
கிண்ணத்தின் வண்ணத்தில் மக்கள்
எண்ணத்தைத்தொட்டாய்!
சித்தத்தின் சத்தத்தில் கவிதை
முத்துக்களை இறைத்தாய்!
பூவுக்குள் தேன் போலப் படைத்த
பாட்டுக்குள் நின்றாய் ஒருநாள்
காட்டுக்குக்கண்ணம்மா
பேட்டைக்குப்போய்விட்டாய்!
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி
பட்டாற்போல் நீ திரை
மெட்டுக்கு பண் சுமந்து
புகழடிகள் பல பட்டாய்!
தமிழ்த்தாய் உன் நாவில்
தளிர்நடனம் ஆடி நின்றாள்.
அமிழ்தான உன் கவிதை
அத்தனையும் ரசித்துவிட்டு
அமரலோகத்தார் ருசித்திடவே
அங்கே அனுப்பிவிட்டாள்.
உனக்குத்தான் போதை வரும்
போதையிலும் தமிழ்ப்பாதைமட்டும்
தடுமாறாக்கவிஞன் நீ!
தமிழ்ப்போதை கொண்டவனை
தனிப்போதையில் ஆழ்த்தி
தன் வசமாக்கிக்கொண்ட காலனுக்கு
தண்டனையை யார் தருவர்?
உன் கவிதைக்குழலில்
ஊதுவித்த ராகங்கள்தான் எத்தனை!
அர்த்தமுள்ள இந்துமதம் உரைத்து
அர்ததமற்ற மௌனத்தில் ஆழ்ந்து
அமர நிலை கண்டுவிட்டாய்!
கண்ணன் என்றாலே உன் நினைவும்கூடவரும்,
காற்றுக்கும் ஓசைவரும்!
உன் ஆத்மா சாந்திக்கு
ஒவ்வொரு மனமும்
வேண்டியே நிற்கும்!.
“”””**
