WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட “கோட்ட வூடு” என்ற இரண்டாவது சிறுகதை தொகுப்பில் இருந்து திரு தமிழ்செல்வன் ரத்னபாண்டியன் எழுதிய “ஈகோ சம்ஹாரம் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு

இதோ சாத்தூர் பஸ் ஸ்டாண்ட்; சின்னது தான். எட்டு பஸ் நின்னாக்கூட பூரா இடத்தையும் அடைத்துவிடும் போன்ற தோற்றம். எதிர்த்தாப்ல நான் படித்த பள்ளிக்கூடம். அதுக்கு முன்னாடி ஸ்கூல் கேட் பக்கமா தாயில்பட்டி மினி பஸ் நிற்கிற ஸ்டாப். பஸ் ஸ்டாண்ட்க்கு இடப்புறம் பழக்கடை, சேவுக்கடை; . அஞ்சாறு ஆட்டோ
ரிக்ஷாக்கள் சவாரிக்காக உறுமீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு போல.
பஸ் ஸ்டாண்ட் முழுதும் வெள்ளரிக்காய் வியாபாரிகளின் ‘வெள்றீ; வெள்றீ’ மற்றும் பயணிகளின் பேச்சுக்களால் நிறைந்திருந்தது. கிழக்குப் பக்கத்திலிருந்து வந்த யூரின் நாற்றத்தையும் நடைமுறைல சேர்த்தேயாகணும். அதை மட்டும் எப்படி நாசுக்காக விட முடியும்? அதுக்குக் கிழக்காக ரயில்வே ஸ்டேஷன் சாலை. ரொம்ப பக்கத்துல தான். பஸ்ஸ்டாண்டும் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துல, பக்கத்துல இருப்பது பெரிய சௌகரியம். அது வெளியூர் பயணிகளுக்கு வரப்ரசாதம். அதுவும் இங்கே ரயில்ல இறங்கி, ஒரு பஸ்ஸையோ, ஆட்டோவையோ பிடிச்சு இருக்கங்குடி மாரியம்மன் கோவிலுக்குப் போறவங்களுக்குப் பெரிய சௌகரியமே. ராத்திரி ஒரு மணிக்கு ரயில்லேருந்து இறங்கினாலும் பொடி நடையா பஸ்ஸடாண்ட் வந்து உட்கார்ந்து கொள்ளலாம். டீ காப்பி குடிச்சிக்கிடலாம். சின்ன வயசிலிருந்தே பார்த்து வளர்ந்த பத்திரிகைக் கடை அதே தெற்குத் திசையிலே. ஆனந்த விகடன், குமுதம் எல்லாமே கொடியில் கைக்குட்டையைக் காயப் போடுவது போல தொங்கிக் கொண்டிருந்தன. நிறைய பத்திரிகைகள் மின் பத்திரிகைகளாக மாறிவிட்டன.
வடக்கே, 26 வயசிலிருந்தே வங்கி அதிகாரியாக டெல்லி, பம்பாய்,
கல்கத்தானு வேலை பார்த்து விட்டு, இந்த வருடந்தான் பணி ஓய்வு பெற்று, மகள்களின் வேலைக்கொசரமாக, சென்னையிலே ஒரு அபார்ட்மெண்ட்ல 795 சதுர அடிக்கு சொந்தக்காரனாகியுள்ளேன். மகள் ஒருத்தி சென்னையில் கணிணி நிறுவனத்தில் பணியில். இளையவள் பெங்களூரு நகரில் கணிணி அலுவல். ஆதலால், சாத்தூர் திரும்பி வந்து ஸெட்டிலாக சான்ஸில்லை. அடிக்கடி இங்கே வர்றதுமில்லை. இனிமேல் நிறைய நேரம் கிடைக்கும். அடிக்கடி வரணும்.
தாயில்பட்டி மினி பஸ்ல ஏறி உட்கார்ந்தேன். சாத்தூர் பைபாஸ் ரோட்டைப் பைபாஸ் பண்ணினால், படந்தால் கிராமத்துக்குக்கு முன்பே இடது புறப் புதுச் சாலையில் என் தம்பி வீடு. டெல்லிலருந்தபோது நாலு வருஷத்துக்கு ஒரு தடவை தான் தம்பி வீடு வந்ததாக நினைவு. அடிக்கடி வர முடியவில்லை. நான் இன்று வருவதை அவனுக்கும் இரண்டு கல்லூரி நண்பர்களுக்கும் சொல்லியிருந்தேன். கல்லூரி நண்பன் கருணுடன் நாளை இருக்கன்குடி கோவில் போகணும் என்று பேசி முடிவெடுத்தாச்சு. இன்னொரு நண்பன் நடராஜனுக்கு உடம்பு சரியில்லை.
