
‘டாட்டா பை பை. போன உடனே போன் பண்ணு’ . ரயில் பெட்டியின் கதவோரம் நின்று நண்பனுக்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டு திரும்பி வந்து பார்த்தால், நாம் ஓர சீட்டில் வைத்திருந்த பேக்கை சற்றே நகர்த்தி விட்டு ஜன்னல் பக்கம் சாய்ந்து உட்கார்ந்தபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அவரருகில் அமர்ந்து அவரையே முறைத்துப் பார்த்தாலும் அவர் திரும்புவதாகத் தெரியவில்லை.
அந்தப் பக்கம் ஓடும் மரங்களை ஒன்று விடாமல் எண்ணிக் கொண்டிருப்பது போல் ஒரு பாவனை .’சீட்டில் இருந்தபடியே டாட்டா சொல்லி இருக்கலாம்’ என்று நம்மை நாமே திட்டிக்கொண்டு பேக்கை எடுத்து கீழே சீட்டுக்கு அடியில் தள்ளி விட்டு ஒரு முறை குனிந்து அந்த பேக்கை லேசாக வெளியே எடுத்து நம் கால் படும்படி வைத்துக் கொள்கிறோம் . உள்ளே இருப்பது ஒரு ஜோடி வேட்டி சட்டையும் கசங்கிப்போன கைலியும் போன வார பத்திரிகை களும் தான் என்றாலும் பழகிப்போன எச்சரிக்கை .எப்போதோ ஒரு முறை ரயிலில் ஒரு மஞ்சள் பையை தவறவிட்ட அனுபவம். அதற்குள் தேங்காய் பழம் இருந்த ஞாபகம்.
ரயில் ‘தடக் தடக்’ என்று வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. இப்போதுதான் இந்த உலகுக்கு வந்தவர் போல் திரும்பிய அந்த ஓர சீட்டு நம்மிடம் ‘சார் ,கொஞ்சம் பாத்ரூம் வரை போயிட்டு வந்துடறேன். என்னோட ஓர சீட்டில் யாரும் உட்காராமல் பாத்துக்கிறீங்களா, ப்ளீஸ்’
‘ என்னோடு ஓர சீட்டா, என்னிடமிருந்து பறித்தது மட்டும் அல்லாமல் அதை அழுத்தமாகச் சொந்தம் வேறு கொண்டாடி அதையும் நம்மிடமே சொல்லிவிட்டுப் போகிறார்’ . எப்படி இருக்கும் நமக்கு. வெறும் தலையை மட்டும் ஆட்டி விட்டு அவர் எழுந்தவுடன் நகர்ந்து ஓரத்தில் உட்கார்ந்து ஜன்னல் பக்கம் சாய்ந்த படி கண்களை மூடிக் கொள்கிறோம்.
தூங்குவது போல் பாசாங்கு செய்ய ஆரம்பிக்கிறோம். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. லேசாகக் கண்ணைத் திறந்து பார்க்கிறோம். மனிதர் இன்னமும் வரவில்லை. அடுத்து ஐந்து நிமிடங்கள் கழிந்தன. ஏதோ ஆள் அரவம் கேட்கிறது. கண்களை ‘பச்சக்’கென்று இறுக்க மூடிக்கொண்டு தூங்குவதுபோல் பாசாங்கு செய்கிறோம் . ‘இது என்னோட ஓர சீட்டு ‘என்று உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிறோம் . நமக்கு அருகில் யாரோ உட்காருவது புரிகிறது. அவர்தான், நம்மை நெருக்கிக் கொண்டு உட்காருகிறார். நம் தூக்கத்தைக் கலைத்து விடலாம் என்று பிளான் . முடியுமா நம்மிடம்.
லேசாகக் குறட்டை விடுவது போல் சத்தமிட்டபடி ஜன்னல் கம்பி ஓரம் தலை சரிந்து அமர்கிறோம் .அடுத்த ஸ்டேஷன் வருகிறது. ‘காபி காபி’ என்று சத்தம். ஒரு காபி சாப்பிடலாம் என்று ஆசை. ‘ஓர சீட்டா , காபியா’. கடைசியில் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி காபி ஆசை ஜெயிக்கிறது. காபி ஆசையால் கண்ணைத் திறந்தால் நம்மையே முறைத்துப் பார்த்தபடி அவர் .
மனுஷன் எவ்வளவு நேரம் கண்ணை மூடாமல் நம்மையே உற்று பார்த்துக்கொண்டு இருந்தாரோ. ‘ சார் கொஞ்சம் இப்படி வர்றீங்களா , என்னோட ஓரஸீட்டை விட்டுட்டு’ என்றபடி அவர் எழுகிறார். நாம் முதலில் பையை வைத்து ரிசர்வ் செய்துவிட்டு சென்றதையும், அவர் அதைத் தள்ளி வைத்து விட்டு உட்கார்ந்ததையும் சொல்லி நமது ஓர சீட்டு உரிமையை ஸ்தாபிக்க நினைப்பதற்குள் ,அவர் ஜன்னலுக்கும் நமக்கும் இடையே காபி வாங்க நாம் விட்ட ஒரு சின்ன இடைவெளியில் புகுந்து அமர்கிறார் லேசாக இடித்துக் கொண்டு.
நாம் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு விலகி அமர்கிறோம். ‘ வம்புச் சண்டைக்குப் போவதில்லை . வந்த சண்டைக்கும் போவதில்லை’ என்பது நமது குணம். அதுவும் மனிதர் பெரிய மீசை வேறு வைத்திருக்கிறார். நம்ம மீசை அரும்பு மீசைதான். எதுக்கு வம்பு. மனிதர் கொஞ்சம் நகர்த்தி நகர்த்தி சப்பணம் போட்டு சமப்பிரம்மமாய் உட்கார்ந்து கொண்டு காப்பி வாங்கி சப்பிச் சப்பிக் குடிக்க ஆரம்பிக்கிறார் . நாம் மட்டும் என்ன குறைச்சலா. நாமும் காபி வாங்கி அதே போல் சப்பிச் சப்பிக் குடிக்கிறோம். அவரைப் பழி வாங்கியது போல் ஒரு திருப்தி .
கிளம்புகிறது ரெயில் . கொஞ்ச தூரம் தான் போயிருக்கும் . அப்போது அடுத்த பெட்டியில் யாரோ எடுத்த வாந்தி காபி காற்றில் கலந்து வந்து காபியை ரசித்து உறிஞ்சிக் கொண்டிருக்கும் நண்பர் முகத்தில் வந்து மோதுகிறது.
‘ அய்யய்யோ உங்க ஓர சீட்டில் உட்கார்ந்தது வம்பா போச்சே’ என்று சத்தமிட்டபடி பாத்ரூமுக்கு ஓடும் அவரைப் பார்த்த நாமும் காலியாக இருக்கும் அவரது அந்த ஓர சீட்டை விட்டுவிட்டு நன்றாக விலகியே இந்தப்பக்கம் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்ய ஆரம்பிக்கிறோம்.
———————————————-

பாவம் “ஓர சீட்”க்காரர்.
அந்த ஓர சீட்டு எத்தனை வாந்தியை பார்த்திருக்கும்.
இப்படி கூட எழுத முடியுமா?
உவ்வே 😂