
ஞானம் என்பது தெளிந்து அமைவது. தில்லை அம்பல வாணன் ஞானத்தில் கூத்தாடுபவன்; அவன் அதே சமயம் கல்லால மரத்தின் கீழே மௌனமாக அமர்ந்து சின்முத்திரையில் ஞானத்தைக் கடத்துபவனும் கூட. ஞானக்கூத்தன் என்ற கவிஞரை அணுஅணுவாகப் புரிந்து கொண்டு அதைப் பகிர்ந்து கொள்வதில் இந்த நூலின் ஆசிரியர் திரு.அழகிய சிங்கர் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.
சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள இந்த நூல் கவிஞரை, அவர் காலத்தை, அவரைப் பாதித்த செய்திகளை, கவிதைகளைப் பற்றி அவர் கொண்டிருந்த எண்ணத்தை அருமையாகப் பிரதிபலிக்கிறது.
பாரதி, ந. பிச்சமூர்த்தி, க.நா. சுப்ரமண்யம், கு.ப ராஜகோபாலன், புதுமைப்பித்தன் போன்ற புதுக்கவிதை ஆசான்களின் நிறையில் வைக்கத்தகுந்த ஒரு கவிஞர் ஞானக்கூத்தன். அவரது ஒரு கவிதையில் அவரை நோக்கி வந்த ஒருவர் எதைப்பற்றியோ கேட்கப் போகிறார் என்ற சிந்தனை இழையை இவர் பின்னிக்கொண்டிருக்க அவரோ வாயைத் திறந்துவிட்டு ஒன்றுமே கேட்காமல் போய்விடுகிறார். எட்டு வரியில் ஒரு தோற்றக் காட்சியையும், தோற்ற மயக்கத்தையும் காட்டிய கவிஞர், தன்னைப் பொருட்படுத்தாமல் சென்றவரைப் பற்றிச் சொல்லும் அங்கதமான கடைசி வரி ‘என்ன மாதிரி உலகம் பார் இது’ கவிதையின் சிறப்புத்தளம். ‘நமக்குத் தொழில் கவிதை’ என்று கம்பீரமாகச் சொன்ன பாரதி வழி வந்த கவிஞர் தன் வாழ் நாள் முழுதும், 700 கவிதைகள், கவிதைகளைப் பற்றிய விமர்சனங்கள், கவிதையியல் என்பதைக்கூறும் ஆக்கங்கள், ஒரே ஒரு சிறுகதை, (இரண்டு என்றும் சொல்கிறார்கள்) இதழ்களில் தலையங்கம் எழுதுவது, மொழி பெயர்ப்பு செய்வது போன்ற எண்ணற்ற செயல்களைச் செய்திருக்கிறார்.
அதை எளிய நடையில், அலங்காரச் சொற்கள் இல்லாமல், அடுக்கு மொழியில் புனையாமல், கூர்மை குறையாமல் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் நூல் ஆசிரியர் அழகிய சிங்கர். ‘அவருடைய எந்தக் கவிதையை எடுத்துப் படித்தாலும், படிப்பவரை நோக்கி அந்தக் கவிதை நகர ஆரம்பிக்கும். சிந்திக்க வைக்கும்.’ தன் மன ஆழத்தில் இருந்து இதைச் சொல்லியிருக்கிறார் அழகிய சிங்கர்.
07-10-1938-ல் திருஇந்தளூரென்ற கிராமத்தில் பிறந்த கவிஞருக்கு, தன் அப்பாவின் எதிர்பார்ப்புகளையும் மீறி தமிழின் பால் மாளாக் காதல் இருந்திருக்கிறது. வாழ்க்கைச் சக்கரம் வேறு பாதையில் பயணித்தாலும் தன் அக நேசத்தை அவர் விட்டுவிடவில்லை. அதனால்தான் அவருக்கு இருள் கவியும் அந்திப் பொழுதில் காவிரி ஆற்றில் ஊர்வலம் வரும் தொன்னைத் தீபங்கள் ‘கம்பரின் மாளிகை’ எனத் தோன்றுகிறது. மகிழ்ச்சியும், அழுகையுமாக காட்சி நமக்குக் கடத்தப்படுகிறது.