போய் பார்த்து விட்டு வரணும். ஊர் ரொம்பவும் மாறவில்லை. நிறைய தொலை தூர பஸ்கள் ஊருக்குள் நுழையாமல் பைபாஸிலேயே செல்வதே பெரிய மாற்றமாக தெரிந்தது. சேவுக்குப் பேர் பெற்ற ‘ஷண்முக நாடார் கடைக் கிளை’ ஒன்று பைபாஸில் முளைத்திருந்ததைக் கண்டேன். சில கட்டிடங்கள்ல திடீர்னு ஒரு செடி ஏதோ இடுக்கிலிருந்து ஓரடிக்கு மேலே வளர்ந்தார்ப்ல பச்சையாத் தெரியிற மாதிரி. பெட்டிக் கடைகள், மெடிகல் ஷாப், டீக்கடைகள் எல்லாம் வேகமாகப் பின்னாலே ஓடிய மாதிரியிருந்தது; இல்லை; பஸ்ஸைத் துரத்திய மாதிரி எனக்குத் தோணிச்சு.
குருலிங்காபுரம் நிறுத்தம் வந்தவுடன், எனது முதுகுப் பையுடன் இறங்கி, தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மண் பாதைகள் எல்லாவற்றுக்கும் தார்ப் பூச்சு. தம்பி வீட்டு முன் கூட தார் ரோடு. தம்பியும் வீட்டின் பின்புலத்தைக் குறைத்து, வசிக்குமிடத்தை அதிகப்படுத்தி, இரண்டாவது டாய்லெட்டும் வெஸ்டர்னாகப் பொருத்தியிருந்தான்.
தம்பி, தம்பி மனைவி இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் லேசா ஆச்சரியம். இன்று சாத்தூர் வருவதாக சொல்லியிருந்தேன். எப்பன்னு சொல்லல. சொன்னா, எனக்காக தனது காரை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வந்திடுவான். அவனது கார் சவாரிகள் கெட்டு போகும். பிஸியான ஆளு அவன். அவனது கார்
சாத்தூர்காரங்களுக்கு நம்பத் தகுந்த கார். தம்பிக்காகவே சில ரெகுலர் வெளியூர் சவாரிகளும் உண்டு. திருச்செந்தூர் கோவில், மதுரைக் கோவில், குலதெய்வம் கோவில்கள் போகணும் எனில் என் தம்பி நடத்தும் ட்ராவெல்ஸ்தான் மக்கள் நினைவுக்கு வரும். அவனை நம்பி லக்கேஜ்களை, வயதானவர்களை, குழந்தைகளைக் காரில் விட்டுப் போகலாம் – என சில வருடங்களாக சாத்தூரில் இன்றியமையாத ஆளாகி விட்டான்.
நான் திருச்செந்தூர் முருகனைத் தரிசித்து விட்டு, பக்கத்தில் ஆறு கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள குலதெய்வம் கோவிலுக்கும் போய் கும்பிட்டு விட்டு, இன்று இருக்கங்குடி கோயில் தரிசனம் பண்ணனும் என சாத்தூர் வந்துள்ளேன். அப்படியே இரண்டு மூன்று நண்பர்களைப் பார்த்துவிட்டு, இரவே சென்னைக்குப் போகணும்னு ரயிலில் பெர்த்தும் புக் பண்ணிட்டேன்.
“போன் பண்ணியிருந்தா, பஸ் ஸ்டாண்ட்டுக்கே கார் எடுத்துட்டு வந்திருப்பேனே?”
