இதோ ஒரு கவிதை –
வ.வே.சு
எனும் தலைப்பில் நான் இரசித்த கவிதைகளைப் பற்றி எழுத உள்ளேன். சமகாலக் கவிஞர்களின் கவிதைகளைப் பற்றியனவாக அவை அமையும்.
இதோ ஒரு கவிதை-1
“நாற்காலி” – அழகியசிங்கர்
அழகியசிங்கரின் “நாற்காலி” கவிதை மிக எளிய கவிதையாக முதல் வாசிப்பில் தோற்றமளிக்கிறது. சிறிய சொற்களில், ஒரு வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ. யாருக்கும் நிகழ்ந்திருக்கக் கூடிய ஓர் இயல்பான அன்றாட நிகழ்ச்சியை அவர் சொற்களில் வரைந்திருக்கிறார்.
நாற்காலியில் அமர்ந்திருக்கும் கவிஞன் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டுப் பிறகு எழுந்து நிற்கிறான். இந்த ஒற்றைச் செயலைத்தான் கவிதை காட்சிப்படுத்தியுள்ளது. வேறு அலங்காரச் சொற்களோ அல்லது உவமை உருவகம் போன்ற அணிமணிகளோ கிடையாது. இக் கவிதையின் எளிய சொற்களே அப்பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன.
தூங்கி எழுந்து ஓடி வரும் அழகிய குழந்தைக்கு அணிகலன் தேவையில்லையே ! அப்படியே அதை அணைத்துக் கொள்ளத் துள்ளுகின்ற மனம் போல இக்கவிதையை வாரி எடுத்தணைக்க மனம் ஓடுகிறது.
நான்கு வரிகள் கொண்ட கவிதை. மடித்து ஒன்பது அடிகளாக எழுதியுள்ளார்.
முதல்வரி “ நாற்காலியில் அமர்ந்திருந்தேன்” . இது சொல்லும் செய்தியில் காலம் சுட்டப்பட்டாலும் எவ்வளவு நேரமாக அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான் என்பதை அது குறிப்பிடவில்லை. அதை வாசகனின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறார் கவிஞர்..அது கவிதையின் முதல் வெற்றி. ஆம் ! சொல்லாமல் சொல்வதிலேயே வாசகனின் பங்களிப்புக்கு அதிக இடம் கிடைக்கின்றது
இரண்டாவது வரி, நாற்காலியில் அமர்ந்திருந்த அனுபவம் பற்றிய ஒரு குறிப்பை உரைக்கின்றது. “ நாற்காலியுடன் நானும் நிறைந்திருந்தேன்”. மிக அற்புதமான வரி. நாற்காலியில் இவன் நிறைந்திருந்தான் என்ற சொற்றொடர், இவன் எவ்வளவு வசதியாக நாற்காலியில் அங்கம் பரப்பி அமர்ந்திருந்தான் என்பதைச் சொல்கின்றது. நாற்காலியில் ஓர் ஓரமாகவோ, அல்லது நாற்காலி நுனியில் சங்கடப்பட்டுக் கொண்டோ அமரவில்லை; மிக சுவாதீனமாக, சுகமாக அமர்ந்திருந்தான் எனக் குறிக்கின்றது.
“நிறைந்திருந்தேன்” என்ற சொல்லின் நீட்சியாக மனத்தளவிலும் இந்த “அமர்ந்திருத்தல்’ அவனுக்கு நிறைவைத் தந்துள்ளது என்பதை எவ்விதச் சொல் விரயமும் இன்றி சுருங்கச் சொல்லி விளங்கவைக்கிறார்.
ஒருவேளை இந்த நாற்காலியும் ,அதில் இவன் இப்படி அமர்ந்தெழுவதும் பல காலமாக நிகழும் ஒரு நிகழ்ச்சியாகக் கூட இருக்கலாம். இன்னும் ஆழ்ந்து கவனித்தால் இன்னொரு பொருள் விளங்குகின்றது.
“நாற்காலியுடன் நானும்” என்ற சொல் விவரிப்பில் நாற்காலியும் இவனது “நிறைந்திருந்தேன்” அனுபவத்தில் ஒரு நண்பனைப் போல் பங்குகொண்டுள்ளது என்று , கருத்தூன்றிப் படிக்கும் வாசகன் புரிந்து கொள்கிறான். ஆம் அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
இவன் பெற்ற அனுபவத்தை நாற்காலியும் பெற்றுள்ளது என்பதைக் குறிக்கவே கவிஞன் “ நாற்காலியுடன்” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றான்.