கம்பனை அறிவதில் கவிஞர்களுக்குத்தான் அதிகப் பங்கிருக்கிறது. அவன் தேறும் சொல், அந்த நடை, காட்சிப்படுத்தும் பாங்கு, உவமைகள், சொல்லிக்கொண்டே போகலாம். தெரியாமலா சொன்னார் பாரதி ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்…’ கவிஞர் தமிழ்க் கவிதைகளையும், சீன, ஜப்பானிய, ஆங்கிலேய அமெரிக்கக் கவிதைகளையும் ஆழ்ந்து படித்திருக்கிறார்.
முதலில், சி.மணி வெளியிட்ட ‘நடை’ இதழில் தான் இவரது கவிதைகள் வந்திருக்கின்றன. ‘எழுத்து’ இதழின் செல்லப்பாவிற்கு இவரது கவிதைகள் ஏற்புடையதாக இல்லை. அன்றாடம் பார்க்கும் ஒரு காட்சி இவரது ‘சைக்கிள் கமலத்தில்’ சித்திரமாக எழும்பி ஆழ்ந்த உட்பொருளை நோக்கி வாசகனைச் செலுத்துகிறது. என்னதான், மாடுகள், குழந்தைகளை சைக்கிள் முட்டாவிட்டாலும், கவிஞர் மேல் ஒருமுறை மோதி விடுகிறது- ஆம், நம் விதியின் மோதல், அல்லது விதியுடனான நம் மோதல் தொடரத் தானே செய்கிறது.
சமூக அக்கறை, தத்துவச் சிந்தனை இவை கருப்பொருளானாலும், எள்ளலை விட்டு விடுவதில்லை இவர். ‘ஞாயிறு தோறும் தலைமறைவாகும் வேலை எனும் பூதம்’;நான் பணி புரிந்த காலத்தில், வருட முடிவில் அடுத்த வருடத்திற்கான விடுமுறை அட்டவணை வரும்; அதை ஆசையாசையாகப் பார்த்த அந்த தினங்களை நினைத்துக் கொண்டேன். நம் வாழ்க்கையில் தென்படும் எளிதான அவலத்தை அங்கத உணர்வோடு இரசித்தபடியே எடுத்துச் சொல்கிறார்.
‘கசடதபற இதழில்’ கவலையையும் தீர்வையும் சொல்லும் விதமாக ஒரு கவிதை ‘மோசமின்னும் போவதற்குள்ளே வித்தைக்காரர் வர வேண்டும். வித்தை தெரிந்த எழுத்துக் கலைஞர் விலகி நிற்கக்கூடாது.’. இன்னொரு வருத்தமும், அங்கதமும் மிக்க கவிதை’ அரசியலாளர் ஒருவர் ‘வாழ்க நீ எம்மான்’ என்ற காந்தியைப் பற்றிய பாரதியின் கவிதையை ‘ஜன்னலின் வழியே போட்டார், தெருவிலே பொறுக்கிக் கொள்ள’. வாக்குறுதிகள் அளித்து ஆள வருவோர் தம் சொற்களை நிறைவேற்றாமல் இருக்கும் அவலத்தை ‘வயதானோர்க்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தைச் சார்ந்த்தாய்’ கருதி அம்மா பொய்கள் சொல்வதை நிறுத்திவிட்டாளாம். இதைப்போலவே ஓட்டை அனைவருக்கும் சரிசமமாய் வழங்கியுள்ள அற்புதப் பொருளுக்கு மும்முறை வாழ்த்து சொல்கிறார்.
இன்னொரு சிறந்த கவிதை- கிட்டத்தட்ட இருத்தலியல் போராட்டங்களைப் பேசுகிறது- பூமியிலிருந்து சூரியன் வரை அடுக்கிக் கொண்டே போகலாம் உலகில் உள்ள மூலைகளை. அழுக்கானாலும், சிறிதென்றாலும், பயனில்லை என்றாலும் ஒரு மூலை வேண்டும். கோணம் வரைந்து போட்டிக்கு முந்தி மூலையைப் பிடித்து வசமாக்கிக் கொண்டு நிற்கிறார்கள்.’
