க் கூத்துக்கே?
22


22