சு.வெங்கட்டராமன்/ பாட்டி சொல்லைத் தட்டாதே

ராமனின் அம்மா அவனுக்கு 12 வயதாக இருந்தபோது திடீரென்று இறந்துவிட்டாள். தாங்க முடியாத துக்கம், அதிர்ச்சி! ராமன் அப்போது எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். பள்ளிக்கூடம் செல்லவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்த வருடம் தேர்வில் தோல்வியடைவது நிச்சயம் என்று நினைத்தான்.
அவனது பாட்டிதான் அவர்களை வளர்த்து ஆளாக்கினாள். பாட்டி மட்டும் இல்லையென்றால் ராமனின் வாழ்க்கையே முடிந்திருக்கும் என்று அவன் நினைத்தான். அவன் சரியாகப் பள்ளிக்கூடம் செல்லவில்லை. அவனுடைய ஆசிரியர், அவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்தபோது அவனை அடித்துவிட்டார். அவனுடைய நண்பன்தான் அவனது அம்மா இறந்ததைப் பற்றி ஆசிரியரிடம் சொன்னான். அதைக் கேட்டவுடன் ராமனை அடித்ததற்காக ஆசிரியர் மிகவும் வருத்தப்பட்டார்.
“தந்தையோடு கல்விபோம், தாயோடு அறுசுவை உண்டிபோம்” என்று சொன்னார். அந்த வார்த்தைகள் ராமனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.
அவன் அந்த வருடம் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவான் என்று நினைக்கவில்லை. பாதி நாட்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. ஆனால் அவனுடைய பாட்டியும் தந்தையும் அவனை ஊக்கப்படுத்தி, “நீ தேர்ச்சி பெற்றுவிடுவாய். நீ கெட்டிக்காரன்” என்றெல்லாம் சொன்னார்கள்.
ஒருவழியாக எட்டாம் வகுப்பின் இறுதித் தேர்வையும் எழுதிவிட்டான். என்ன ஆச்சரியம்! அவனுடைய ஆசிரியர் திருத்திய விடைத்தாள்களைக் கொடுக்கும்போது, அவன் எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். அவனுடைய ஆசிரியருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவன் தேர்ச்சி பெறவே மாட்டான் என்று நினைத்திருந்தார். அவன் முதுகைத் தட்டிக்கொடுத்து, “நீ தேர்ச்சி பெற்றுவிட்டாய்” என்றார்.
அவனுடைய பாட்டி, “நாம் இங்கு இருக்க வேண்டாம். மேற்கு மாம்பலத்தில் என் பையன் வீட்டுக்குப் பக்கத்தில் போய்விடலாம். இங்கு இருந்தால் உன் அம்மாவின் ஞாபகம் வந்துகொண்டே இருக்கும்” என்றாள். அவனுடைய மாமாவும், “அம்மா, நீ இங்கு வந்துவிடு. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.
ராமனுக்கு மேற்கு மாம்பலம், அவன் இருந்த வடசென்னைப் பகுதியைவிட மிகவும் அமைதியாகவும் பசுமை நிறைந்ததாகவும் தோன்றியது. அவனுடைய மாமாவும் அவனைத் தி.நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்.
அவனுடைய சிறுவயதில் திருச்சியில் ஆனந்தமாகக் கழித்த நாட்கள் ஞாபகத்திற்கு வரும். அவனுடைய அம்மா அவனுக்கும் அவனுடைய அண்ணனுக்கும் வாராவாரம் சினிமாவுக்குச் செல்லப் பணம் கொடுப்பாள். அப்போது பெஞ்ச் டிக்கெட் 29 பைசாதான். நிறைய படங்கள் பார்த்திருக்கிறான். அண்ணனுடன் கவலையே இல்லாமல் கழித்த அந்த நாட்களை அவனால் மறக்க முடியாது.
