கடவுளை முத்தமிடுவது/தங்கேஸ்

வாழ்வை கொண்டாடு என்றன
சலசலத்த கிளைகள்
நான் ஓஷோவிற்கு
ஒரு ஆழ்ந்த முத்தமிட்டேன்
உதிர்ந்த சருகுகளும் தங்கள்
கடைசி நடனத்தை சுழன்றாடியபடி
ஆடி முடித்தன

என் கோப்பையில் நுரைத்துப் பொங்கும் மதுவின் குளுமைக்கு
நிலவை எடுத்து பனித்துண்டமாக
மிதக்க விட்டேன்
ஒரு மிடறு பின் அந்தியை
உறிஞ்சிக்குடித்தேன்
பின் மறு மிடறு

நள்ளிரவில் இரகசியமாக
நதி தேடி வந்தது
அள்ளிக்கொள்ள நீட்டிய கரங்களில்
தங்கநிற மீனொன்று
துள்ளி விழுந்தது
ஒரு கணத்திற்கும் குறைவாக
என் உள்ளங் கையில் நெளிந்த
அந்த உயிர் சூட்டின் எடை
பூமியை விட பல மடங்கு
அதிகம்

தரிசனத்தின் வெளியில்
என் உடலெங்கும் நதிகள்
கிளைத்துப் பாய
என் அழுக்குகளை தின்றபடி
உள்ளே எண்ணிலா மீன்கள்
நீந்திக் களித்தன

நிலவு என் தொப்புள் கொடியில்
பூத்து கிடந்தது
அசைந்தாடிய படியே வந்த பச்சைக்கிளிகள்
காடுகளை முதுகில்
சுமந்து வந்தன
இப்போது வனங்கள் எனக்குள்
முளைக்கத் தொடங்கின

நுனிக்கொழுந்தைப் போல
பின்னிரவில் தவழும்
அதிகாலையை எடுத்து
மார்போடு அணைத்துக்கொண்டேன்
காம்புகள் துளிர்த்தன
சிறு குழந்தையாக மாறிய அது
” நான் கடவுள் ” என்றது
” சத்தம் போடாதேடா குட்டிப்பயலே “
என்று இன்னும்
மார்போடு இறுக்கி கொண்டேன்

One Comment on “கடவுளை முத்தமிடுவது/தங்கேஸ்”

Comments are closed.