நினைவுகூர்தல்

பெருந்தேவி

என் சிறுவயது நினைவுகளில் ஒன்று என் அம்மாவுடன் செஸ் விளையாடுதல். அம்மாதான் எப்போதும் ஜெயிப்பாள். அம்மாவுடன் சீட்டும் விளையாடியிருக்கிறேன். ஆட்டத்தின் பெயர் நினைவில்லை. ஒன்று, இரண்டு, மூன்று, ஜாக்கி, குவீன், கிங் என்று வரிசையாக அடுக்கும் ஒரு ஆட்டம். என் அம்மாவை நினைக்கும்போது ஜானி படமும் நினைவில் வரும். அதுதான் நானும் என் அம்மாவும் கடைசியாகச் சேர்ந்து பார்த்த படம். நான் பள்ளியில் படிக்கும்போது  பார்த்தோம். ஒரே வாரத்தில் மூன்று முறை. “எத்தனை அழகா இருக்கா ஸ்ரீதேவி!” வியப்பாள் அம்மா. அவளுக்கு ரஜினியைப் பிடிக்கும், எனக்கென்னவோ அவள் ரஜினிக்காகத்தான் பார்த்திருப்பாள் என்று தோன்றும். அம்மாவிடம் அதை எப்படி கேட்பது என்று கேட்டதில்லை. ஒரு பௌர்ணமி இரவு அன்று  என் அம்மா வெகுநேரம் சாப்பாடு எடுத்துவைக்கவில்லை. முற்றத்தில் அமர்ந்திருந்த அவளிடம் “பசிக்குதுமா, வா” என்றேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்து “இந்த நெலா ஒரு நாள் ஒன்னப் பிடிச்சிட்டுப் போயிடும்” என்று உறுமினாள். அவள் கண்கள் இருந்த இடத்தில் கண்களே இல்லை. பயந்துபோய் அங்கிருந்து வந்துவிட்டேன்.

அன்று இரவு அப்பா வந்தவுடன் அவரிடம் நடந்ததைப் பற்றிச் சொன்னேன். “அவ ஒரு பைத்தியக்காரி, நீ பயப்படாதே” என்றார் அப்பா. “பிள்ளய இப்டியா ஒருத்தி பயமுறுத்துவ்?” என்று அம்மாவிடம் கோபித்துக்கொண்டார். அதன்பின் கொஞ்ச நேரம் இருவரும் கத்திப் பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியாது.

அதன்பின் அம்மா இறந்தவரை அப்படி இன்னொரு தரம் சொல்லவில்லை. அவள் விரும்பியதைப் போல எனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது. அவள் ஆசைப்பட்டதைப் போல சிரமமில்லாத வாழ்க்கை அமைந்துவிட்டது.  அதேபோல பௌர்ணமியன்று இரவு வெளியே செல்லும்போது  மிகவும் கவனமாக இருக்கிறேன்.   தனியாகச் சென்றாலோ வானத்தைப் பார்த்தாலோ நிலா என்னைத் தூக்கிக்கொண்டுபோய்விடும் என்று எனக்குத் தெரியும்.  ”இந்த நெலா” என்று அம்மா கூறியதில் “இந்த”வை பௌர்ணமி நிலா என்று  பொருள்கொண்டிருக்கிறேன். அது அபாயத்தை ஒரு வரையறைக்குள் வைத்திருக்கிறது. ஒரு அபாயத்தை நாம் புரிந்துகொள்ளும் அளவுக்கே பதற்றம். அதனால் மாதத்தில் ஒரு நாள் மட்டும் பதற்றமடைகிறேன். 

அந்தப் பௌர்ணமி இரவு என் அம்மாவின் கண்கள் இருந்த இடத்தில் அவை இல்லை என்று கூறினேன். அவை இருந்த இடத்தில் கோரமாக வளர்ந்த நகங்களோடு இரண்டு கைகள் நீண்டிருந்தன. அம்மாவின் முகம் அப்போது வட்டமாக வெள்ளையாக இருந்தது. 

One Comment on “நினைவுகூர்தல்”

Comments are closed.