நான்காம் வகுப்பு வரை ராமனின் வாழ்க்கை திருச்சியில்தான் கழிந்தது. அவன் வாழ்ந்த தெருவில் எத்தனையோ சிறுவர்கள் இருப்பார்கள். எல்லோரும் ஒன்றாக விளையாடுவார்கள். கிரிக்கெட், ஹாக்கி, கபடி என்று பருவத்திற்கு ஏற்றாற்போல் விளையாடுவார்கள்.
ராமன் ஒன்பதாம் வகுப்பில் நன்றாகப் படித்தான். பள்ளிப் படிப்பை நல்லபடியாக முடித்துக்கொண்டு கல்லூரிக்குச் சென்றான். கல்லூரிப் படிப்பும் நல்லபடியாக முடிந்தது. அவன் வணிகவியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான்.
அவனுடைய பாட்டி மிகவும் உறுதுணையாக இருந்தாள். அவன் இரவில் கண்விழித்துப் படிக்கும்போது தேநீர் எல்லாம் போட்டுக் கொடுப்பாள். அம்மா இல்லாததால் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். ராமனின் பாட்டி யாரையும் திட்டியதோ குறை சொன்னதோ கிடையாது. தன் மருமகள்கள் தன்னை வந்து பார்ப்பதில்லை என்றெல்லாம்கூட ஒருபோதும் குறை சொல்லமாட்டாள்.
ராமன் பள்ளியில் படிக்கும்போது, மாலையில் பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் பாட்டி காபி கொடுப்பாள். ஒவ்வொருவருக்கும் பத்து பைசா கொடுப்பாள். அவர்கள் சென்று மிக்சர், பகோடா என்று வாங்கிச் சாப்பிடுவார்கள். அந்தக் காலத்தில் எவ்வளவு மலிவாக இருந்தது என்று ராமன் நினைத்துப் பார்ப்பான்.
பள்ளியில் படிக்கும்போது ராமனின் நண்பன் ரமேஷ் அவனைத் தன் வீட்டிற்கு உணவு சாப்பிட அழைப்பான். அவனுடைய அம்மா அடை, சேவை, உருளைக்கிழங்கு போண்டா என்று விதவிதமாகச் செய்வாள். ராமன் கிரிக்கெட் விளையாடுவதாகச் சொல்லிக்கொண்டு, பள்ளியிலிருந்து திரும்பியதும் ரமேஷின் வீட்டிற்குச் சென்று சாப்பிடுவான்.
ரமேஷின் கள்ளம் கபடமில்லாத அந்த உள்ளம் ராமனுக்கு எப்போதும் ஆச்சரியத்தைத் தரும். ரமேஷ் கணக்குப் பாடத்தில் புலி. பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை ராமனுக்கு இணையாக மதிப்பெண்கள் வாங்கித் தேர்ச்சி பெற்றான்.
ஆனால் கல்லூரிக்கு வந்ததும் அவனால் சரியாகப் படிக்கவோ, கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்லவோ முடியவில்லை. அதற்குக் காரணம், அவன் நிறைய கதைப் புத்தகங்களைப் படித்தான். நிறைய சினிமாப் படங்களைப் பார்த்துக் காலத்தை வீணடித்தான். கல்லூரிக்குச் செல்லாமல் மட்டம் போட்டுவிட்டுச் சினிமாவுக்குச் சென்றுவிடுவான்.
ராமன் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவன் கேட்கவில்லை. அவனால் பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை.
ராமனுக்குப் படிக்கும் பழக்கம் ரமேஷினால்தான் ஏற்பட்டது என்று அவன் நினைப்பான். ஆனால் எந்தப் பழக்கமும் அளவுக்கு மீறிப் போகும்போது வாழ்க்கையே பாழாகிவிடுகிறது. ரமேஷ் ஒரு சினிமாப் படத்தைப் பத்து முறை பார்ப்பான் வெறிகொண்டு. தெருவில் நடந்து போகும்போதெல்லாம் புத்தகத்தைப் படித்துக்கொண்டே செல்வான். அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று ராமன் நினைப்பான்.