“எதிலெ வந்தீங்கண்ணே? ” – என அன்பாக விசாரித்தான் தம்பி. அவன் மூத்த மகன் மதுரைல இன்ஷூரன்ஸ் கம்பெனில; இரண்டாமவன் பிபிஏ மூன்றாம் வருடம். மூத்தவனுக்குப் பொண்ணு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
“பரவாயில்லைடா; நீயுமே ஊரு ஊராச் சுத்திகிட்டேருக்கே; உன்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு பார்த்தேன்; தெரியாத இடமா; நம்ம ஊருதானே.” அதற்குள் தட்டைக் கழுவி இட்லியையும் எடுத்து வந்து விட்டாள் அவனது மனைவி. முதலில் இட்லி, சட்னி, சாம்பார். பிறகு சூடாக தோசை போட்டுக் கொண்டு வந்தாள். இருவருமே என்னிடம் ரொம்பப் பிரியமா இருக்கிறவங்க. நாலு இட்லி, இரண்டு தோசைகளுக்குப் பிறகு சூடா காப்பி குடித்தேன். வாங்கிட்டு வந்திருந்த அம்மன்புரம் புகழ் மெல்லிய சேவுப் பொட்டலங்களை எடுத்து அவளிடம் கொடுத்தேன். பிறகு, அவள், தங்கள் மகனுக்காக வந்த மணப் பெண்கள் போட்டோக்கள் சில காட்டினாள். “தேவைப்பட்டால் நீங்கள் நேரில் வந்து பேச வேண்டியதிருக்கும்,” என்றாள் பணிவாக. “நிச்சயமா வந்துடுவேன். இந்த வருஷம் இதான் நமக்கு முக்கியமான வேலை,” என சிரித்தேன். தம்பி மகன் எங்க குடும்ப வாரிசாச்சே. நண்பன் கருணுக்கு மொபைலடித்தேன்.
அவனது ஸ்கூட்டரிலேயே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் போய் வரணும். இப்பவே கிளம்பினா, உச்சி வெயிலுக்கு முன்னாடி திரும்பி வந்துடலாம். வந்து இருவருமே பக்கத்திலுள்ள படந்தால் கிராமத்து நண்பன் நடராஜனைப் பார்க்கப் போகணும். சாத்தூர் தபாலாபிஸ்ல போஸ்ட் மாஸ்டரா இருந்து 2019ல பணி ஓய்வு பெற்றவன் அவன். அவனது மூத்த மகன் கணினித் துறையில். நடராஜனுக்கு நான்னா உயிர். பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் மூலம் எனக்கு ஆர்எம்எஸ்ல மத்திய அரசு வேலை கிடைத்தவுடன் அவனிடமும் போஸ்ட்டாபிஸூக்கு அப்ளை பண்ணச் சொன்னேன். பிகாம் படிச்சவுடன் ஏதாவது பிஸினஸ் பண்ணலாம்னு நினைச்சிட்டிருந்தவன் வாழ்க்கை, நிலையான மத்திய அரசு வேலைக்குத் தாவியது. இவனைப் போல சாத்தூரில் சிலருக்கு எனது இளம் வயதில் வழிகாட்டியாக இருந்தேன் என்பது எனக்கு தன்னம்பிக்கை ஊட்டிய காரணிகளில் ஒன்று. அவர்களால் நானும் வளர்ந்தேன். நான் டில்லிக்கு வங்கி அதிகாரியாக போகும் வரை, சில இளைஞர்களுக்கு நண்பர் கருணுடன் சேர்ந்து உதவினேன். இன்னுமே அவர்களெல்லாம் என்னை உயர்வாக நினைக்கும் நண்பர்களே. அந்தத் தற்பெருமை உறங்காமல் என்னுள் உறைந்திருந்தது. நடராஜன் அடிக்கடி சொல்லுவான்
“உன்னாலதான்டா இந்த மதிப்பும் மரியாதையும்,” என. அவனது பசங்களும் சிறப்பாகப் படித்து நல்ல வேலைகளில் ஸெட்டிலாகி விட்டனர். சுற்று வட்டாரத்தில் நல்ல பெயரும் மதிப்பும் சம்பாதித்து வைத்திருந்தான் நடராஜன்.