‘பூமியிலிருந்து சூரியன் வரைக்கும் அடுக்கிக் கொண்டு போகலாம்.
உலகில் உள்ள மூலைகள் எல்லாம் கணக்கெடுத்தால்’
ஆம், ஒரு சார்போ, சாய்வோ, இருப்பதின் பாதுகாப்போ வேண்டாதவர் யாருளர்?
‘நிர்மலம்’ ஒரு தளத்திலிருந்து வேறோர் தளத்திற்குப் பயணிக்கும் மயக்கமான கவிதை. அதைப் போலவே ‘தெரு’ கவிதை தன்னிரக்கத்தைப் பேசுகிறது. நாம் வாழும் தெரு, நமக்கு வயதான பிறகு சுருங்கி விடுகிறது. நாம் வளரவளர அதன் இடம் குறைந்து வீடும், உறவும் அதை இருட்டடிப்புச் செய்து விடுகின்றன. கால்கள் நடக்கும் தெரு மனதில் நடக்கவில்லை இப்போது.
கட்டுரைத் தொகுப்பிலும் இவர் தன் கருத்தச் சொல்லத் தயங்கவில்லை. அதில் சொல்கிறார்: “கவிஞர்கள் கவிதையை சிருட்டிக்காமல், தன்னைப் பற்றிய அறிக்கையின் தோரணமாகக் கவிதையை மாற்றுவது உசிதமாகப் படவில்லை.” கவிஞர் வகைமை என்று இவர் குறிப்பிடுவது சிறப்பான தகவல். நூல் ஆசிரியர் எழுதுகிறார்: ‘மரபு ரீதியான ஆழ்ந்த அறிவும், புதிய நோக்கும், வெளிப்பாட்டுத் திறனும், சுருக்கமாகச் சொல்லி புரிய வைக்கும் தன்மையும் கொண்டவை இவர் கட்டுரைகள்’
‘பன்முகம்’ சிற்றேட்டில் இவரளித்துள்ள பேட்டி சுவையும், காரமும் நிரம்பியிருக்கிறது. பாரதி முயலவில்லையெனில் அவர் வழியைத் தொடர்ந்தோர் இன்னமும் பின் தள்ளிப் போயிருப்பார்கள் என்று கவிஞர் நினைக்கவில்லை போலும்.

திவாஹர் ரங்கனாதன், கவிஞரின் புதல்வர், எழுதியுள்ள கட்டுரை, கவிதைகள், பின்னணிகள் என்று சுவையாக இருக்கிறது.
இதைப்போலவே டிசம்பர் 1998-ல் நவீன விருட்சம் இதழில் வெளி வந்துள்ள கவிஞரின் பேட்டி அவரது எண்ணவோட்டங்களை, அணுகுமுறைகளை ஆழமாகப் படம்பிடித்துள்ளது. அவர் சொல்கிறார்:’ ஒரு கவிதைக்குப் பொருள் வாசகன் கொண்டு வருவது. வாசகனுக்குப் பலவித அனுபவங்கள் இருக்கு. கவிஞன் ஒரு சட்டத்தைக் கொடுக்கிறான்.’
கவிஞரின் கையெழுத்தைப் பார்த்த போது பேனாவின் மீதான அவரது ஈர்ப்பின் காரணம் புரிந்தது. நடை, கவனம், ழ, கசடதபற, விருட்சம் ஆகிய சிற்றிதழ்களில் பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறார். க நா சுவை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு வெளிப்படுத்தியிருக்கிறார்.
எண்ணத்தின் நோக்கத்தை சொற்களைக் கொண்டு இயக்கி நிறைவேற்றும் போது கவிதை கலையாகிறது என்று சொன்ன இந்தக் கவிஞர் அதைத்தான் செய்திருக்கிறார்.
வெற்றுப் புகழ்ச்சிகளைத் தவிர்த்து எதைச் சொல்ல வேண்டுமோ அதை அருமையாகச் சொன்ன முறையில் இந்த நூலை நாம் படிப்பது நமக்கு நன்மையைத்தரும்.