ராமனின் பாட்டி அவனிடம், “ரமேஷைப் போலக் கதைப் புத்தகங்களையும் சினிமாவையும் அதிகமாகப் பார்க்காதே. படிப்பில் கவனத்தைச் செலுத்து” என்று எப்போதும் அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பாள். தன் பேரன்கள் எங்கே தவறான பாதையில் சென்றுவிடுவார்களோ என்று அவளுக்குப் பயம்.
பாட்டியின் அறிவுரையால்தான் தான் ரமேஷைப் போல் தடம் மாறவில்லை என்று ராமனுக்கு எப்போதும் தோன்றும். “பாட்டி சொல் கேள். பாட்டி சொல்லைத் தட்டாதே” என்று ராமனின் தந்தையும் எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பார்.
ராமன் பட்டப்படிப்பை முடிக்கும் தருவாயில், அவனுடைய தந்தையும் தன்னுடைய ஓய்வூதியப் பணத்தில் மேற்கு மாம்பலத்தில் வேறொரு இடத்தில் வீட்டை வாங்கிக்கொண்டு அந்த வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அந்த வீட்டை வாங்கியதற்கும் ராமனின் பாட்டிதான் தூண்டுகோலாக இருந்தாள்.
பாட்டி இரண்டாம் வகுப்புதான் படித்திருந்தாள். ஆனாலும் அவளுடைய ஞானமும் தொலைநோக்குப் பார்வையும் இப்போதுகூட நினைத்துப் பார்த்தால் ராமனுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவனுடைய தந்தை உட்பட அனைவரும் பாட்டியின் அறிவுரைப்படிதான் நடப்பார்கள்.
ராமனின் அண்ணன் வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்களானதும், பாட்டி அவனுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னாள். இனிமேல் தன்னால் சமைத்துப் போட்டுக்கொண்டிருக்க முடியாது என்றும் சொன்னாள்.
அவள் சொன்னபடியே ராமனின் அண்ணனுக்குத் திருமணம் நடந்தது. ராமனின் பாட்டி சமையலறையைத் தன் பேரனின் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு உடனே வெளியே வந்துவிட்டாள். அதற்குப் பிறகு அவள் கரண்டியைக்கூடப் பிடிக்கவில்லை. அறிவுரை கூடச் சொல்லமாட்டாள்.
ராமனுக்கு இது ஒரு பெரிய வாழ்க்கைத் தத்துவமாகத் தெரிந்தது. பெண்கள் எப்போதும் சமையலறையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். உடல்நலம் முடியாமல் போகும்போதுதான், வேறு வழியில்லாமல் சமையலறையை விட்டுக்கொடுப்பார்கள் என்று அவன் நினைத்தான்.
ராமனின் மாமா அவனுடைய பாட்டியிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். எல்லோரையும், அப்பா, மாமியார், மனைவி, பையன்கள் உட்பட, கேலியும் கிண்டலும் செய்துகொண்டிருப்பார். ஆனால், தன் அம்மாவை மட்டும் ஒரு வார்த்தைகூடச் சொல்லமாட்டார். அவ்வளவு அன்பும் பக்தியும் வைத்திருந்தார்.
மூப்பின் காரணமாக ராமனின் பாட்டி தனது எண்பதாவது வயதில் காலமானாள். ராமன் அப்போது அடையாறில் குடியிருந்தான். அவனுக்கு அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மிகுந்த வருத்தமடைந்தான்.
பாட்டியின் மறைவை ராமனால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை. அவனுடைய மனைவி அவனுக்கு ஆறுதல் சொன்னாள். அவளுக்குமே பாட்டியின் மறைவில் பெரிய வருத்தம் இருந்தது.
ராமனிடம் அவனுடைய மனைவியைப் பெண் பார்த்துவந்தவுடன், “எனக்கு இந்தப் பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது. உனக்கும் பிடித்திருந்தால் கல்யாணம் செய்துகொள். வேறு எந்தப் பெண்ணையும் பார்க்க வேண்டாம்” என்று சொன்னவள் பாட்டிதான்.