அவனைப் பற்றி எனது சிந்தனையானது, சுற்றிச் சுற்றி வரும்போது கருணின் ஸ்கூட்டர் ஹாரன் சத்தம் கேட்டது. உடனே நினைவுகளைக் கைவிட்டு வாசலுக்கு விரைந்தேன். “வா; இப்படியே போலாம்,” என அங்கிருந்தே ஸ்கூட்டரை நிறுத்தாமல் கூவினான். அதற்குள் எனது தம்பி வெற்றி தனது தலையை மட்டும் நீட்டி அவனிடம்,
“அண்ணே… ஒரு காப்பியாது குடிச்சிட்டு போங்கண்ணே,” என பணிவாகக் கூறினான். வெற்றி சாத்தூரிலேயே இருப்பதால் கருண், நடராஜன் போன்ற நண்பர்களுடன் நெருக்கம். நடராஜன் குடும்பத்தினர் நெல்லை, மதுரை போகணும்னா தம்பியிடம் சொல்லி விடுவர். துணைக்குன்னு தனியா பெரியவர்கள் யாரும் போகாமல் என் தம்பி பொறுப்பில் விட்டு விடுவர். தெரிந்தவர் வண்டி; ஓட்டுநர் எனில் பிரயாணிகளுக்குப் பெரும் சௌகரியங்களே.
கருண் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, உள்ளே வந்து நாற்காலியில் அவசரமா உட்கார்ந்தான். “குடிச்சிட்டு உடனே கிளம்புவோம்,” என அவசரமும் படுத்தினான். கட கடவெனக் குடித்து விட்டு வெற்றியிடமும் அவனது மனைவியிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினோம். மதிய வெயிலுக்கு முன் திரும்பணும் என்ற அவசரத்தில் இருந்தான் கருண். அவன் எனக்கு பியுசிலருந்து பழக்கம். ஒரே குருப். கணிதம், வணிகம், பொருளாதாரம் என. ஆங்கில வழிக் கல்வி. நடராஜனும் எனது வகுப்பு. மூவருக்கும் இன்னொரு ஒற்றுமை; பிகாம் முடித்த அடுத்த நாள் காலை, சிவகாசி கார்னேஷன் லித்தோ பிரஸ்ல க்ளெர்க்கா சேர்ந்ததுதான். குடும்ப நிலைமைகள் அப்படி. நான் ரெயில்வே மெயில் ஸெர்விஸிலும், நடராஜன் தபாலாபிஸிலும் சேரும் வரை அங்கே தான். தினமும் சாத்தூரிலிருந்து திருத்தங்கல் டவுன் பஸ். ஜாலியாருந்த நாட்கள் அவை. பஸ்ல வழக்கமா வரும் எஸ்ஸெஃப்ஆர் கல்லூரிப் பெண்களை அவ்வப்போது பார்த்துக் கொண்டே வருவது எங்களது பொழுது போக்கு. நான் பார்க்கிற பெண்ணை அடுத்தவன் பார்க்கக்கூடாதென ஊர் வாரியாகப் பிரித்துக் கொண்டோம். சுந்தரராஜபுரத்துல ஏறும் மாணவி எனக்கு; சின்னக்காமன்பட்டி மாணவி நடராஜனுக்கு, பாரப்பட்டி மாணவி கருணுக்கு என. மாணவிகள் பெயர்களுமே உண்மையிலேயே தெரியாது. தெரிந்து கொள்ள நாங்கள் ஆசைப்பட்டதுமில்லை. அந்த முகங்களை அவ்வப்போது நாங்கள் ரசிப்பதும், அவர்கள் எங்களை அவ்வப்போது பார்ப்பது மட்டுமே தொடர்ந்தது. கவலைகள் அறியாப் பருவம் அனைவருக்குமே.
ஸ்கூட்டர் பைபாஸ் கோட்டைத் தாண்டி, மெயின் ரோட்டில் வலது பக்கம் திரும்பி, எனது ஸ்கூல் பக்கம் இடது புறம் சென்று, இருக்கன்குடி ரோட்டைப் பிடித்தது. எட்டு கிமீ தான். போகிற பாதையிலே வலது பக்கம் வைப்பாற்றைத் தாண்டி பெரிய கொல்லம்பட்டி கிராமம் தெரிந்தது. அந்தக் காலத்திலே இருக்கன்குடி பாண்டிய மன்னர்களுக்கு அடங்கிய சிற்றரசாக இருந்தது. அரசன் பட்டப் பெயர்கள் எட்டிச் சாத்தான் என இருந்தனவாம். சின்னக்கொல்லம்பட்டி கண்மாயில் நடுகல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாம். சோழ நாட்டுச் சிற்றரசர்களைப் பற்றி பொன்னியின் செல்வனில் படித்திருந்த நான், பாண்டிய நாட்டுச் சிற்றசர்களைப் பற்றி அறியாதிருந்தேன். பிற்பாடு
“குறுநிலத்தலைவர்கள்’ என்ற நூலைப் படித்தே சிறிது விபரமறிந்தேன்.
