
அம்பாள் சன்னதிக்குள் நுழைந்த சீனிவாசன், அவரது மனைவி சாவித்திரி மற்றும் மகள் அம்பிகா ஆகியோரை, “வாங்கோ!” என்று வரவேற்ற அர்ச்சகர், “அம்பாள் பேர் அஷ்டபுஜ துர்க்கை. மகிஷாசுரமர்த்தினின்னு இன்னொரு பேரும் உண்டு. அம்பாளை மனசார வேண்டிண்டா, நினைச்ச காரியம் நடக்கும்” என்றார்.
பிறகு, கற்பூரத்தை ஏற்றி, அம்பாளின் முன்னால் இடமும் வலமுமாகக் கையால் சுற்றிக் காட்டினார்.
“பாருங்கோ. அம்பாளோட எட்டு கைகளிலேயும் ஒவ்வொரு ஆயுதம் இருக்கு. நல்லா சேவிச்சுக்கோங்க.”
மூவரும் கைகூப்பி வணங்கினர்.
அம்பிகா, கண் இமைக்காமல் அம்பாளையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, வெளியே வந்து காரில் ஏறினர்.
“அப்பா, மூணு நாள் முன்னாடி என்னைப் பெண் பார்த்துட்டுப் போன அந்த பேங்க் வரன் வேண்டாம்பா.”
சாவித்திரி திடுக்கிட்டாள்.
“ஏன்? பையன் பார்க்க நல்லாயிருக்கான். நல்ல வசதி. அப்புறம் ஏன் வேண்டாங்கறே?”
“அம்மா, அம்பாள்கிட்டேர்ந்து எனக்கு உத்தரவு கிடைக்கலை.”
சென்னை திரும்பியதும் அவர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. அம்பிகாவைப் பெண் பார்த்துவிட்டுச் சென்ற வங்கி மாப்பிள்ளையான சேகர், பண விஷயத்தில் முறைகேடாக நடந்துகொண்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தான் என்பதே அந்தச் செய்தி.
