தனிப்பாடல் திரட்டு/புலவர் அ மாணிக்கம்

சுப்பிரதீபக் கவிராயர் பாடல்கள்

தமிழ் கேட்க உயிர்த்தெழுவாய்

(திறவான்ன்னரங்க மன்னன் இறந்தபோது பாடியது)

தென்னரங்கன் அரங்கன்என் பார்; வாய்திறவான்
கண்விழியான்; திரும்பிப் பாரான்,
என் அரங்கன்? தூங்கு அரங்கன்; ஏழையர்பால்
கருணையுடன் இரங்கா ரங்கன்;
மன்னர் அங்கன் தமிழ்ப்பெருமான் மழவரங்கன்
அளித்தருளும் மைந்தனான
குன்னரங்கா! எனக்கு இரங்காய் கொண்டுவந்த
தமிழ்க்கு இரங்கிக் குழைந்து எழாயே.

திருவரங்கத்தில் உள்ள திருமாலைச் சபையின் தலைவன் என்பர். அவன் வாய் திறக்க மாட்டான்; கண்ணை திறந்து பார்க்க மாட்டான்; திரும்பிப் பார்க்க மாட்டான். அவன் எத்தகைய அரங்கன் என்றால் தூங்குகின்ற அரங்கன். ஏழையரிடம் அருள்காட்டி இரங்காத அரங்கன். இது நிற்க, மன்னரைத் தனக்கு உறுப்பாகக் கொண்ட தமிழுக்குத் தலைவனான மழவரங்கன் என்பவனின் மகனான ‘குன்னரங்கன்’ என்னும் பெயரையுடையவனே! நீ எனக்கு இரங்கமாட்டாய்; என்றாலும் நான் கொணர்ந்த பாடலுக்கு இரங்கி உயிர் பெற்று எழுவாயாக!