வத்திராயிருப்புப் பகுதியில் அர்ச்சுனன் வில்லில் பிறந்த அர்ச்சுனா நதியும், வைப்பாறும் இருக்கன்குடி கோவிலைத் தீவாக்கி, பிறகு ஒன்று சேர்கின்றன. வைப்பாறு நதியானது, சிவகிரி பக்கம் வருஷநாடு மலையில் உற்பத்தியாகி வெம்பக்கோட்டை, சாத்தூர் வழியாக பாய்கிறது. மழை பெய்தால் மட்டுமே நீர்வரத்து. மற்றபடி அழகு மிகுந்த வண்டல் மண் ஆறு.
ஸ்கூட்டரை அதற்கான நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு, சந்துக்களில் நடந்து, மணலாற்றைக் கடந்து கோவிலுக்குள் போனோம். மதுரைக்குச் தெற்கே இருக்கன்குடி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். ஆடி வெள்ளிக்குக் கூட்டம் எண்ணி மாளாது. கல்லூரி நாட்களில் என் எஸ் எஸ் சேவை என பக்தர்களை வரிசைப்படுத்த, நான் இருக்கஙகுடி கோவிலுக்குள் வந்தது நல்லா ஞாபகத்தில் உள்ளது.
இன்று கூட்டமேயில்லை. நேரா போயி தரிசித்தோம். மனதார வேண்டிக் கொண்டோம். என் மூத்த மகள் பிறக்கு முன், பிள்ளை வரம் இங்கு தான் கேட்டேன். மகள் பிறந்த பிறகு மொட்டையும் அவளுக்கு இங்கேயே. விபூதியை நல்லா பூசிக் கொண்டு வெளியே வந்து செருப்பைக் கழற்றிப் போட்ட கடையைத் தேடினோம். எல்லாக் கடைகளும் எங்க கண்களுக்கு ஒரே மாதிரி தோன்றின. எங்கள் நிலையைப் பார்த்துக் கடைக்காரரே கூப்பிடும் நிலை. நன்றி கூறினேன் சிறிது கூச்சத்துடன். என்ன படிச்சு என்ன பயன்? சில நேரம் ‘ஹே’ன்னு முழிப்பது சகஜமாகி விட்டது.
“போற பாதையிலே நம்ம கூட பியூஸி படிச்ச சுந்தரம் வெத்தல பாக்குக் கடை இருக்குடா; பார்த்துப்பேசிட்டுப் போவோம்; நான் பார்த்தே நாலு வருஷமிருக்கும்,” என சிரித்தான் கருண்.
“ஏன்டா, கோவிலுக்கு வர்றதில்லையா; நான் தான் வந்து நாளாச்சேன்னு நினைச்சேன்; ம்ம்,” என கிண்டல் பண்ணினேன். நான் சுந்தரத்திடம் பேசி பத்து வருடங்களுக்கு மேலிருக்கும். அவங்கப்பா காலத்திய கடை இன்னமும் தொடருது. அர்ச்சனைச் சாமான்கள், எண்ணெய் மற்றும் கொஞ்சம் பலசரக்கு சாமான்கள் வச்சிருப்பான். அவசரத்துக்கு போதும். சின்ன கிராமமே. அடிக்கடி சாத்தூருக்குப் போய் மக்கள் எல்லாமே வாங்கிட்டு வந்திடுவர். மகளிர் இலவச பேருந்து இன்னுமே கிராமத்துப் பெண்களைச் சுலபமாக டவுண்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி பண்ணிடும்.
எங்களைப் பார்த்தவுடன் சுந்தரம் பக்கத்துக் கடையிலிருந்து மூன்று டீ ஆர்டர் பண்ணினான். “தமிழ் எப்படியிருக்கே? கருண் கூட அடிக்கடி வர்றதில்லை. ரெண்டு பேரும் ரிடையர் ஆயிட்டீங்கள்ல?” என விசாரிக்க ஆரம்பித்தான். சட்டை போடாமல் லுங்கி பனியனில் இருந்தான். வெள்ளந்தியா சிரித்தான். நாங்களும் புன்னகைத்தோம்.
