
இவர நீங்க எப்போதாவது சந்தித்திருக்கலாம். ‘என்னோட இருபது வருட அனுபவத்தை வச்சு சொல்றேன்’ என்று தான் ஆரம்பிப்பார்.’ காபி எப்படி இருக்கு’ என்று கேட்டாலும் சரி, ‘இந்தக் கணக்கு உதைக்குதே’ என்று அலுவலகத்தில் கேட்டாலும் சரி, எல்லாவற்றுக்கும் இதே மாதிரி தான் ஆரம்பிப்பார் .
உதாரணத்துக்கு நேற்று அலுவலக மீட்டிங்கில் மேனேஜர் தெரியாத்தனமாக கேட்டுவிட்டார். ‘நான் நம்ம கம்பெனி வரவு செலவு விவரங்களை எல்லாம் சொல்லி, எடுக்க வேண்டிய தீவிர நடவடிக்கைகள் அனைத்தையும் சொல்லிட்டேன் . இதைப்பற்றி உங்க ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்’ என்று சொன்னதுதான் தாமதம், இவர் எழுந்துவிட்டார் .
‘என்னோட இருபது வருட அனுபவத்தை வச்சு இதை எடை போட்டுப் பார்த்ததிலே நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாம் ரொம்ப குழந்தைத்தனமாக இருக்கிறதா தோணுது. அனுபவ முத்திரையே இல்லை. இந்த பிரசன்டேஷன்களை எனக்கு மெயிலில் அனுப்பி வையுங்கள். நான் எல்லாத்தையும் மாத்தி நாளைக்கு அனுப்பி வைக்கிறேன்.’ என்றார்.
‘ ஏன் இப்பவே சொல்லுங்களேன்’ என்றதற்கு
‘ இதுதான் தப்புங்கிறது. எதையும் ஆற அமர யோசித்து நல்லா முழுமையா அலசிப் பார்த்துத் தான் சொல்ல முடியும். என்னோட இருபது வருஷ அனுபவத்தை வச்சு சொல்றேன்.’
‘ அப்ப நீங்க வெளிய போகலாம் நாங்க இப்ப பேசி முடிச்சு, போர்டு மீட்டிங் இருக்கு, அனுப்பப் போகிறோம்’ என்றவுடன் கோபமாக வெளியே வந்துவிட்டார்.
இது போல் எத்தனை முறை அவமானப்பட்டாலும் அவர் திருந்தவே இல்லை. அன்றைக்கு ரோட்டோரக் கடையில் காபி ஆர்டர் செய்து விட்டு இவர் தனது இருபது வருட காபி அனுபவத்தை சொல்லப் போய் ‘இவருக்கு காபி கிடையாது’ என்று காபிக் கடைக்காரர் சொல்லி விட்டு மேலும் சொன்னார்.
‘ உங்க இருபது வருஷ காபியை குடிக்கணும்னா அந்த முக்கில ரைட்டிலே திரும்பி போனீங்கன்னா அங்க இருக்கிற இடத்தில் கிடைக்கும்’ என்று சொல்லி அனுப்ப , இவரும் கர்ம சிரத்தையாக அங்கே போய்ப் பார்த்தால் ஒரு குட்டி சுவரும் அதற்கு பக்கத்தில் ஒரு கழுதையும் நின்று கொண்டிருந்தது. கீழே ‘காப்பி கிளப்’ என்ற போர்டும் மங்கிப் போய்க் கிடந்தது.
அலுவலகத்தில் மற்றவர் உடுத்தும் ஆடை விஷயங்களிலும் இவராகவே போய் இவரது இருபது வருட அனுபவ அபிப்பிராயங்களை சொல்வார். ‘இந்த பேண்ட்டை கீழ்ப் பக்கம் கொஞ்சம் பெருசாக்கி ‘பெல் ‘ மாதிரி ஆக்கிப் போட்டீங்கன்னா பிரமாதமா இருக்கும். என்னோட இருபது வருஷ அனுபவத்தை வச்சுச் சொல்றேன். ‘ ‘அய்யா, அதெல்லாம் பழைய கால பேஷன் ‘ என்றாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்.
இவரது தொந்தரவு பொறுக்க முடியாமல் இவரது மனைவியும் அவ்வப்பொழுது இவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று வருவதாக தகவல். ஒருமுறை இவர் தனது மனைவியிடம் சொன்னார்.’ எனது 20 வருட அனுபவத்தை பற்றி உனக்குப் பிடிக்காவிட்டால் 10 வருட அனுபவத்தை பற்றி மட்டுமாவது சொல்கிறேன் , கேளேன் ‘ என்று சொல்ல ஆரம்பித்ததும் அவர் மனைவி ‘சரி’ என்று கேட்க அவர் இப்படி ஆரம்பித்தார். ‘ எனது இரண்டு பத்து வருட அனுபவத்திலிருந்து சொல்கிறேன். ‘ இப்படி அவரால் அவரது இருபது வருட அனுபவத்தில் இருந்து விலகி வரவே முடியவில்லை.
இப்படியாக இருந்த இவர் ஒரு நாள் அலுவலகத்தில் இருபது வருடம் பற்றி எதுவுமே சொல்லாமல் இருந்தது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அன்று மாலை அவரோடு சேர்ந்து அவர் வீட்டுக்குச் சென்றபோது தான் விபரம் தெரியவந்தது. பக்கத்து வீட்டில் புதிதாக வந்துள்ள வயதானவர் ஒருவர் இவர் காம்பவுண்டுக்குள் நுழையும் போதே இப்படி வரவேற்றார்.’ என்னோட அம்பது வருஷ அனுபவத்துல ஆபீஸ் விட்டு கரெக்டா ஆறு மணிக்கே வீட்டுக்குள் நுழைகிற ஆளை இப்பத்தான் பார்க்கிறேன். உம்மைத் தான் சொல்றேன் ஓய்’ . இந்த வரவேற்பு நம் பக்கம் திரும்புவதற்குள் நாங்கள் இடத்தைக் காலி செய்துவிட்டு வந்து விட்டோம்.


ஓ! வல்லவனுக்கு வல்லவன்?
Thank you Ji
இந்தக் கதையில் கொஞ்சம் ஒற்றுப் பிழைகள் உள்ளன . இப்போதுதான் பார்த்தேன் . படிப்பவர்கள் மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன் .