
முகம் கழுவி பொட்டு இட வழக்கம்போல் ரகுவோட சிவப்பு மர பீரோ கதவிலிருக்கும் கண்ணாடியை பார்த்த உமா, அங்கே கண்ணாடிக்கு பதில் பிள்ளையார் படத்தை பார்த்து வியந்தாள்.
“ டேய் ரகு..கண்ணாடி மேலே படத்த எதுக்கு ஒட்டியிருக்கே?”
“ அம்மா ஏதோ படமில்லமா. சித்தி விநாயகர் படம். கண்ணாடிதான் நிறைய இடத்தில இருக்கே. புத்தகத்தை எடுக்கும்போதெல்லாம் இவர பாக்கறது ரொம்ப தெம்பா இருக்கு”
மகனின் பக்தியை மெச்சிய உமா தன் கணவனிடம் பெருமையாக “ பாருங்க எம் பிள்ளைக்கு நல்ல புத்தி வந்துடுச்சு” என்றாள்.
“ அதெல்லாம் ஒன்னுமில்ல.. பரிட்சை சரியா எழுதியிருக்க மாட்டான். பாஸ் பண்ணிவிடுன்னு பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுக்கறான்” என்றார் கணவர்.
“ பக்தியுமில்ல லஞ்சமுமில்ல கண்ணாடிய உடச்சுட்டு அதை மறைக்க என்ன ஒட்டியிருக்கான். முதுகெல்லாம் கிழிக்குது. கொஞ்சம் எடுத்து விடுங்கப்பா” என்ற பிள்ளையார் முனகல் யார் காதிலும் விழவில்லை.
98