மூன்றாவது வரி நாற்காலியை விட்டு கவிஞன் எழுந்து நிற்பதைக் குறிக்கின்றது. ஏன் எழுந்திருக்கிறான் ? யாராவது கூப்பிட்டார்களா? அல்லது வேறு வேலை எதற்காகவேனும் எழுந்தானா? இல்லை சும்மாவா? எதுவும் குறிப்பிடாமல் மேலே நகரும் கவிதை இங்கும் வாசகன் அவன் போக்கில் செல்ல இடம் தருகின்றது.
நான்காவது வரியாக “இப்போது நாற்காலி மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறது” என்று சொல்லி கவிதை நிறைவு பெறுகிறது. மொத்த கவிதைச் சுமையும் சுவையும் சுகமும் இவ்வரியில் அமர்ந்துள்ளது.
நாற்காலி கிடக்கிறது என எழுதாமல் “அமர்ந்திருக்கிறது” என எழுதும் கவிஞன் நாற்காலியை சடப் பொருளிலிருந்து உயிருள்ள ஒன்றாக மாற்றிவிடுகிறான்..
இந்தத் திணைமாற்றம், மூன்றாம் வரியில் “நாற்காலியுடன்” என எழுதும் போதே நிகழ்ந்துவிடுகின்றது. மேலும் ”தனியாக ” எனும் சொல் தேர்வு இந்த மாற்றத்தை உறுதி செய்கின்றது. தனிமை எனும் பண்பைச் சடப் பொருளில் ஏற்ற இயலுமா? ஏன் இயலாது ? சங்ககாலத் தலைவி தன் தலைவனிடம் அருகுள்ள மரத்தைக் காட்டி “இது எனக்கு முன்னர் என் தாயால் வளர்க்கப்பட்ட்து; எனக்கு தமக்கை முறை என உறவு பாராட்டி நாணியது” நினைவுகூரத்தக்கது.
இறுதி வரியில் கவிஞன் கையாளும் ஒரு “டெக்னிக்” இரசனையைக் கூட்டுகின்றது. கவிதைக்குக் கனம் ஏற்றுகின்றது. நாற்காலியைத் தன்னைப் போல் உயர்திணைக்கு மாற்றி அது தனியாக அமர்ந்திருக்கின்றது எனச் சொல்வதன் மூலம் , கவிஞனின் தனிமையைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது கவிதை.
இந்தப் புரிதலுக்குப் பின் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு , மீண்டும் ஒருமுறை கவிதை வரிகளில் மேய்ந்தால், அட ! இன்னொரு விஷயம் தென்படுகிறதே !
ஒரு நாற்காலியின் தோழமையைத் தேடும் கவிஞன், அதையே திணைமாற்றம் செய்து பார்க்கும் நிலையில், அவன் எந்தச் சூழலில் சிக்கியிருக்கிறான் என நம்மைச் சிந்திக்க வைக்கிறது கவிதை வரிகள்.
அவன் தனிமைக்குக் காரணம் என்னவாக இருக்கும் ? இப்படி நாற்காலியில் அமர்ந்தே அவன் தன் தனிமையைப் போக்கிக் கொள்கிறான் என்றால், அவன் வாழ்வின் வெறுமைக்குக் காரணம் என்னவாக இருக்கும்? என்ற எண்ணங்கள் ஓடும் போது, இக் கவிதை வரிகள் ஒரு சிறுகதையின் மந்திரச் சாவியாக மாறிவிடும் அற்புதத்தைக் காண்கிறோம்.
அழகியசிங்கரின் ”நாற்காலி”, கவிதையை ஒரு சிம்மாசனத்தில் அமர்த்தியுள்ளது.
முழுக் கவிதையும் இதோ:-
நாற்காலி
நாற்காலியில்
அமர்ந்திருந்தேன்
நாற்காலியுடன்
நானும் நிறைந்திருந்தேன்
நாற்காலியை விட்டு
எழுந்து நின்றேன்
இப்போது
நாற்காலி மட்டும்
தனியாக அமர்ந்திருக்கிறது – அழகியசிங்கர்
வவேசு
03/10/2021

சிறப்பான பார்வையை பகிர்ந்திருக்கறீர்கள். கவிதை இங்கு தனியாக. உங்கள் விமர்சனத்திற்கு பின் நிறைந்து ஏகப்பட்ட சிந்தனைகளை தூண்டுகிறது. பாரதியின் காக்கை குருவியும் கடலும் மலையும் நிழலாடுகின்றன வேறு கோணத்தில்.