சொற்கள்/அதங்கோடு அனிஷ்குமார்

சொற்கள் மீதான
எனது மயக்கம்
தெளியவில்லை.

நீங்கள்
வாஞ்சையுடன் உச்சரிக்கும்
ஒவ்வொரு சொல்லும்
என்னை
ஆட்கொண்டு விடுகிறது.

அகராதிகளின் கூண்டுகளிலிருந்து
தன்னை விடுவித்து
ஒரு கவிதையில்
வந்தமரும் சொல்
உன்மத்தம்
கொள்ள வைக்கிறது.

நேற்றின் சொற்கள்
காற்றில் கரைந்ததாய்
கற்பனை
செய்ய முடியாத படி
இன்றின் பக்கங்களில்
அவை பிரசன்னமாகின்றன.

நேற்றிலிருந்து இன்று
இன்றிலிருந்து நாளை என
சொற்கள் தங்களை
நகர்த்திக்
கொண்டிருக்கும் போது
நாம் அறியாமலேயே
நம்மை
நாம் அடகு வைக்கிறோம்
சொற்களிடத்தில்.

சொற்களற்ற கணமொன்றைக்
கண்டடைய
நேரும்போது தான்
சொற்கள் மீதான லயிப்பு
ஏக்கமாய் பெருகுகிறது.

One Comment on “சொற்கள்/அதங்கோடு அனிஷ்குமார்”

Comments are closed.