உதயசங்கர்
எப்படியும் இன்று அந்த எலியைப் பிடித்து விடவேண்டும். அயத்து மறந்து எந்தப் பொருளையும் வைப்பதற்கு நீதமில்லை என்று நினைத்தாள் கோமு. இதுவரை அவள் எலியைப் பார்க்கவில்லை. ஆனால் எலி இருக்கிறதென்று நம்பினாள் கோமு. நேற்று இரவில் அவளுடைய பித்தவெடிப்பு விழுந்த பாதத்தைச் சுரண்டியது. அவள் திடுக்கிட்டு எழுந்தாள். காசுக்குக்கூட காற்று வராத ஆறுக்கு நாலு குச்சு வீட்டில் கதவைத் திறந்து போட்டு விட்டுத் தூங்குகிறவளிடம் அது பண்ணுகிற சேட்டையை இனியும் பொறுக்கமுடியாது என்று முடிவு செய்தாள். உடனே எலி மருந்தை வாங்கி வந்து சோற்றில் பிசைந்து வைத்தாள்.
எறும்புகளும் மிளகாவத்தல் பாச்சாக்களும் செத்துக் கிடந்தன. இரண்டு நாட்களுக்கு எந்த அரவமுமில்லை. பின்னொரு நாள் அவளுடைய சேலைக்குள் புகுந்து அடித்தொடை வரை ஏறி விட்டது. ஓவென அலறிக்கூப்பாடு போட்டு எழுந்து விளக்கைப் போட்டாள். எலியைக் காணவில்லை. மறுநாள் அவளுடன் சேர்ந்து ஹோட்டலில் பத்து பாத்திரம் தேய்த்துக்கழுவும் தோழியிடம் எலிப்பொறியை வாங்கிக் கொண்டு வந்து தேங்காய்ச்சில்லை அடுப்பில் சுட்டு கம்பியில் மாட்டி வைத்தாள். மறுநாள் காலையில் அந்தத் தேங்காய்த்துண்டை மட்டும் காணவில்லை.
எலிக்காக மாத்திரை வாங்கி வைத்தாள். மாத்திரையைத் தின்று செரித்து விட்டது. ஒட்டிக்கொள்ளும் பசை அட்டையை வாங்கி வைத்தாள். அந்தப் பசையிலேயே நடை பழகியது. எலி மாட்டிக்கொள்ளவில்லை. ஆனால் எலியைப் பார்க்கவுமில்லை. எலி ஒரு நாள் அவளுடைய உதட்டை நக்கியது. வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டியது. எலி அவள் கண்களுக்குத் தெரியவில்லை.
அவளால் பார்க்கவே முடியாத அந்த எலியோடு சேர்ந்து வாழ்வது என்று கடைசியில் முடிவு செய்தாள். அன்றிரவு அவளுடைய மார்பை எலி கரம்பியது.
அவள் இன்பமாய் முனகிக் கொண்டிருந்தாள்.
