
தேவாரம் – அவ்வினைக்கு இவ்வினை
எல்லாம் வினைப் பயன் என்று நாம் நினைக்கிறோம். நல்லதோ, கெட்டதோ எல்லாம்
விதிப்படித்தான் நடக்கும். நல்லது செய்து இருந்தால் நல்லது வரும். அல்லது
செய்து இருந்தால் துன்பம் வரும். இதில் நம் கையில் என்ன இருக்கிறது.
விதியை நம்மால் மீற முடியுமா?
ஊழிற் பெருந்தக்க யாவுள என்பார் வள்ளுவர்.
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை, மைந்த விதியின் பிழை என்பார் கம்பர்.
அப்படி என்றால் நம் கையில் ஒன்றும் இல்லையா. நாம் சும்மா இருக்க
வேண்டியது தானா. ஒரு முயற்சியும் செய்ய வேண்டாமா?
திருஞானசம்பந்தர் சொல்கிறார். “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. வினையை
மாற்றலாம்” என்று கூறுவதோடு நில்லாமல், அதற்கு வழியும் காட்டுகிறார்.
“முன்பு செய்த வினைகளுக்கு ஏற்ப இப்போது நமக்கு இன்ப துன்பமாகிய வினைகள்
வருகிறது என்று சொல்லிக் கொண்டு சும்மா இருக்கிறீர்களே. இது உங்களுக்கு
ஒரு ஊனம் இல்லையா. இறைவனை வழிபடுங்கள். அப்படி செய்தால் நாம் முன் செய்த
வினைகள் நம்மை தீண்டாது. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை” என்று
சத்தியமிட்டு கூறுகிறார்.
பாடல்
அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!
பொருள்
அவ்வினைக்கு = முன்பு செய்த வினைகளுக்கு
இவ்வினை ஆம் = இப்போது நடக்கும் வினைகள் (இன்ப துன்பங்கள்)
என்று சொல்லும் அஃது அறிவீர்! = என்று சொல்லக் கேட்டு இருக்கிறீர்கள்
உய்வினை = இதில் இருந்து தப்பிக்கும் வழியினை
நாடாது இருப்பதும் = கண்டு பிடிக்காமல் இருப்பதும்
உம்தமக்கு = உங்களுக்கு
ஊனம் அன்றே? = ஒரு குறை இல்லையா ?
கைவினை செய்து = கைகளால் தொழுது
எம்பிரான் = எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன்
கழல் போற்றுதும் = திருவடிகளை போற்றுங்கள்
நாம் அடியோம் = நாம் இறை அடியவர்கள்
செய்வினை = செய்த வினை
வந்து = நம்மிடம் வந்து
எமைத் தீண்டப்பெறா = நம்மை தீண்டாது
திருநீலகண்டம்.! = திருநீலகண்டத்தின் மேல் ஆணை
திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டு ஞானம் பெற்றவர். இறைவன் மேல் ஆணையிட்டு
சொல்கிறார்.
பழைய வினைகள் தீர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று.
.
