பெ. ஜெகந்நாதன்/பயணங்களில் உறவுகள்

கோயம்புத்தூரிலிருந்து சென்னை செல்ல வேண்டும் என்று ஒரு மாத காலமாகத் திட்டமிட்டு வைத்திருந்தோம். அதற்கான வாய்ப்பும் வசதியும் அமையவில்லை. சென்னையில் உறவினர் ஒருவருக்குப் பேத்தி பிறந்திருக்கிறாள். அவளைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். இருவருமே வேலைக்குச் செல்வதால் நாட்கள் தள்ளிக்கொண்டே போயின.
இந்தச் சூழ்நிலையில், எனக்கு அலுவலக விஷயமாகச் சென்னையில் ஒரு வேலை இருந்தது. எனவே, நான் மட்டும் போகலாமா என்று தீர்மானித்தேன்.
விஷயத்தைச் சொன்னபோது ஒரே கூச்சல்!
“என்னைத் தனியாக விட்டுவிட்டு நீங்கள் மட்டும் போக வேண்டும் என்று எப்படி முடிவெடுக்கலாம்?”
“இப்படித்தான் ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. இப்போது நான் மட்டும் போனால் என்ன?” என்றேன்.
“எப்படியும் போங்கள்! உங்கள் விருப்பம்! என்னைக் கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்பதுதான் உங்கள் திட்டம்! எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது! இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை!” என்றாள்.
ரயில் நிலையத்திற்கு வந்ததிலிருந்து ஒரே யோசனை! மீண்டும் வீட்டுக்குப் போய் அவளை அழைத்து வரலாமா? அதற்கும் நேரமில்லை!
அது உட்கார்ந்து செல்லும் ரயில். ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று மூன்று இருக்கைகள் இருக்கும். நல்ல வேளையாக, எனக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது.
எனக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிக்குச் சென்று, எனது இருக்கையில் அமர்ந்துகொண்டேன்!
எனக்குப் பக்கத்தில் இருந்த இரண்டு இருக்கைகளும் காலியாகவே இருந்தன. அப்போதும் ஒரு யோசனை: அவளை அழைத்து வந்திருக்கலாமோ?
சே! சே! இது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி. நம் இஷ்டத்துக்கு எப்படி அழைத்து வர முடியும்? என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
திருப்பூர் வரை யாருமே ஏறவில்லை! அவளை அழைத்து வந்திருக்கலாமோ? தப்பு செய்துவிட்டேனே என்று சிந்தித்துக்கொண்டே வந்ததில் தூங்கிவிட்டேன்!
விழித்துப் பார்த்தபோது, வேலைக்குச் செல்லும் ஒரு பெண், ஜீன்ஸ் பேன்ட், டி-ஷர்ட் அணிந்து எனக்கு அருகில் உட்கார்ந்திருந்தாள்.
எனது மகள் வயது இருக்கும் அவளுக்கு! இருப்பினும், அவள் அருகில் அமர்ந்திருந்தது எனக்கு அசௌகரியமாக இருந்தது. தள்ளி உட்காரவும் முடியவில்லை!
ஒருவாறு ஜன்னலோரமாக ஒதுங்கி அமர்ந்து சமாளித்தேன். பிறகு, எனது பையில் இருந்த ஸ்டெல்லா புரூஸ் எழுதிய 25 வருடக் கதை என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன்.
இடையில், அவள் பக்கம் என் கண்கள் சென்றபோது, அவள் காதில் ஒலிப்பான்களைப் பொருத்திக்கொண்டு செல்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் பார்த்ததைப் பார்த்து என்னைக் கொஞ்சம் முறைத்தாள்!
எனது அசௌகரியத்தைப் பற்றி அவள் சிறிதும் கவலைப்படவில்லை. சகஜமாகக் கை உரசுவதும், கால் படுவதும் எனக்குக் கூச்சத்தை ஏற்படுத்தின.
ஜோலார்பேட்டையைத் தாண்டிய பிறகு எனக்கும் கண்கள் மெல்லச் சுழன்றன. இடது பக்கமாக ஜன்னலில் தலை சாய்த்து ஒரு குட்டித் தூக்கம் போட்டுக்கொண்டிருந்தேன்.
கைதட்டும் ஓசை கேட்டது. படாரென்று விழித்துக்கொண்டேன்!
இரண்டு வரிசை இருக்கைகளுக்கு முன்னால் இருந்த ஒரு திருநங்கை கைதட்டிக்கொண்டிருந்தார்.
அடுத்து எனது இருக்கைக்குத்தான் வருவார் என்று தெரிந்ததும், பையில் இருந்த பத்து ரூபாய் நோட்டை வெளியே எடுத்தேன். அந்நேரம், எனக்குப் பக்கத்தில் இருந்த பெண் என் தோளில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.
திருநங்கையிடம் பத்து ரூபாய் கொடுத்தேன். அவர் என் தலையிலும் அந்தப் பெண்ணின் தலையிலும் ஆசீர்வாதம் செய்தார்.
“எனது மகளம்மா இவள்! அசந்து என் தோளில் தூங்குகிறாள்!” என்றேன்.
“தெரியும் அப்பா!” என்றார் திருநங்கை.
அந்நேரம் அந்தப் பெண்ணுக்குப் போன் வந்தது. அவள் பேசினாள். “நான்தான் வர முடியாமல் போய்விட்டது” என்றாள்.
“நீதான் வரவில்லை. உனது மகள் வந்திருக்கிறாள்!” என்றேன் நான்.
ஒன்றைத் தெரிந்துகொண்டேன். நான் மட்டுமல்ல, யாரும் தனியாகப் பயணிப்பதில்லை!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன