இரவின் துயில்/கு. மா. பா. திருநாவுக்கரசு

சாரல் மழைத்தூறும்
சியாட்டில் பசும் நகரில்,
தூவும் பனிப் பொழிவில் – இரவின்
துயில் களைந்து எழில் கண்டேன்!

சீனியைச் சிறு பொடியாக்கி
வானிருந்துப் பொழிந்தவர் யார்?
வெண்ணிறப் பனித்துகளால்
விண்ணெழுதும் கோலம் காண்!

துள்ளித் திரிந்து வந்த
பெருத்த வால் அணில்கள் இன்றி,
வெள்ளிநரைக் கூந்தலுடன்
பச்சைநிறப் புல்வெளிகள்!

வட்டமடிக்கும் சிட்டுகளின்
வாய் முத்தம் கிட்டாமல்,
மொட்டைத் தலையோடு
முடிமழித்த பெருமரங்கள்!

பஞ்சுநுரைப் பந்துருட்டி
சின்னஞ் சிறுவர் சிலர்
சிந்தாமல் கைப்பிடித்து
பந்தாடி மகிழ்கின்றார்!

துடுக்குக் கன்னியர்கள்
நடுக்கமின்றி வெண்மழையில்,
சரிவு நிலப்பரப்பில்
சறுக்கு மரம் ஆடுகின்றார்!

முன்றிலாடும் குழந்தைகளின்
முகம் காட்டும் புன்னகைக்கு,
இலையுதிர்த்த மரக்கிளைகள்
ஏக்கமுடன் கரம் நீட்டும்!

இரவின் துயில் களைந்து,
என்னைப்போல் விழித்திருந்து
மரங்கள் தவமிருக்கும்!
இளவேனில் வரும்நாளில்
மலர்வனமாய் பூ பூக்கும்!
மழைச்சாரல் வரவேற்கும்!


  • நாள்: 3/1/2022

4 Comments on “இரவின் துயில்/கு. மா. பா. திருநாவுக்கரசு”

  1. “சீனியைச் சிறு பொடியாக்கி
    வானிருந்துப் பொழிந்தவர் யார்?”

    – என்ற வரிகளை மிகவும் ரசித்தேன்.
    சியாட்டில் நகரில் இப்போது இருக்கிறீர்களா?

    1. ஆம் ஐயா. நாங்கள் தற்போது சின்சினாட்டியில், இரண்டாம் மகள் வீட்டிலுள்ளோம். தங்கள் கருத்துப் பதிவுக்கு மிக்க நன்றி. ஊக்கமும் உற்சாகமும் பெறுகின்றேன்.

  2. ‘வெள்ளி நரைக் கூந்தலுடன் பச்சை நிற புல் வெளிகள்……முடி மழித்து பெருமரங்கள்…’
    ஒரு அமெரிக்க பனிக் காலத்தை அழகாகவம் நுணுக்கமாக வரும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.

Comments are closed.