வாழ்க்கையில் நல்லது, கெட்டது எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது என்று ராமன் நினைத்தான்.
அவர்கள் இருந்த பழைய வீட்டை இடித்துவிட்டுப் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளாகக் கட்டும்படி ராமனின் தந்தை அவனிடம் சொல்லிவிட்டார். ராமனின் அண்ணன் அப்போது வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். ராமன்தான் அந்த வீட்டை அடுக்குமாடிக் குடியிருப்பாக மாற்றுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தான்.
ஒரு நல்ல கட்டுமான நிறுவனத்தை ஏற்பாடு செய்து, அந்த வீட்டில் தலா 800 சதுர அடி கொண்ட ஆறு குடியிருப்புகளை அழகாக வடிவமைத்துக் கட்டினான்.
இரண்டு தளங்களில் மூன்று மூன்று குடியிருப்புகளாகக் கட்டினான். எல்லோருக்கும் முதல் தளத்தில் ஒரு குடியிருப்பும், இரண்டாம் தளத்தில் ஒரு குடியிருப்பும் என்று முடிவு செய்திருந்தார்கள்.
ராமன் தனது அண்ணனுக்குப் பெரிய மனதுடன் இரண்டு குடியிருப்புகளையும் ஒன்றாக முதல் தளத்திலேயே கொடுத்துவிட்டான். அவனுடைய அண்ணனுக்கு 1,600 சதுர அடியில் ஒரு பெரிய குடியிருப்பு முதல் தளத்தில் கிடைத்தது. மின்தூக்கி இல்லாததால் அது அவனுடைய அண்ணனுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
ராமன் அந்த அடுக்ககத்தைக் கட்டி முடித்தவுடன், அவனுடைய தந்தையிடம், அதற்கு ‘சீதாலட்சுமி அடுக்ககம்’ என்று பெயரிட வேண்டும் என்றான். சீதாலட்சுமி என்பது அவனுடைய பாட்டியின் பெயர். அவனுடைய தந்தையும் அண்ணனும் அதுதான் நல்ல முடிவு என்று சொன்னார்கள்.
முழுக்க முழுக்க அந்த வீட்டைத் தன்னுடைய சேமிப்பின் மூலம் வாங்கியிருந்தாலும், அதற்குச் சீதாலட்சுமி என்று பெயர் வைப்பதில் ராமனின் தந்தைக்கு மிகுந்த சந்தோஷம்.
ராமன் அன்றுதான் வாழ்க்கையில் ஒரு நிறைவான செயலைச் செய்ததாக நினைத்தான். அவனுடைய பாட்டியின் அன்பு, உழைப்பு, தியாகம் ஆகியவற்றால்தான் ராமனின் குடும்பமே முன்னுக்கு வர முடிந்தது.
அவனுடைய பாட்டி தன்னுடைய மற்ற பிள்ளைகள், பெண்கள், பேரன், பேத்திகளை விட்டுவிட்டு, தன் மகளின் மறைவுக்குப் பிறகு ராமனின் குடும்பத்துடன் ஐக்கியமாகிவிட்டாள். அது ராமனுக்குப் பெரிய தியாகமாகத் தெரிந்தது.
தன்னுடைய பாட்டி சீதாலட்சுமி அடுக்ககத்தைப் பார்க்காமலேயே போய்விட்டாளே என்று ராமன் மிகவும் வருத்தப்பட்டான்.
அவன் அந்தச் சீதாலட்சுமி அடுக்ககத்திற்கு அடையாறிலிருந்து தன் தந்தையைப் பார்க்க வரும்போதெல்லாம், அவனுக்குப் பாட்டியின் நினைவு வந்துகொண்டே இருக்கும். அந்த நினைவு வரவேண்டும் என்றுதானே அந்த அடுக்ககத்திற்குச் சீதாலட்சுமி அடுக்ககம் என்று பெயர் வைத்தான் ராமன்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன