
காலாதீத இடைவெளியில் நிகழ்ந்துவிட்ட
அம்மாவின் மரணத்திற்குப் பின்னால்
எழுந்துவிட்டிருந்தது ஓர் குற்றவுணர்வு.
மரணத்திற்கு முன்னாலான
அவளது வயோதிக இருப்பு குறித்த
நீண்ட உரையாடல்கள்
பெண்பிள்ளைகளுடனான அலை பேச்சுகளையும்
அலைபேசியில் நாடகம் பார்ப்பதையும்
தவிர்ப்பதற்கான அறிவுரைகள்
இறந்துபோன அப்பாவின் ஆடைகளை
அகற்றுவதற்கான பிள்ளைகளின் முடிவுகள்
அப்பாவின் அடையாளமாய் அம்மாவிடம்
எஞ்சியிருந்த தாலிச்சங்கிலியை அழிப்பதான
ஜோசியனின் அறிவுரைகள்
மருத்துவச் செலவின சர்ச்சைகள்
அப்பாவின் இரண்டாமாண்டு நினைவுநாளன்று
ரத்த உறவுகளுக்குள் நிகழ்ந்த
சப்பில்லாத சண்டைகள்
அகங்கார இறுமாப்புகள்
குற்றவுணர்வின் வீரியத்தை அதிகப்படுத்தினாலும்
காலச் சுழற்சியில் மெள்ள மெள்ளத் தேய்ந்து
ஆதங்கமாக உருமாறிவிட்டிருந்தன
உணர்வின் முனைகள்
வெறுமையின் வெற்றிடத்தைத் தாண்டி
விடுதலை உணர்வின் கொண்டாட்டமென
நகர்கிற வாழ்வின் நிறைவில்
அம்மாவின் மரணம்
எல்லாப் பிழைகளையும் மூடிமறைத்துவிட்டது.

மனத்தில் நிற்கும் கவிதை