” ரிடையராயிட்டோம் சுந்தரம்; இவன் சென்னையிலிருந்து சாத்தூர் வந்துட்டான்; நான் அங்கேயே ஸெட்டிலாயிட்டேன். பேரன், பேத்திகளைப் பார்க்கணுமே. மூத்த பொண்ணுக்குச் சென்னைல வேலைங்கிறதுனாலே நாங்களும் அங்கேயே ஃப்ளாட் வாங்கிட்டோம். இரண்டாவது பொண்ணு பெங்களூர்ல பெரிய அமெரிக்கன் கம்பெனில வேலை பார்க்குறா,” என கருணுக்கும் சேர்த்து நானே பதிலிறுத்தேன்.
“எம்பையனும் சென்னைல இன்ஃபோஸிஸ்ல; பொண்ணு வேல்ஸ் யூனிவெர்ஸிடி லெக்சரர். அவங்க லைஃபும் ஸெட்டிலாயிடுச்சு.” பெருமையாகப் புன்னகைத்தான் சுந்தரம்.
“இவரு பசங்க ரொம்ப நல்லா படிச்சாங்க. ஸ்கூல்ல முதல் ரேங்க். எங்க கிராமமே சந்தோஷப்பட்டது,” என தனது பிள்ளைகளே ரேங்க் வாங்குன மாதிரி சந்தோஷித்தார் டீக்கடைக்காரர். எனக்கும் கருணுக்கும் சிறிது ஆச்சரியம். இந்த குக்கிராமத்திலிருந்து பெட்டிக்கடை வச்சே பசங்களை நல்லா படிக்க வச்சு நல்ல வேலைகள்ல உட்கார வச்சுட்டானே; திறமைசாலி தான். நாம பெரிய ஊர்கள்ல இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என தவறாக நினைத்தோமே; போன்ற எண்ணங்கள் உள்ளுக்குள் வேகமா வந்தே பாரத் ரயில் போல ஓடின.
ஒரு நொடி நாங்கள் இருவரும் மௌனமாக இருந்தோம்.
நகரம் பெரியது என்பதால் தான் வளர்ச்சி கிடைக்கும் என்ற எனது நம்பிக்கை அங்கே உடைந்து விழுந்தது.
நான் பேசாமல் டீயை முடித்தேன்.
திரும்பி நடக்கும்போது மனதில் ஒரு சிரிப்பு, குறுகுறுப்பு. நாலு மெட்ரோ ஸிட்டி அனுபவங்கள், பொண்ணுங்களுக்கு நல்ல படிப்பு கொடுத்தோம், நல்ல வேலை என்ற கெத்து எப்பவுமே எனக்கு உள்ளுக்குள் மறைந்து வசிக்கும். அந்த ஈகோவை, அங்கேயே விட்டுவிட்டு, கருண் ஸ்கூட்டர் பின்னாடி உட்கார்ந்தேன். ஸ்கூட்டர் கூட உணர்ந்திருக்கும் என் எடையும் குறைந்திருப்பதை. கடவுள் சில நேரங்களில் பெரிய சம்பவங்களால் அல்ல; ஒரு சாதாரண மனிதனின் செயல்களின் மூலம் கூட நம்ம ஈகோவைச் சம்ஹாரம் செய்கிறார்.

**
தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்
திரு தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன் ஒரு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. சென்னையில் வசித்து வரும் இவர், குமுதம் பத்திரிகையில் நான்கு ஒரு பக்க கதைகளை எழுதியுள்ளார். கல்கி நினைவு சிறுகதைப் போட்டியிலும், அன்னை ஸ்வர்ணம்பாள் நினைவுப் பரிசுப்போட்டியிலும், நாமக்கல் மாவட்ட புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் போட்டியிலும் பங்கு பெற்று பரிசுகள் பெற்றுள்ளார்.
சமீபத்தில் தன் பெற்றோர் நினைவாக கனி ரத்ன பாண்டியன் நினைவுச் சிறுகதைப் போட்டியை வெற்றிகரமாக நடத்தினார். இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் 1141 சிறுகதைகள், ஒரு சரித்திர நாவல், மற்றும் ஒரு குறும்புதினம் எழுதியுள்ளார். 36 புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். அவற்றில் சிறுகதைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் அடங்கும். செஸ் கோச், ஸ்க்ரைப், ஏழை மாணவர் கல்வி என வேறு தளங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
